மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் வீடு,வீடாக பிரச்சாரம்

17-8-2017

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத

நடவடிக்கைகளை எதிர்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழகம் முழுவதும் வீடு,வீடாக பிரச்சாரம்

71-வது சுதந்திர தின விழாவில் ஊழல் ஒழிப்பு, வகுப்புவாத எதிர்ப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி திட்டம் ஆகியவற்றால் வளமான இந்தியா உருவாகுமென பிரதமர் பேசியிருக்கிறார்.  ஆனால், நடப்பதோ நேர்மாறானது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டார்கள். சிறு,குறுதொழில்கள் பாதிக்கப்பட்டது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல ஜிஎஸ்டி வரித்திட்டம் அமலாக்கப்பட்டதால் அனைத்துப்பகுதி மக்களும்  பாதிக்கப்பட்டதோடு, சிறு,குறுதொழில்களும்  பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தப் போவதாக பிரதமர் பேசுகிறார். ஆனால் விவசாயிகள்  தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது.  என்றைக்கும் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. வகுப்புவாதம் கூடாது என்று பிரதமர் பேசுகிறார். அவரது கட்சியின் தலைமையின் கீழ் செயல்படக்கூடிய ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்த முயற்சித்து வருகிறது.

உணவு பாதுகாப்பு என்ற பெயரால் பொதுவிநியோக முறையை சீர்குலைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. மத்திய அரசு மாநில மக்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கிறபோது ஆளும் கட்சி மூன்று கோஷ்டிகளாக பிரிந்து பதவிச்சண்டையில் ஈடுபட்டிருக்கின்றன. மாநில மக்களைப் பாதுகாத்திட மத்திய அரசுக்கு எதிராக குரலெழுப்புவதற்குப் பதிலாக ஆளும் கட்சி கோஷ்டிகள் போட்டி போட்டுக் கொண்டு மத்திய  பிஜேபி தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தில் ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திட முயற்சித்து வருகின்றது.

இத்தகைய பின்னணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவலுக்கிணங்க நடைபெறவுள்ள நாடு தழுவிய இயக்கத்தின் ஒருபகுதியாக தமிழகத்தில் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 முதல் 23 வரை மாநிலம் முழுவதும், கிராமங்களிலும், நகரங்களிலும் வீடு, வீடாக மக்களைச் சந்தித்து பிரச்சாரம் நடத்துகிறது.

கோரிக்கைகள்

¨           விவசாய விளைபொருட்களுக்கு அடக்கவிலையோடு 50 சதமானம் சேர்த்து விலை தீர்மானிக்க வேண்டும், இந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தினை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும்,

¨           விவசாயிகளது கடனை தள்ளுபடி செய்திட வேண்டும்,

¨           ஜி.எஸ்.டி மூலம் உயர்த்தப்பட்ட வரிவிதிப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்,

¨           ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற வாக்குறுதியை அமலாக்கிட வேண்டும்,

¨           பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும்,

¨           2014 தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றிட வேண்டும்,

¨           ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் மதவெறி நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

¨           தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பை சீர்குலைக்க புகுத்தியுள்ள நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விதிவிலக்கு வழங்கிட வேண்டும்.

¨           உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி, ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கும்,  5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட பலருக்கு இனி மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இதனால் ஏற்கனவே உள்ள பயனாளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்ற தமிழக அரசின் அறிவிப்பு மட்டும் போதுமானதல்ல. இத்திட்டத்தை தொடர்ந்து வழக்கம் போல் செயல்படுத்திட கூடுதல் நிதி ஒதுக்கி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் இறுதி நாளான 2017 ஆகஸ்ட் 23 அன்று தமிழகம் முழுவதும், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அளவில்  மேற்கொண்டுள்ள மக்கள் கோரிக்கை மீதான பிரச்சார இயக்கத்திற்கு  ஆதரவு தருமாறு அனைததுப்பகுதி மக்களையும் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

 

 

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...