மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்கு‍ழு தீ்ர்மானம் (01.08.12)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு கூட்டம், 01.08.12 அன்று சென்னையில், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள்  டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, கே. பாலகிருஷ்ணன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:  

கிரானைட் குவாரி ஊழல் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள அரசு புறம்போக்கு, பொதுப் பாதைகள், பஞ்சமி நிலங்கள், குளம் மற்றும் கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்து, விதிகளை மீறி, தனியார் கம்பெனிகள் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்குக் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் வெட்டி வைக்கப்பட்ட கற்கள் திருடப்பட்டிருப்பதாகவும் வந்திருக்கக்கூடிய செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒலிம்பஸ் கிரானைட், சிந்து கிரானைட், பி.கே.பி, பி.ஆர்.பி எக்ஸ்போர்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.35,000 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் விசாரித்து, ஆதாரங்களுடன் அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கை மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அத்துடன், எளிய கிராம மக்களின் வேளாண் நடவடிக்கை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும், அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது என்றும், மறு பக்கம் தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக, அசுரத்தனமாக பண பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்துகின்ற அளவுக்கு எழுந்து நிற்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இது குறித்தான கிராம மக்களின் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினாலும், பயத்தினாலோ அல்லது நிதி இலாபம் பெறும் நோக்கத்தினாலோ அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை என்று அறிக்கை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. 19.05.2012 தேதியிடப்பட்டு, தொழில் துறை முதன்மை செயலாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டும், இரண்டரை மாதங்களாக மாநில அரசு மௌனம் சாதித்தது ஏன் என்ற நியாயமான கேள்விக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். கனிம வளங்கள் இந்த நாட்டின் சொத்து, அவை கொள்ளையடிக்கப்படவும், தனியாரின் லாப நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படவும் கூடாது என்கிற பின்னணியில், நடந்திருக்கக் கூடிய விஷயங்களைக் கடுமையான குற்றமாகக் கருதி, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களின் மீது மட்டுமல்லாமல், அரசு மற்றும் அதிகாரிகள் மீதும் சந்தேகத்தின் நிழல் படிந்திருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தவறிழைத்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. விதிகளை மீறிய தனியார் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். வருமான இழப்பை, அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்.

தனியார் ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்தாமல், அரசின் டாமின் நிறுவனமே, இப்பணியில் ஈடுபடலாம். அப்போதும் சுற்றுச் சூழல் மற்றும் வேளாண் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்து, பணிகளை முறைப்படுத்திட வேண்டும்.   காவல்துறை கஸ்டடியில்  மரணம் – சிபிசிஐடி விசாரணை தேவை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி, அவரது மகன் ஆனந்த் பாபு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் திருச்சி திருவரம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது, மர்மமான முறையில் அவர்கள் மரணமடைந்துள்ளனர். வழியில் போலீஸ் வேனில் விஷம் அருந்தி தற்கொலை என்ற செய்திகள் ஒருபுறமும், சட்டவிரோதமாக இரண்டு நாட்கள் லாக் அப்பில் வைத்து சித்திரவதை செய்து கொலை என்ற செய்திகள் மறுபுறமும் வந்துள்ளன. உள்ளூர் போலீசுக்கு ஏன் தகவல் தரவில்லை என்றும், வழியிலேயே மருத்துவமனைகள் இருந்தும், மிகுந்த காலதாமதத்தோடு தொலைவில் உள்ள திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது ஏன் என்றும் சந்தேகங்கள் எழுகின்றன. காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பின்னணியில், சிபிசிஐடி விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொணர்ந்து, நியாயம் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்களை சஸ்பெண்டு செய்தால் மட்டும் போதாது, கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  தமிழக அரசை வலியுறுத்துகிறது.  

உணவுப் பாதுகாப்பு கோரி போராட்டங்கள் தொடரும் தமிழகமெங்கும் பொது விநியோக முறையைப் பலப்படுத்தக்கோரி, ஜுலை 20ம் தேதி 3020 ரேஷன் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு ஆர்ப்பாட்டமும், ஜுலை 30ம் தேதி 200க்கும் மேற்பட்ட மையங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு 30,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இயக்கமும் மார்க்சிஸ்ட் கட்சியால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அனைவருக்குமான ரேஷன் முறையை வலியுறுத்தி டெல்லியில் இடதுசாரிக் கட்சிகள் கலந்து கொள்ளும் தர்ணாவும் துவங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை என்பதிலிருந்து, மண்ணெண்ணெய், பருப்பு, உளுந்து கிடைப்பதில் பிரச்சனைகள் உள்ளன என்பது வரை பல்வேறு கோரிக்கைகள் மக்கள் மத்தியிலிருந்து வந்துள்ளன. இக்கோரிக்கைகளை, மாநில அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது என்றும், ஸ்தல அளவில் மேலும்  ரேஷன் கடைகளை ஆய்வு செய்து, பொருத்தமான நீடித்த போராட்டங்கள் நடத்துவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.  

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply