மாநில அரசுகளின் உரிமையை பறிக்காதே !

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய பள்ளிக்கல்வி ஆணைய மசோதாவை (C.B.S.E Bill – 2013) நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஆயத்தம் செய்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மசோதாவின் சரத்துக்களைப் பரிசீலித்தால், அது கூட்டாட்சி தத்துவம் மற்றும் அனைவருக்குமான உள்ளடங்கிய வளர்ச்சி ஆகியவற்றை புறக்கணிக்கும் முயற்சியாகத் தெரிகிறது. கல்வியை வியாபாரப் பொருளாக மட்டும் பாவிக்கும் முறையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பெறும் உரிமை சட்டம் 2009-ஐ மறுதலிப்பதாகவும் உள்ளது.
 
பள்ளிகளின் இணைப்புக்கான விண்ணப்பத்தின் போது ஒரு சிறிய வாய்ப்பாக, அதாவது 90 நாட்களுக்குள் தனது கருத்தை / ஆட்சேபணைகளை மாநில கல்வித்துறை தரலாம் என்பது- மாநில கல்வித்துறையை அதிகாரமற்றதாக ஆக்கும் முயற்சியாகும். அனைத்து பள்ளிகளிலும் சமூகத்தின் நலிந்த, ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட பகுதியினருக்கு அந்தப்பகுதி பள்ளிகளில் 25 சதவிகிதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அதிகாரம் உள்ளிட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை அமலாக்கிட, மாநில அரசின் பங்கு குறித்து எதுவும் கூறப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.  தமிழகம் உட்பட பல  மாநில அரசுகள்  மத்திய மனித வள மேம்பாடு அமைச்சக கூட்டத்தில் இவை குறித்து ஆட்சேபித்த பின்னரும், மாற்றமின்றியே இந்த மசோதா மாநிலங்களின் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
 
கல்வி என்பது மாநில மற்றும் மத்திய அரசுகளின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே, மத்திய அரசு கல்வி சம்பந்தமான முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன்மொழியும்போது, மாநில அரசுகளின் நியாயமான ஆட்சேபணைகளை கணக்கில் கொண்டு உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்; கல்வி உரிமை மசோதா வழங்கியுள்ள சமூக நீதிக்கான  – உள்ளடங்கிய வளர்ச்சிக்கான – வழிகாட்டுதல்கள் அமலாக்கப்படுவதை உத்தரவாதம் செய்யும் முறையில் மசோதாவின் சரத்துக்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

 

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply