மாண்புமிக்க நீதிபதிகளே!
மூத்த வழக்கறிஞர்கள் என்கிற முறையிலும், இந்தியாவின் குடிமக்கள் என்கிற முறையிலும், மிகுந்த கவலையோடும், மன வருத்ததோடும் இதை எழுதுகிறோம்.
இந்த நாட்டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும், பாதுகாக்கும் மிக முக்கியமான, அரசமைப்புச் சட்டக் கடமை மாண்புமிகு உச்சநீதிமன்றத்துக்கு உண்டு. அதிலும் குறிப்பாக, சாதாரண காலங்களில் கூட, தங்களது குறைந்தபட்ச வருமானத்தைக் கொண்டு, கௌரவத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்கு சிரமப்படுகிற, வருமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களைப் பாதுகாப்பது மிகமிக முக்கியமாகும்.
தற்போதிருக்கும் சூழ்நிலையைப் போன்று, கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் மத்திய அரசின், ஊரடங்கு ஆணையால் ஒட்டுமொத்த தேசமும் அதன் பொருளாதாரமும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புக் கடமையும், பங்கும் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
75 சதவிகிதத்துக்கும் அதிகமான, இந்தியாவின் உழைக்கும் மக்கள், தங்களுடைய வாழ்க்கைக்கான தேவையை முறைசாரா மற்றும் அணிதிரட்டப்படாத தொழில்களின் மூலமே பெற்று வருகின்றனர். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பொருளாதார நடவடிக்கைகள் திடீரென்று நிறுத்தப்பட்டதால், அவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும், வாழ்வதற்கான வழிகளையும் இழந்து நிற்கின்றனர்.
ஊரடங்கு திடீரென மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏழை மக்களின் துயரங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. குறிப்பாகக் கோடிக்கணக்கான இடம்பெயர்த் தொழிலாளர்கள் பெருநகரங்களிலேயே தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான கூலிகளை சம்பாதித்து வந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை தனிமனித இடைவெளி என்பது கற்பனையில் மட்டும் காணக்கூடிய அசாத்தியம். இந்த ஏழை மனிதர்கள், நெருக்கடி மிகுந்த, சிறு அறைகளுக்குள்ளும், நடைபாதைகளிலும் தங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். அவர்களுக்கு வேலையில்லை. வருமானம் இல்லை. நிரந்தரமாக உணவுக்கான வாய்ப்பு இல்லை.
எனவே, அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்கள் நோக்கி கால்நடையாகவே பயணப்பட ஆரம்பித்தார்கள். அவர்களில் பலருக்கு சொந்த மாநிலம், ஆயிரக் கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சிறு குழந்தைகளோடும், குடும்ப உறுப்பினர்களோடும், வயது முதிர்ந்த பெற்றோர்களோடும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள தங்களுடைய சொந்த மண்ணுக்கு நடக்க ஆரம்பித்தார்கள்.
உடனடியாக மத்திய அரசால் திணிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலமாகவோ, பேருந்துகள் மூலமாகப் போவதில் இருந்து தடுக்கப்பட்டார்கள். அந்த நிலையிலும் கூட பல லட்சக்கணக்கான ஏழை, இடம்பெயர் தொழிலாளர்கள் பசியோடும், பயத்தோடும் நடக்க ஆரம்பித்தார்கள். அரசாங்கம் ஆரம்பத்தில் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தடுப்பதற்கு முயற்சித்தது.
இடம்பெயர்த் தொழிலாளர்களின் பாடுகள் குறித்து, ஏ.ஏ. ஸ்ரீவத்சவா என்பவர் பொதுநல வழக்கொன்றை மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் மத்திய அரசின் சார்பாக, அதன் வழக்கறிஞர் மார்ச் 29 ஆம் தேதி மத்திய அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்த சுற்றறிக்கையில் இடம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்வதற்கும், பயணம் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டதோடு, அவர்களையெல்லாம் நிவாரண வீடுகளுக்கும் நிவாரண முகாம்களுக்கும் அனுப்ப வேண்டும்.
மார்ச் 31, 2020 ஆம் தேதியிட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, சுற்றறிக்கைப்படி,” ஒரு இடம்பெயர் தொழிலாளர் கூட அவரது சொந்த ஊருக்கோ, கிராமத்துக்கோ அடைய வேண்டும் என முயற்சித்து சாலைகளில் நடக்கவில்லை.” மாண்புமிகு உச்சநீதிமன்றம் 31.03.2020 தேதியிட்ட ஆணையின் வாயிலாக, கொரோனாவைத் தடுப்பதற்காக இந்திய ஒன்றியம் எடுத்த நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
நகரங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் இடப்பெயர்வு, ஊரடங்கு மூன்று மாதங்களுக்கு மேல் தொடரும் என்ற வதந்திகளால் தூண்டப்பட்டது என்று வேறு சுட்டிக்காட்டியது. அப்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு சில நூறுகளில் இருந்தது. நீதிமன்றம் தலையிடத் தவறியதன் விளைவால், லட்சக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியவில்லை.
