மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் (05.07.2017) பத்திரிகையாளர் சந்திப்பு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (05.07.2017) பத்திரிகையாளரைச் சந்தித்தார். அச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை:

ஜூன் 30 – ஜூலை 1  நாடாளுமன்ற நள்ளிரவுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தம் ஏழை எளிய மக்களுக்கு நலன் தரும் என்றார். நடைமுறையில் அது ஏழை எளிய நடுத்தர மக்களையும், சிறு குறுந்தொழில் முனைவோர்கள், வணிகர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்திருக்கிறது. உணவகங்களில் உணவுப்பொருட்கள் விலையேறியுள்ளன. தண்ணீர் கேன் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. நோட்டுப்புத்தகங்கள், சானிடரி நாப்கின்கள் மீது 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வரிவிதிப்பு இல்லாத 500 பொருட்களின் மீது வரி ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரைப்பட டிக்கெட்டுகள் மீது ஜி.எஸ்.டி வரிவிதிப்போடு உள்ளாட்சி வரி சேர்த்து 58 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. கிரைண்டர்கள் மீதான வரி 4 சதவீதமாக இருந்தது, 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜாப் வொர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வரி சீர்திருத்தம் செய்வதாகச் சொன்ன அரசு, வரி விகிதங்களை மாற்றியமைத்து அதன் மூலம் புதிய வரிச்சுமைகளை ஏற்றியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். அதிகபட்ச விற்பனை விலை ஜி.எஸ்.டிக்கு முன்பும், பின்பும் என்ன என்பதைக் குறிப்பிட்டு, பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

மத்திய அரசின் இந்த முடிவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாது, வணிகர்கள், சிறு குறுந்தொழில்  உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். திருப்பூரில் தையல் மையங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் வரும் 21 ஆம் தேதியிலிருந்து போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். செல்லா நோட்டு அறிவிப்பால் சிறு குறுந்தொழில்களும், வணிகர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வரும் சூழலில்  ஜி.எஸ்.டி அமலாக்கம் குறித்த அறிவிப்பும் கால்நடைச் சந்தைகள் மீதான கட்டுப்பாடும், சிறுகுறு உற்பத்தியாளர்கள் மற்றும் முறை சாராதுறைகள் மீதான தொடர் தாக்குதலாக வந்திருப்பதே உண்மை.

இதுவரை ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்கின்ற நிறுவனங்கள் கலால் வரி வரம்பிற்குள் வரவேண்டும் என்றிருந்த நிலையில், ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் அந்த வரம்பு ரூ. 20 லட்சமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் செய்தாலே அவர்கள் ஜி.எஸ்.டி பதிவு பெறவேண்டும் என்று ஆக்கப்பட்டுள்ளது. ரூ. 20 லட்சத்திற்கு குறைவாக வர்த்தகம் செய்வோர் செலுத்திய வரியை திரும்பப் பெறுவது சிக்கலாகியிருக்கிறது. இவர்கள் தொழிலை தொடர்வது சாத்தியமற்றதாக ஆகியுள்ளது. தொழில் முறையில், கார்ப்பரேட்டு ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற  சீர்திருத்தம் திணிக்கப்பட்டுள்ளாதாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. இவ்வகையில், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.62 லட்சம் பதிவு செய்யப்பட்ட சிறு-குறு நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

ஒரே நாடு, ஒரே வரி என்ற அறிவுப்பு வெற்றுப் பகட்டேயாகும். ஜி.எஸ்.டி விகிதங்கள் மாறுபடுவது ஒருபக்கம் இருக்க, பெட்ரோல் மீது 57 சதவிகிதம், டீசல் மீது 55 சதவிகிதம் வரிவிதிக்கும் மத்திய மாநில அரசுகள் இவைகளை ஜி.எஸ்.டி.யின் கீழ் ஏன் கொண்டுவரவில்லை? அடக்க விலையை விட அதிகமாக வரி உறிஞ்சப்படுகிறது. அத்துடன் உள்ளாட்சிகளின் மூலம் அதிக வரி திரைப்படங்கள் மீது போடப்பட்டிருப்பதும் ஒரு முக்கிய முரணாகும். உரிய காலமெடுத்து, திட்டமிட்டவகையில் அமலாக்கம் செய்யாதது ஒரு பிரச்சனையென்றால் – கார்ப்பரேட்டுகளின் நலன்களை மனதில் கொண்ட அரசு, சிறுகுறுந்தொழில்கள் குறித்தும், மாநிலங்களின் உரிமை குறித்தும் கவலைகொள்ளவில்லை என்பதும் வெளிப்பட்டுள்ளது. சிறு நிறுவனங்களை பாதித்து, பெரும் நிறுவனங்களுக்கு பலன் கொடுக்கும் பல்வேறு முரண்களை அகற்றிட உடனடியாக மத்திய அரசும், ஜி.எஸ்.டி கவுன்சிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பாஜக அரசின் கீழ் கார்பரேட் நிறுவனங்களுக்கு சொத்து வரி ஒழிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும்  ஊக்குவிப்பு என்ற பெயரில் பல லட்சம் கோடி ரூபாய்கள் சலுகையாகத் தரப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் வராக்கடன்களானபோது, கார்பரேட் கடன்கள் (தள்ளுபடி) ‘ரைட் ஆப்’ செய்யப்படுகின்றன. இத்தனை சலுகைகளும் இப்போதும் தொடர்கின்ற நிலையில்,  ஜி.எஸ்.டி. விவாதங்களில் சாமானிய சிறு குறு நிறுவனங்கள் தான் வரி ஏய்ப்புச் செய்துவருவதாக அரசால் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை, சுய தொழில் வாய்ப்புகளை அழித்து அந்தச் சந்தைகளையும் கார்பரேட்டுகளின் கைகளில் வழங்குவதே பாஜக அரசின் நோக்கம் என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.
ஜி.எஸ்.டி  வரிவிகிதங்களால் சில பொருட்கள் விலை குறையுமென்றாலும் அதன் பலன்  சாமானியர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஜி.எஸ்.டி சட்டத்தில் விதிகள் வகுக்கப்படவில்லை. இதன் காரணமாக  ரூ. 1 லட்சம் கோடி வரையிலான சலுகைகள் மக்களுக்குக் கிடைக்காமல், கார்பரேட்டுகளின் கைகளில் லாபமாகச் சேர வாய்ப்பிருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கனவே எச்சரித்துள்ளது.

ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவுகளை மேற்கொள்வதில் உற்பத்தி மாநிலங்கள், நுகர்வோர் மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என்ற வித்தியாசமில்லாமல் அனைத்துக்கும் ஒரே வாக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு 3 இல் ஒரு பங்கு வாக்கு இருக்கிறது. இது  மாநிலங்களின் தன்னாட்சி நிலையை கடுமையாக பாதிக்கும். மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற வேண்டும். மத்திய அரசின் கையே கவுன்சிலில் ஓங்கி இருக்கிறது. அதனால் அது மிக கடினமான காரியமாகும்.

வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களின் கையில் இருந்தது. இப்பொழுது ஜிஎஸ்டி கவுன்சில் கைக்கு போய்விட்டது. ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை நாடாளுமன்றத்தின் இறுதி முடிவுக்கு உட்படுத்தாதது  ஜனநாயக மறுப்பாகும்.

ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டுமென தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வரும் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆதரிக்கிறது. போராடும் அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று வரிகளை குறைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...