மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தே. இலட்சுமணன் மறைவு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தே. இலட்சுமணன் (வயது 84) கோவிட் – 19 பாதிப்பு காரணமாக நேற்று (24.08.2020) இரவு உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த தோழர் தே. இலட்சுமணன் கால்நடைத்துறையில் சேர்ந்து அரசுப் பணியாற்றினார். கால்நடைத்துறை ஊழியர்களை அணிதிரட்டி படிப்படியாக தோழர் எம்.ஆர். அப்பனுடன் இணைந்து அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்குவதில் மாநிலம் முழுவதும் சென்று இரவு – பகலாக உழைத்தார். இக்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு கட்சியின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார்.

அன்றைய காலக்கட்டத்தில் சென்னை-செங்கல்பட்டு மாவட்டமாக இருந்ததை பிரித்து 1981ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தின் 13 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் முதல் அமைப்புச் செயலாளராக தோழர் தே.லட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே காலக்கட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார். 1985ம் ஆண்டு மாநில செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநிலச் செயற்குழு உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் கட்சி வகுப்புகள் நடத்துவதில் முக்கிய பங்களிப்பு செய்தார். தீக்கதிர் நாளேட்டில் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், தத்துவார்த்த கட்டுரைகள் எழுதி வந்தார். சிறந்த மார்க்சிய ஞானம் உடைய அவர் மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். சில பிரசுரங்களையும் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவை உருவாக்குவதிலும், அந்த அமைப்பை மாநிலம் முழுவதும் கட்டமைப்பதிலும் தோழர் டி.எல். முக்கிய பங்கு வகித்தவர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை உருவாக்குவதிலும், அதன் தலைமை பொறுப்பை ஏற்று மாநிலம் முழுவதும் சென்று பரந்துபட்ட அமைப்பாக கட்டமைத்ததிலும் மிக முக்கிய பங்காற்றினார். அதேபோன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடையை உருவாக்குவதிலும், அதனை வளர்த்தெடுப்பதிலும் பெரும்பங்காற்றினார். தமுஎசவின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர்.

கட்சியின் மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர் என தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலும் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டவர். கட்சித் தோழர்களோடு மிக எளிமையாக பழக்கக் கூடியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது செவ்வஞ்சலியை செலுத்துகிறது.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் தே. இலட்சுமணன் அவர்களுக்கு செவ்வஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (25.08.2020) காலை 9.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் (27, வைத்தியராமன் தெரு, தி. நகர், சென்னை -17) அஞ்சலி செலுத்தப்படுகிறது.  அதேபோல கட்சியின் மாவட்டக்குழு அலுவலகங்களிலும் இன்று (ஆகஸ்ட் 25) தோழர். தே. இலட்சுமணன் அவர்களின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்துமாறு மாநிலக்குழு மாவட்டக்குழுக்களை கேட்டுக் கொள்கிறது.

மேலும் கட்சியின் மாவட்டக்குழுக்கள் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்து விட்டு நாளை (ஆகஸ்ட் 26) நடத்துமாறும் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

கே. பாலகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...