நெருக்கடியான சிறிய குடியிருப்புகளில், அல்லது அறைகளில் அல்லது நடைபாதைகளில், எந்தவித வேலையும், வாழ்வாதாரமும் இன்றி, உணவுக்கான நிரந்தர ஆதாரம் கூட இன்றி, இருப்பதற்கு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள். உண்மையில் நெருக்கடியான இந்தக் குடியிருப்புகளில் அவர்களை அடைபட்டுக் கிடக்கச் செய்தது, இத்தகைய ஏழைத் தொழிலாளர்கள் கோவிட் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை அதிகப்படுத்தியது.
மேலும், அரசின் அறிக்கை உண்மைக்குப் புறம்பாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பல்வேறு ஆய்வறிக்கைகள், பல்வேறு மாநிலங்களில் 90% இடம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசின் ரேஷன் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தன.
மார்ச் மாதத்தில் தலையிடத் தவறியதன் விளைவாக, ஏறத்தாழ 6 வாரங்களாக எந்த வித வேலையும், கூலியும் இன்றி, கிட்டத்தட்ட சிறையிலடைக்கப்பட்டதால் வெறுத்துப் போயிருந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள், வீட்டுக்குத் திரும்பினால் சுமாராக இருப்போம் என்று முடிவெடுத்தார்கள். மே தொடக்கத்தில் பெருந்திரளாக இடம்பெயரத் தொடங்கினார்கள். இந்தக் காலத்தில் நாட்டின் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 50000ஐ கடந்துவிட்டது. இந்தத் தொழிலாளர்களில் கணிசமானோர் நோய்த் தொற்றையும் பெற்றுவிட்டார்கள்.
இந்த நிலையில் கூட, அவர்கள் கால்நடையாகச் செல்வதையும்/ வாகனங்களில் கிளம்புவதையும் அரசு தொடக்கத்தில் தடுக்கவே முயன்றது. பிறகு, பேருந்து, ரயில்கள் மூலம் அவர்களை அனுப்புவதற்கு ஒத்துக் கொண்டது.
எனினும், கடந்த 30-40 தினங்களாக சிறிய வீடுகளில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களில் வீடுகளுக்கு திரும்ப விரும்புவோருக்கு மாநிலங்களால் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தாங்களே செலவு செய்து மருத்துவச் சான்று பெற்றுவர வேண்டும் என்பதைப் போன்ற கடுமையான நிபந்தனைகள் அவர்களின் மீது விதிக்கப்பட்டுள்ளன.
சாலை வழியாக போக்குவரத்து ஏற்பாடு செய்திருக்கும்போது அவர்கள், பெரும்பாலும் செல்ல விரும்புகிற மாநிலத்தின் எல்லையில் விடப்படுகிறார்கள். அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடு எதுவும் செய்து தரப்படுவதில்லை. போக்குவரத்து வசதி இல்லை. கிட்டத்தட்ட ஒரே குடியுரிமை கொண்ட ஒரு நாடாக இல்லாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்படியான சூழலில் வாழ்வதற்கான உரிமையும், விடுதலை, மற்றும் பயணிப்பதற்கான சுதந்திரம் ஆகியவை துன்பத்திலிருக்கும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு பொருளற்றதாக ஆக்கபட்டுள்ளன. இந்த ஏழை மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு உதவி, உணவு மற்றும் தங்குமிட உதவிகளை குடிமைச் சமூகம் தானே முன்வந்து செய்கிறது.
இருந்தாலும், லட்சக்கணக்கானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லும் விருப்பம் மற்றும் தொலைவு குறித்து குடிமைச் சமூகத்தால் உதவி செய்வது என்பது சாத்தியமில்லை. இப்படியான சூழல், ஊரடங்கை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் நிர்வாக உத்தரவுகளால் ஏற்படுத்தப்பட்டதாகும். பொதுப் போக்குவரத்தும், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே முதல் ஊரடங்கு காலத்திலிருந்தே லட்சக்கணக்கான இந்த மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் கடமை இந்திய அரசு, மாநில அரசுகளிடம்தான் உள்ளது. எப்படியிருந்தாலும், ஊரடங்கு 1 மற்றும் 2 காலகட்டத்தில் லட்சக்கணக்கான ஏழைகள் வாழ்வில் கொடூரமான துயரத்தை தீர்க்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் இடம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் வீடுகளுக்கு செலவில்லாமல் பயணிக்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை 2020 மே 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
மேற்சொன்ன வழக்கின் தகுதியை ஆராயாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டதுடன் மாநில அரசுகள் இந்தப் பிரச்சனையை பார்த்துக் கொள்ளும்படி விடப்பட்டது. அரசின் தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்த வாதமும், மனித நெருக்கடியின் மீதான நீதிமன்றத்தின் வெளிப்படையான அலட்சியமும் உடனடியாக சரி செய்யப்படாவிட்டால், நீதிமன்றம் அதன் அரசமைப்புக் கடமையை தவறியதாகும், லட்சக்கணக்கான ஏழைகளை, பசியிலுள்ள இடம்பெயர் தொழிலாளர்களையும் கைவிட்டதாக ஆகிவிடும் என்பதை மரியாதையுடன் முன்வைக்கிறோம்.
