மாநில மொழி செய்திப் பிரிவு வெங்கய்யா நாயுடுவுக்கு டி.கே.ரங்கராஜன், எம்.பி. கடிதம்

மாநில  மொழி செய்திப் பிரிவுகளை மாநிலத் தலைநகரங்களுக்கு மாற்றுவது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், வெங்கய்யா நாயுடுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“அகில இந்திய வானொலியில் தமிழ், மலையாளம், அஸ்ஸாமிஸ் மற்றும் ஒரியா மாநிலப் பிரிவுகளை வரும் 2017 மார்ச் 1 முதல் அந்தந்த மாநிலத் தலைநகர்களுக்கே மாற்றுவது என்கிற நடவடிக்கையை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இது செய்திகளைப் பகுத்தாய்ந்து வெளியிடுவதற்குசிறப்பான முறையில் நாட்டிற்கு உதவிடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தில்லியிலிருந்து ஒலிபரப்பப்படும் மாநில செய்திகளை மக்கள் உன்னிப்பாக இன்றளவும் கேட்டு வருவதைவும், இந்தப் பழக்கமானது தொலைதூர கிராமங்களில் வசித்திடும் மக்கள் மத்தியிலும் தொடர்வதை நான் நன்கறிவேன். பல ஆண்டு காலமாக மாநில மொழிகளில் ஒலிபரப்பப்பட்டு வரும் இந்த செய்திக் குறிப்புகள் சாமானிய மக்களுக்கு தேசிய, சர்வதேசிய மற்றும் மாநில செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கான பிரதான  அம்சமாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.

இது தொடர்பாக பிரசார் பாரதி தொடர்பாக வல்லுநர் குழு அளித்திட்ட குறிப்பு ஒன்று மிகவும் பொருத்தமாக இருந்திடும். அது கணித்திருந்ததாவது: “தனியார் தொலைக்காட்சிகள் ஏராளமாக வந்திருந்தபோதிலும், அவை பல்வேறு விதமான தகவல்களை நாட்டு மக்களுக்கு அளித்து வந்த போதிலும், ஒரு வலுவான மற்றும் சுயேச்சையான பொது ஒலிபரப்பு என்பது ஒரு முக்கியமான பங்கினை
வகிக்கிறது. பொது நலன், பொதுக் கல்வி மற்றும் பொதுவான மக்கள் கருத்தை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரத்தை இது வகிக்கிறது.”

தில்லியிலிருந்து ஒலிபரப்பாகி வரும் மாநில செய்திப்பிரிவு மிகவும் நன்கு செய்திகளைத் தயாரித்து ஒலிபரப்பி வருவதன் மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதனைக் கேட்டிடும் நேயர்களுக்கு மிகவும் சிறப்பான வகையில் சேவை செய்து வருகிறது. இதனை மாநிலத் தலைநகர்களுக்கு மாற்றுவது என்பது, செய்தி உள்ளடக்கம் மற்றும் அதன் மதிப்பை  குறுக்கிடும் மற்றும் குறைத்திடும்.

இந்தியா, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு மக்கள் தொகையுடன் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டிடும் மகத்தான நாடாகும். இப்போது தில்லியிலிருந்து மாநிலத் தலைநகர்களுக்கு செய்திகளைத் தயாரிக்கும் பணியை மாற்றுவது என்பது நம் அரசமைப்புச் சட்டம் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ள கூட்டாட்சி அமைப்புமுறைக்கே ஆழமான முறையில் வேட்டு வைக்கும்
நடவடிக்கையாகும். அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் கண்டுள்ள மொழிகளைத் தாழ்த்திடும் ஒரு முயற்சியுமாகும். இதுவரை அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் மாநில மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முன்பும் ஒருமுறை இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைவராலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போது இம்முடிவு கைவிடப்பட்டது. அப்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த திருமதி சுஷ்மா ஸ்வராஜ், மாநில செய்திப் பிரிவுகள் நாட்டின் தலைநகரிலேயே தொடர்ந்து செயல்படும் என்றும், மாநிலத் தலைநகர்களுக்கு மாற்றப்பட மாட்டாது என்றும்  உறுதி அளித்திருந்தார். இந்த உறுதிமொழி இப்போது மீறப்பட்டிருப்பதைத் தெரிவிப்பதில் வருந்துகிறேன். பணம் கொடுப்பவர்களுக்கு சாதகமாக செய்திகளை ஒளிபரப்பிடும்  மற்றும் ஒலிபரப்பிடும் இன்றைய சூழலில் , மோசமான முறையில் செய்திகளை வெளியிட்டு வரும்  தனியார் செய்தி நிறுவனங்களுக்கு தங்கள் சொந்த எலக்ட்ரானிக் மீடியா மானிடரிங் சர்வீஸ் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மத்தியத்துவப்படுத்தப்பட்ட மாநில செய்திப்பிரிவு தில்லியிலிருந்து இயங்கிட வேண்டியதன் அவசியத்தையும், அதன் மூலம் துல்லியமான மற்றும் பாரபட்சமற்ற செய்திப்பிரிவை நடத்த வேண்டிய அவசியத்தையும், தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை தாங்களும் நன்கு உணர்ந்திருக்கலாம்.

எனவே, தமிழ், மலையாளம், அஸ்ஸாமிஸ் மற்றும் ஒரியா  மாநிலமொழி செய்திப்பிரிவுகளை தில்லியிலிருந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைநகர்களுக்கு மாற்றுவது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்றும் இப்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...