மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், பன்முகப் பண்பாடு போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்தியா உள்ளது என்பதை இது அங்கீகரிக்கிறது. எனவே தான் இதன் உள்ளீடாகக் கூட்டாட்சி கோட்பாடு வலியுறுத்தப்படுவதுடன் , சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப் பட்டிருக்கிறது.

60 ஆண்டுகளுக்கும் மேலான காங்கிரஸ் ஆட்சியில், மாநில உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டன. தற்போதைய பாஜக ஆட்சியோ, மாநில உரிமைகள் மீது எல்லை தாண்டி பகிரங்க யுத்தத்தையே  தொடுக்கிறது. அகண்ட பாரத கருத்தாக்கத்திற்கு ஏற்ப வலிமையான மையம், பலவீனமான மாநிலங்கள் என்பதே பாஜகவின் தத்துவார்த்த நிலைபாடு.  மேலும் நவீன தாராளமய கொள்கை அடிப்படையில் மத்திய அரசின் நிதி பிரச்சனைகளை மாநில அரசுகளின் மேல் சுமத்துவது, மாநில அரசுகளை கடன் வலையில் சிக்க வைப்பது, அதிலிருந்து மீள்வதற்கு, நவீன தாராளமய கொள்கைகளை பின்பற்றுவதை நிபந்தனை யாக்குவது  என்பது வாடிக்கையாகி விட்டது.

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நேரடியாகவும் மறைமுகமாகவும் குறைக்கப்படுகிறது. நிதி கமிஷன், மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினாலும், மத்திய திட்டங்களை மாநில அரசுகள் மீது சுமத்துவதன் மூலம், இந்த அதிகரிப்பு பலனளிக்காமல் செய்யப்படுகிறது. தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாகப் பார்த்தால் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களை சென்றடையும் மொத்த நிதி குறைந்து வருகிறது.  குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் போன்ற பல மத்திய சட்டங்களை அமல்படுத்துவதற்கான கட்டமைப்புக்கு நிதி கொடுக்கப்படுவதில்லை. தேசிய ஊரக உறுதி திட்டத்துக்குப் போதுமான நிதியினை மாநிலங்களுக்கு வழங்காததும், முந்தைய ஆண்டுகளுக்கு தரவேண்டிய நிதி நிலுவையும் காரணமாக இத்திட்ட்த்தை முழுமையாக நிறைவேற்ற முடிவதில்லை.

திட்டக் கமிஷன் கலைப்பில் துவங்கி, உணவு பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் பொது விநியோக முறை சீர்குலைவு, உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி போன்றவை திணிப்பு வரை மாநிலங்களின் உரிமைகள் பலவிதங்களில் வெட்டப்பட்டுள்ளன. விவசாய விளை பொருட்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாய விலைக்கு மேல் மாநில அரசுகள் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவு, மாநில அரசு தன் மக்களுக்கு உதவும் அதிகாரத்தை முடக்குவதாகும். விலங்கு விற்பனை சந்தை தொடர்பான விதிகள் அறிவிக்கை (2017) மாநிலங்களின் அதிகார வரம்பில் தலையிடும் நடவடிக்கையே. விலங்கு சந்தைகள் அரசியல் அமைப்பு சட்டப்படி மாநில பட்டியலில்தான் உள்ளது.

மாநில நிர்வாகங்களில் ஆளுநர்களின் தலையீடுகள் அதிகரிக்கின்றன. தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஆளுநர் ஆய்வு நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்  கொள்கிறார். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டதும். நிதி நிலை அறிக்கை உரை இந்தியும், ஆங்கிலமும் கலந்த மொழியில் முன்வைக்கப்பட்டதும், மைல் கற்களில் இந்தி கட்டாயமாக்கப்படுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநிலங்களின் மொழி சமத்துவம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தமிழை, தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாக ஆக்க மத்திய அரசு மறுக்கிறது. அகில இந்திய தேர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு விட்டது. கீழடி ஆய்வு முடக்கப்பட்டுத் தமிழர் வரலாற்றின் தொன்மையும், செழுமையும் மூடி மறைக்கப்படுகிறது.

மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு நிர்ப்பந்தம், இனி உயர்கல்வியில் அனைத்தும் அவ்வழியே என்பதற்கான முன்னோட்டமே. பாடத்திட்டங்களும் மாநிலங்களின் தனித் தன்மைக்கேற்ப இல்லாமல் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாகக் கட்டமைக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை, அதிகாரங்களை மத்திய அரசின் கையில் மையப்படுத்துகிறது. கல்வி  மத்திய பட்டியலில் இருப்பது போன்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது.

இத்தகைய போக்கினை தட்டிக்கேட்கும் அரசியல் உறுதி இல்லாத அரசாக அதிமுக அரசு இருக்கிறது.  தம் ஊழல் சாம்ராஜியத்தை  பாதுகாக்கவும், ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கவும், மாநில நலன்களையும், உரிமைகளையும் அடகு வைக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான மாநில அரசுகளால் உள்ளாட்சிகள் வரை அதிகார பரவல் உறுதி செய்யப்படுகிறது. மாநில உரிமைகள் குறித்து வலுவாகக் குரல் எழுப்பும் இயக்கமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, மற்றும் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது தேச ஒற்றுமையுடன் இணைந்த விசயமாகும். இந்நிலையில் மாநில நலன்களைப் பாதுகாக்க, மாநில உரிமைகளை வலுப்படுத்த வரும் காலத்திலும் உறுதியுடன் போராட சிபிஐ(எம்)ன் 22 வது மாநில மாநாடு தீர்மானிக்கிறது.

முன்மொழிந்தவர் – தோழர். உ.வாசுகி

வழிமொழிந்தவர் – தோழர். ஆர்.ராஜாங்கம் (புதுச்சேரி)

Check Also

தமிழக மீனவர் வாழ்வுரிமையை பாதுகாத்திடுக

இயற்கை சீற்றங்கள், மற்றும் நவீன தாராளமயமாக்கல், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் இலங்கை கடற்படை தாக்குதல், இதுபோன்ற காரணங்களால், தமிழக மீன்பிடி ...