உண்மையில், தற்போது இடம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியானது, நமது அரசாங்கம் தனது தன்னிச்சையான உத்தரவுகளை திணிப்பதன் மூலம் அரசமைப்பின் வாக்குறுதிகளான சமத்துவம், சுதந்திரம், வாழ்வுரிமை மற்றும் சுயமரியாதை ஆகியவைகளை முழுமையாக புறக்கணித்திருப்பதைக் காட்டுகின்றன. மாண்புமிகு உச்சநீதிமன்றம், லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று அரசாங்கத்தை பொறுப்பாக்க முன்வராதபோது, அது மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் காவலன் என்ற நிலையையும், அரசமைப்புக் கடமையையையும் அழிவுக்கு உள்ளாக்குகிறது.
கொத்தடிமை முறை ஒழிப்பு, சிறைச்சாலை சீர்திருத்தங்கள், சூழலியல் இணக்கப் பார்வை, உணவுக்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் இந்திய அரசமைப்பு சட்டயியலை மாற்றியமைத்த பெருமைமிகு பாரம்பரியத்தை பொது நல வழக்குகளின் மூலம் ஏற்படுத்தியது மாண்புமிகு உச்சநீதிமன்றமாகும். இந்தப் பொது நல வழக்குகள் ஒவ்வொன்றும் சட்டத்திலும், கொள்கைகளிலும் சாதகமான நீண்டகால மாற்றங்களை லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளன. மாண்புமிகு உச்சநீதிமன்றம் அரசாங்கத்திற்கு காட்டும் மரியாதையும், மேற்சொன்ன சூழலில் தலையீடு செய்ய மறுத்திருப்பது அல்லது தனது கையறு நிலையை காட்டியிருப்பது நம் நாட்டின் அரசமைப்புக் கட்டமைப்பின் மீது பெரும் இருள் படியச் செய்துள்ளது.
கொரோனா நோய்க் காலத்தில் அரசு விதித்திருக்கும் இந்த ஊரடங்குக்கு நடுவில் மாண்புமிகு நீதிமன்றமானது கவனத்தை திருப்பிக் கொள்வதானது, லட்சக்கணக்கான இந்திய குடிமக்களை, குறிப்பாக ஏழை, ஒடுக்கப்பட்ட, வறுமையில் வாடுவோரை அரசு அதிகாரிகளின் கருணையை நம்பியிருக்குமாறு விட்டுவிடுவதாகும். இது ஏ.டி.எம் ஜபல்பூர் குறிப்பிட்ட விதத்தில் காவலில் எடுக்கப்பட்ட ஒருவரை அரசு அதிகாரிகளின் கருணைக்கு விட்டு, ஏதாவது செய்யப்படும் என்ற நம்பிக்கையோடு விடுவதான “Diamond bright Diamond hard” என்ற நிலைமைக்கு கொண்டு சேர்த்துவிடும்.
பெருந்தொற்றை எதிர்கொள்கிறோம் என்ற பெயரில் குடிமக்களின் குறிப்பாக ஏழைகளின் உரிமைகள் அரசு அதிகாரிகளால் தீங்களிக்கும் விதத்தில் மீறப்படுகின்றன. லட்சக்கணக்கானவர்கள் கட்டாயமாக சிறிய வீடுகளிலோ அல்லது சேரிகளிலோ பல வாரங்கள் தங்கியிருக்கும்படி செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை வாழ்வாதாரமும் இல்லை. வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது, சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வாதங்களுக்கு மாண்புமிகு உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் மரியாதையும், “கொள்கை முடிவுகள் சார்ந்த பிரச்சனை” அல்லது “கண்காணிக்க வாய்ப்பில்லை” என்ற பெயரில் தனது கையறு நிலையை வெளிப்படுத்தியிருக்கிறது.
பெரும் மனிதத் துயரம் இக்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது, லட்சக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்கள் சாலையில், ஆயிரக்கணக்கான கி.மீ தூரம் நடந்து வீடுகளை நோக்கிப் பயணிக்கிறார்கள். லட்சக்கணக்கான நமது ஏழை குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் சமயத்தில், அரசு நிர்வாகத்தின் பொறுப்பான நடவடிக்கையை கோரும் சமயமாகும்.
சட்டக் கண்ணோட்டத்தில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அவசர கவனம் இதில் தேவைப்படுகிறது. இடம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனைககள் ‘கொள்கைப் பிரச்சனைகள்’ கிடையாது. அவை அரசமைப்புச் சட்டப் பிரச்சனைகளைக் கிளப்பக் கூடியவை. இப்படியொரு சூழலை உருவாக்கியிருக்கும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது கடுமையான பரிசீலனையை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன.
அரசமைப்புச் சட்ட பிரிவு 14, 19 (1) மற்றும் 21 ஆகியவை உறுதி செய்கிற அடிப்படையில், லட்சக்கணக்கான ஏழை இடம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வுரிமை, சுதந்திரம், பாதுகாப்புடனும், சுய மரியாதையுடனும் நாடு முழுவதும் தடையின்றி பயணித்தல் மற்றும் வீடு திரும்புதல் ஆகிய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதுதான் மையமான பிரச்சனைகள் ஆகும்.
நீதிமன்றம் அதன் புனிதமான அரசியலமைப்புப் பாத்திரத்தையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டுமென்றால், அது ஆட்சியாளர்களின் பொறுப்பை எடுத்துக்கூற வேண்டும். மேலும் அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு உச்சநீதிமன்றமானது தனது உத்தரவுகள் பின்பற்றப்படுகிறதா என உறுதி செய்வதற்கு மாண்டமஸின் அதிகார வரம்பை உருவாக்கியுள்ளது. அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு மதிப்புக் கொடுத்து, அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு (தவரான வாதங்களுக்கு) ஏற்புக் கூறியிருப்பது இந்த விசயத்தில் நீதிமன்றத்தின் கைவிடப்பட்ட நிலையை காட்டுகிறது.
அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்புக்குள்ளாக்காத இந்த நிலை நீதிமன்றத்தில் அரசமைப்பு நிலையையும் கடமையையும் பாதிக்கிறது. நீதியை முழுமையாக கிட்டச் செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளும் அதிகாரம் அரசியலமைப்பின் 142வது பிரிவின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு தரப்பட்டுள்ளது. கையறு நிலையைக் காட்டுவதானது நீதிமன்றத்தின் ‘நீதியே வெல்லும்’ என்ற நோக்கத்திற்கு நீதி வழங்குவதாகாது.
கெடுவாய்ப்புப் பெற்ற லட்சக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், அரசின் நிர்வாக நடவடிக்கைகளை கவனத்துடன் பரிசீலிப்பதிலும், நீதிமன்றத்திற்கு ஏற்பட்டிருக்கும் தோல்வியானது, நமது குடிமக்களின் ஏழ்மையிலும் ஏழ்மையான பகுதியை, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், கொரோனா நோய்தொற்றும் அபாயம் அதிகம் இருக்கும் நிலைமையில், பாதுகாப்பில்லாத, ஒழுங்கான உணவு வழங்கப்படாத சூழலில், சுகாதாரமில்லாத தங்குமிடங்களில் தவிப்பதற்கு வழிவகுத்திருக்கிறது.
மே மாதத்தின் நடுப்பகுதியில், லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவோ அல்லது சரக்கு வாகனங்களிலோ வீடுகளை நோக்கி பயணிக்க தொடங்கிய சமயத்திலும் தலையீடு செய்யத் தவறியதால் துன்பம் மேலும் அதிகரித்தது.
சட்டத்தின் ஆட்சியும், இந்திய ஜனநாயகமும் பிழைத்திருக்க வேண்டுமென்றால், அதுவும் குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காலத்தில், உச்சநீதிமன்றம் தனது அரசமைப்புக் கடமைகளை அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்ற முறையில், அரசின் நடவடிக்கைகளை எவ்வாறு தலையிடுகிறது என்பதைப் பொருத்துதான் சாத்தியமாகும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர் நெருக்கடி இப்போதும் தொடர்கிறது. லட்சக்கணக்கானவர்கள் தெருவிலும் சாலையிலும், ரயில் நிலையங்களிலும் உள்ளார்கள். உச்சநீதிமன்றம் இதில் தலையீடு செய்து போதுமான போக்குவரத்து, உணவு, தங்குமிட ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசமாக உறுதி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் ‘அநீதி எங்கே நிலவினாலும், அது எல்லாவிடத்திலும் இருக்கும் நீதிக்கு எழுந்திருக்கும் அச்சுறுத்தலாகும், என்ற மார்டின் லூதர் கிங் மேற்கோளை நினைவு கொள்கிறோம்.
https://thewire.in/law/supreme-court-migrant-workers-lawyers-letter