மார்க்சின் ஒளி ஜென்னி! – தோழர் என்.ராமகிருஷ்ணன்

– தோழர் என்.ராமகிருஷ்ணன்

உலகின் அனைத்துக் கண்டங்களிலும் மாமேதை காரல் மார்க்சைக் குறித்து அறிந்துள்ள கோடானுகோடி மக்கள், அவருடைய உயிரின் உயிராக இருந்த ஜென்னி மார்க்சையும் நன்கறிவார்கள். மார்க்ஸ் – ஜென்னி காதல் வரலாறு என்பது, உணர்ச்சிப்பூர்வ காதலைக் கொண்டிருந்த ஒரு இளைஞனின், ஒரு யுவதியின் உளப்பாங்கை மட்டும் சித்தரிப்பதல்ல. அது, மனித குலத்திற்குச் சேவை செய்வது என்ற லட்சிய நோக்கைக் கொண்ட கருத்தொருமித்த காதலாகும்.

மார்க்சும் – ஜென்னியும் ஒருவரையொருவர் நேசித்தனர். ஒருவரையொருவர் உயர்வாக மதித்தனர். ஒருவரிடம் ஒருவர் நிகரற்ற அன்பும், ஈடுபாடும் கொண்டிருந்தனர். திருமணமாகி 13 வருடங்களுக்குப் பின் ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில்,

“அன்பு நிறைந்த பெண்ணிடம் (உன்னிடம்) காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது”

என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஜென்னியோ, தனது குடும்ப நண்பர் திருமதி வெய்ட மெயருக்கு எழுதிய கடிதத்தில் “என் பிரபுவும் எஜமானனும்” என்று மார்க்ஸைக் குறித்து எழுதுகிறார்.  உலக வரலாறு எத்தனையோ உணர்ச்சிமிகு காதல் நிகழ்ச்சிகளைக் கண்டுள்ளது. கால காலத்திலும் அழியாத கவிதை வரிகளை ரசித்துள்ளது. காதலின் பொருட்டுசெய்யப்பட்ட வீரதீரச் சாகசங்களை அறிந்துள்ளது.

“அன்பே! என் கைவாளைக் கொடு! இந்தச் ககனத்தையே உன் காலடியில் வைக்கின்றேன்” “எனது உறைவாளை எடு! இந்த உலகத்தையே உன் முன் உருளச் செய்கின்றேன்” என்று சூளுரை மட்டும் செய்த மாமன்னர்களையும், நெப்போலியன் போனபார்ட்களையும் கண்டுள்ளது. ஆனால் காரல் மார்க்ஸ் என்ற இளைஞர், ஜென்னி என்ற பேரழகியின் இதயங்கவர்ந்த இளம் தத்துவ அறிஞர். வேறுவிதமாகச் சூளுரைத்த பிரகடனத்தையும் உலகம் கண்டது.

“தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். ஆனால் செய்ய வேண்டிய பணியோ அதை மாற்றியமைப்பது” என்று சூளுரைத்த மார்க்ஸ், அதற்கேற்ற அற்புதமான தத்துவத்தை உருவாக்கினார். அது, தன்னை வல்லமைமிக்க உண்மை என்று அன்றாடம் நிரூபித்து வருகின்றது. இந்த மகத்தான பணியைச் செய்த மார்க்சின் ஜீவநாடியாக, இதயத் துடிப்பாக, வாழ்வின் தீபமாக, அவரை இயக்கி வந்த தியாக ஒளியாக ஜென்னி மார்க்ஸ் விளங்கினார்.

மார்க்ஸ் – ஜென்னியின் காதலும், குடும்ப வாழ்க்கையும் எண்ணற்ற வேதனைகளையும், சோதனைகளையும் கண்ட போதிலும் அவற்றையெல்லாம் கண்டு துவண்டுவிடாமல் அவர்கள் வாழ்வின் லட்சியத்தை எட்ட முடிந்ததென்றால் அதன் பிரதான காரணம் ஒருவரிடம் ஒருவர் கொண்டிருந்த ஈடுபாடும், பாசப் பிணைப்புமேயாகும்.

இனிய காதலி, லட்சிய மனைவி, அன்புக் குழந்தை களின் அன்னை, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையில் பரிவு கொண்டிருந்த புரட்சியாளர் என்ற பங்கினை ஜென்னி மார்க்ஸ் நிறைவேற்ற வேண்டியிருந்தது. மார்க்சும் – ஜென்னியும் ஜெர்மனியிலிருந்தும், பிரான்சிலிருந்தும், பெல்ஜியத்திலிருந்தும் மாறி மாறி விரட்டப்பட்டனர்.

“நாங்கள் எங்கு சென்றாலும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பதே எங்கள் லட்சியமாகவிருக்கும்”

என்று முழக்கமிட்டார் மார்க்ஸ். அதில் ஜென்னியின் குரலும் அடங்கியிருந்தது.

புதியதொரு சமுதாயம் என்ற பசுஞ்செடியின் வித்தாகமார்க்ஸ் இருந்தாரென்றால், அந்தப் பசுஞ்செடி தனதுஅறிவுக்கிளைகளைப் படரவிட்டு வளர உதவி புரிந்த மழைநீராக ஜென்னி விளங்குகிறார். ஜென்னி இல்லாத மார்க்சைக் கற்பனை கூடச் செய்ய இயலாது.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...