மாதொரு பாகன் – உயர்நீதிமன்ற தீர்ப்பை சிபிஐ(எம்) வரவேற்பு

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலை தடை செய்ய வேண்டுமென்று சிலர் கொடுத்த நிர்ப்பந்தத்தை ஏற்று மாநில அரசின் மாவட்ட நிர்வாகம் எழுத்தாளரை நிர்ப்பந்தப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததோடு, நாவலையும் திரும்ப பெற வைத்தது. இதனால் மனமுடைந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் “தனக்குள் இருக்கும் எழுத்தாளன் செத்துவிட்டதாக” அறிவித்தார்.

நாமக்கல் மாவட்ட அரசு நிர்வாகம் மற்றும் சில அமைப்புகளின் கருத்துரிமையை பறிக்கும் நடவடிக்கைளை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநில தலைவர் ச. தமிழ்ச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தமுஎகச சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், கண்டன கூட்டங்களும் நடத்தப்பட்டன. உலகெங்குமிருந்து கண்டன குரல்கள் எழுந்தன.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் குறித்து தீர விசாரித்த நீதிமன்றம், சாதியவாத – மதவாத சக்திகளின் பொய்ப் பிரச்சாரத்தை நிராகரித்ததோடு, “நாமக்கல் மாவட்ட அமைதிக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவு எழுத்தாளர் பெருமாள் முருகனை கட்டுப்படுத்தாது. அவரது புத்தகம் மாதொருபாகனுக்கு தடையில்லை. எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக கிரிமினல் நடைமுறைகளுக்கு வாய்ப்பில்லை” என்று தீர்ப்பளித்துள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் ரத்து செய்யப்படுகிறது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக மக்களின் சிந்திக்கும் உரிமைக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் வலுச்சேர்க்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.

தமுஎகச கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடியதோடு, வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றுள்ளது. தமுஎகசவினருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, எழுத்தாளர் பெருமாள் முருகன் மீண்டும் தனது எழுத்துப் பணியை தொடங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...