மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத் தீர்மானம் (16.11.11)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்  நவம்பர் 16-17, 2011 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி, ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் – 1

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவமதிப்பு
அமெரிக்காவுக்கு கண்டனம்

 

முன்னாள் குடியரசுத் தலைவரும் உலகமறிந்த விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் அமெரிக்க நாட்டின் விமான நிலையத்தில் அக்டோபர் 29-ந் தேதி மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளார். இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2009ம் ஆண்டும் அவமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் நடைமுறை பரிசோதனைகளிலிருந்து விலக்களிப்பட்டவர்கள் என்ற மரபுகளை மீறி விமான நிலையத்தில் அவரை முழு பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பரிசோதனை முடிந்து விமானத்தில் ஏறி அமர்ந்த பின்பு, விமானம் புறப்படும் தருணத்தில் மீண்டும் அவரின் இருக்கைக்கு வந்து மேலங்கி, காலணியை கழற்றி பரிசோதனை நடத்தியுள்ளனர்.


கடந்த காலங்களில் இந்திய நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிட்டு இதுபோன்ற அவமதிப்புகளை  செய்து வந்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ்  பெர்னான்ட°, இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான், தமிழ்சினிமா உலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன், மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி ஆகியோர் வன்மத்துடன் பரிசோதிக்கப்பட்டதும், அவமதிக்கப்பட்டதும் நிகழ்ந்தன. இந்திய அரசின் எதிர்ப்பிற்கு பின் அமெரிக்கா மன்னிப்பு கோரியிருந்தாலும், எதிர்காலத்தில் இந்தியர்களின் மீதான அவமதிப்பு தொடர்ந்தால் இந்தியா பதிலடி தரும் என அறிவிக்க வேண்டும் என்று கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய ஆதிக்க நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

 

தீர்மானம் – 2

உத்தப்புரத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்
தீண்டாமை ஒழிப்பை தீவிரப்படுத்துக!
மாநில அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் 2008ம் ஆண்டு தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக்களுக்கு ஒரு பொதுப்பாதை உருவாக்கித் தரப்பட்ட பிறகும் அவர்களுக்கு எதிராக பல வடிவங்களிலான தீண்டாமைக் கொடுமைகளும், பாரபட்சங்களும் நீடித்தன. இவற்றிற்கு முடிவு கட்டக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பல்வேறு இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தன. இப்பின்னணியில் தான் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் 20.10.2011ம் நாள் உத்தப்புரம் இருதரப்பு மக்களுக்குமிடையே நல்லிணக்க உடன்பாடு ஏற்பட்டு அதன் ஒரு பகுதியாக 10.11.2011ம் நாள் தலித் மக்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முத்தாலம்மன் கோவிலிற்குள் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர். இவர்களை இதர சமூகப் பிரதிநிதிகள், கோவில் வாசலில் வரவேற்று அழைத்துச் சென்றதானது ஒரு உத்வேகமான நிகழ்வாகும். உத்தப்புரம் தலித் மக்கள் ஜனநாயக சக்திகளின் தலைமையில் நீடித்து நடத்திய இயக்கங்களின் தொடர்ச்சியாகவே இத்தகைய மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய இணக்கமான சூழல் உருவாகும் வகையில் உடன்பாடு செய்த இருதரப்பு மக்களுக்கும் அதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மதுரை மாவட்ட அரசு நிர்வாகத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது வரவேற்பையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.


உத்தப்புரம் நிகழ்வுகளும் இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உடன்பாடும் தமிழகம் முழுவதற்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் ஏராளமான வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கின்றன. தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை, பொதுப்பாதை மறுப்பு, பொது மயான உரிமை மறுப்பு, ஆலய நுழைவு மறுப்பு, முடிதிருத்தகங்களில் முடிவெட்ட மறுப்பு, சலவையகங்களில் துணி சலவை செய்ய மறுப்பு, கிராமப் பொது வளங்களை பயன்படுத்துவதை தடுத்தல் போன்ற பல தீண்டாமைக் கொடுமைகளும் பல்வேறு வடிவிலான வன்கொடுமைகளும் இன்றளவும் தலித்துகளுக்கு எதிராக தொடர்கின்றன. பஞ்சமி நில அபகரிப்பு, தலித்துகளுக்கு அரசு வழங்கிய நிலம் அபகரிப்பு உள்ளிட்ட பொருளாதார ஒடுக்குமுறைகளும் பல இடங்களில் உள்ளன. இந்திய நாடு விடுதலையடைந்து 64 ஆண்டுகள் கடந்த பின்பும் இத்தகைய சாதிய ஒடுக்குமுறைகளும், தீண்டாமை வன்கொடுமைகளும் நீடிப்பது அரசியல் சட்ட அமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல ஜனநாயக, சமூகநீதிக் கோட்பாடுகளுக்கும் புறம்பானது.
 

எனவே இத்தகைய அநீதிகளுக்கு முடிவு கட்ட தலித் மக்கள் ஒன்றுபட்டு போராடுவதும், அத்தகைய இயக்கங்களுக்கு ஜனநாயக இயக்கங்கள் தலைமையேற்று ஆதரவளிப்பதும் அவரச அவசிய கடமையாகும். அதே சமயம் சாதிய ஒடுக்குமுறைகளையும், தீண்டாமை வன்கொடுமைகளையும் ஒழித்துக் கட்டவும் அதன்மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் ஏற்படுத்தவும் சட்ட மற்றும் நிர்வாக பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் மேலும் கால தாமதமின்றி மேற்கொள்ளுமாறு மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 

Check Also

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி… சிபிஐ(எம்) கண்டனம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... சிபிஐ(எம்) கண்டனம்! குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

Leave a Reply