மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை வழக்கம் போல கொண்டாட முடியாத விதத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் ஊரடங்கில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தன்னலம் பாராமல் இரவு பகலாக மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்து பார்க்கிறோம்.

ஒரு உலகளாவிய நோய் தொற்றை எதிர்கொள்ள முடியாமல் முதலாளித்துவ அமைப்பு விழிப்பிதுங்கி நிற்கிறது. கொள்ளை லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவம் மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்பதை இந்த நெருக்கடியான காலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதேநேரத்தில் சோசலிச சமூகம்தான் மனிதர்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்ற உண்மையும் உலகினால் இன்று உரக்க பேசப்படுகிறது.

மனிதகுலம் கடந்த காலங்களிலும் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. அறிவியல் மற்றும் பகுத்தறிவின் துணையோடு அதை முறியடித்து முன்னேறியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையும் எதிர்கொண்டு சமாளித்து முன்னேறும் என்று நம்பிக்கை கொள்வோம். இயற்கையோடு இயைந்த வாழ்வை பாதுகாப்போம். தமிழ் இலக்கியம், காலங்காலமாக வலியுறுத்தி வந்துள்ள பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டைப் பாதுகாப்போம்.

தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளின் சமத்துவத்தைப் பாதுகாக்கவும், மாநிலங்களின் உரிமைகள், அதிகாரங்களைப் பாதுகாக்கவும், பன்முகப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கவும் இப்புத்தாண்டு நாளில் உறுதியேற்போம்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...