மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திர தின வாழ்த்து

இந்தியத் திருநாட்டின் 67-வது விடுதலைத் திருநாளை மகிழ்ந்து கொண்டாடும் இந்த இனிய வேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுதந்திரதின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். “வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, விடுதலை வேள்வியில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆயிரமாயிரம் தியாகிகளுக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறோம். விடுதலையின் கனியை புசிக்கும் இந்நாளில், வேராய் இருந்த போராளிகளை நன்றி உணர்வோடு நினைவில் நிறுத்துவோம்.

நாடு விடுதலை பெற்ற பின் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும், வறுமையும், வேலையின்மையும் தொலையும் என்ற நம்பிக்கை பிறந்தது. நாடு விடுதலை பெற்று 67-வது சுதந்திரத் திருநாளை கொண்டாடும் இந்தப் பொழுதில் திரும்பிப் பார்த்தால் முழு மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.

பெரும்பகுதி மக்கள் இன்னமும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய ஆட்சியாளர்களோ வறுமைக்கோட்டை வளைத்து, மோசடியான கணக்கைக் காட்டி வறுமைக்கோட்டிற்கு வறுமை வந்துவிட்டதாகவும் மக்கள் வளமையை நோக்கி தாவிக்குதித்து முன்னேறிவிட்டதாகவும் பொய்ச் சித்திரம் வரைகின்றனர். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் உணவு பாதுகாப்பு மசோதா என்பது இருக்கும் உணவையும் பறிக்கும் ஏற்பாடாக இருக்கிறது.

இருப்போருக்கும் இல்லாதாருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் உணவு மானியம், உர மானியம் போன்றவற்றை வெட்டிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை மழை பொழிகிறார்கள். நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாதுகாப்பான வேலை என்பது குறைக்கப்பட்டு சமூக, சட்ட பாதுகாப்பு இல்லாத முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது.

1990-களில் இந்தியாவில் நுழைக்கப்பட்ட நவீன தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுவதாக உள்ளது. குறிப்பிட்ட சில பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது.  இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து வருகிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்தியாவின் இயற்கை வளங்கள் ஈவு இரக்கமற்ற முறையில் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆற்று மணல் துவங்கி தாது மணல் வரை சுரண்டப்படுகிறது. ஊழல் இல்லாத இடமே இல்லை என்ற நிலை என்றாகிவிட்டது.

நிலக்கரி சுரங்கங்கள் முதல் இயற்கை எரிவாயு வரை தேசத்தின் சொத்துக்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பந்தி வைக்கப்படுகிறது.  சில்லரை வர்த்தகத் துறையை சீரழிக்க அந்நிய கழுகுகள் வட்டமடிக்கின்றன. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மறுபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்களை, தேசத்தின் சுயசார்பை, சுயாதிபத்தியத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் அயர்வின்றி நடத்தி வருவது நம்பிக்கை அளிக்கிறது. என்எல்சி நிறுவன பங்குகளை மத்திய ஆட்சியாளர்கள் தனியாருக்கு விற்க முயன்றதை தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடி முறியடித்தது இதற்கு சமீபத்திய உதாரணமாகும்.

இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டமே விவசாயத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு விவசாயத்தை கைவிட்டதன் மூலம் விவசாயிகள் தற்கொலை சிறப்புத் திட்டத்தை மத்திய ஆட்சியாளர்கள் மறைமுகமாக செயல்படுத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தொடர்ந்து முடக்கப்படுகிறது. தீண்டாமை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டாலும் சமூகத்திலிருந்து இன்னமும் ஒழிக்கப்படவில்லை. சாதீய ரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. காதல், சாதிமறுப்பு திருமணங்களுக்கு எதிராக சாதீய சக்திகள் வெளிப்படையாகவே அணிதிரளும் காட்சியை தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பதன் மூலமே, இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும்  என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதன்படி அமைந்த மாநிலங்கள் கூட்டாட்சியின் சாட்சியமாக விளங்கின. ஆனால் இன்றைக்கு மொழிவழி மாநிலங்களை சிதைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. 66 ஆண்டுகால முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீரற்றதாக உள்ளது. இதனை சீர் செய்ய அனைத்துப் பகுதி  மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே வழி. ஆனால் மாநிலங்களை துண்டு துண்டாக பிரித்தால், பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று சில சக்திகள் மக்களின் அதிருப்தியை மடைமாற்றம் செய்ய முயல்கின்றன. மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக பறித்துவருகிறது. இந்நிலையில் சிறு சிறு மாநிலங்கள் என்பது மத்திய அதிகார குவிப்பிற்கே வழிவகுக்கும்.

சாதி, மத, இன, மொழி வித்தியாசங்களைக் கடந்து போராடியதாலேயே இந்திய விடுதலை சாத்தியமாயிற்று. ஆனால் மக்களை மத ரீதியாக கூறுபோட முயலும் சக்திகள் அதன் வழியாகவே அதிகாரத்தை பிடிக்க முடியும் என சதித்திட்டம் தீட்டுகின்றனர்.

இதை முறியடித்து மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மை மாண்பை, மத நல்லிணக்கத்தை உயர்த்திப்பிடிப்பதன் மூலமே சுதந்திரத்தின் மெய்யான அர்த்தத்தை உணர முடியும்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நவீன தாராளமயமாக்கல் கொள்கை எனும் ஒரே வழியில் பயணம் செய்யும் காங்கிரசும் பாஜகவும் தங்களை ஒன்றுக்கொன்று மாற்றுபோல காட்டிக் கொள்கின்றன. சில தனி நபர்களை முன்னிறுத்தி, அவர்களாலேயே அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த இரு கட்சிகளின் கொள்கைகளுக்கு மாற்றாக நாட்டு நலன், மக்கள் நலன் சார்ந்த மாற்றுக் கொள்கைகளை இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்துள்ளன. அது ஒன்றே தேசத்திற்கு வெளிச்சம் தரும் ஒரே பாதையாக இருக்க முடியும்.

இந்த விடுதலைத் திருநாளில் தியாகிகளின் கனவுகளை நனவாக்க மேலும் மேலும் உத்வேகத்துடன் போராட சூளுரை மேற்கொள்வோம். உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை வலிமையாக முன்னெடுத்துச் செல்வோம். விடுதலையின் பயன் அனைத்து குடிமக்களுக்கும் கிடைத்திட போராடுவோம்.

இந்திய மக்கள் அனைவரையும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் விடுவிப்பதற்கான போராட்டத்தை  விடுதலைப் போராட்ட பாரம்பரிய வழியில் நின்று நடத்திட இந்த இனிய நாளில் சபதமேற்போம்.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply