மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கூட்டுறவு நிறுவனங்களுக்கான தேர்தல் சமபந்தமாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களை இன்று (11.09.12) கோட்டையில் சந்தித்து மனு:

கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், பி.செல்வசிங் ஆகியோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான தேர்தல் சமபந்தமாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களை இன்று (11.09.12) கோட்டையில் சந்தித்து மனு கொடுத்தனர்.

மனுவில் உள்ள விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது‍:

தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. கடந்த பதினோறு ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுறவு அமைப்புக்கள் தனி அதிகாரிகளின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்புரையின் காரணமாக தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தில் உறுப்பினர் சேர்ப்பிற்கு (அ வகுப்பு / வாக்குரிமை பெற்றவர்கள்) தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய உறுப்பினர் சேர்ப்பிற்குள்ள அதிகாரம் நிர்வாகக்குழுவிற்கு மாறாக பொதுக்குழுவிற்கு என மாற்றி கூட்டுறவு சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்திற்கான முக்கிய பொருளாக (அஜெண்டா) புதிய உறுப்பினர் சேர்ப்பு என்றுள்ளது. புதிய உறுப்பினர் சேர்ப்பிற்கான விளம்பரம் மற்றும் அறிவிப்புக்கள் வெளிப்படைத் தன்மையாக இல்லை.

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆளும் கட்சியைச் சார்ந்த பிரமுகர்க்கு மட்டும் உறுப்பினர் படிவங்கள் கொடுத்து மொத்தமாக பூர்த்தி செய்து பெற்றுக் கொள்கின்றனர். மற்றவர்களுக்கு உறுப்பினர் படிவம் கொடுக்க மறுக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களில் ஏற்கனவே 25.05.2001 முதல்  பேரவை நடைபெறும் தேதி வரை சேர்க்கப்பட்டுள்ள இணை உறுப்பினர்களுக்கு (வாக்குரிமை இல்லாதவர்கள்) படிவம் அளித்து அ வகுப்பு உறுப்பினர்களாக (வாக்குரிமை உள்ளவர்கள்) மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மறுக்கப்படும் சூழல் தமிழகம் முழுவதும் உள்ளது. மேற்கண்டவாறு வெளிப்படைத் தன்மையின்றி உறுப்பினர்களை சேர்த்து தேர்தல் நடத்த முயற்சிப்பது எண்ணற்ற முறைக்கேடுகளுக்கு வழிவகுக்கும்.

கடந்த காலத்தில் கூட்டுறவுத் தேர்தல்கள் ஜனநாய விரோதமான முறையில் நடத்தியதும் பின்னர் பொதுமக்களது எதிர்ப்பின் காரணமாக அத்தேர்தல்கள் செல்லாது என அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் அறிந்ததே. எனவே தற்போது கூட்டுறவு தேர்தல் நடத்த முன்வந்திருப்பதை வரவேற்பதுடன், நடைபெறும் தேர்தல்கள் வெளிப்படைத் தன்மையாகவும், ஜனநாயக வரம்புக்கு உட்பட்டும் நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இதனை உறுதி செய்திட கீழ்க்கண்டவற்றை நிறைவேற்றிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.  புதிய உறுப்பினர் சேர்ப்பிற்கான உரிய விளம்பரம் மற்றும் அறிவிப்புக்கள் அளித்து போதிய கால அவகாசம் கொடுத்திட வேண்டும். உறுப்பினராக விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பளித்திட வேண்டும். 25.05.2001-க்குப் பிறகு சேர்க்கப்பட்ட அனைத்து இணை உறுப்பினர்களையும் (வாக்குரிமை உள்ளவர்களாக) அ வகுப்பு உறுப்பினர்களாக மாற்ற உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். தேர்தல் முறையாக, நேர்மையாக, சுதந்திரமாக நடைபெற தனி தேர்தல் ஆணையம் அமைத்து கூட்டுறவுத் தேர்தலை முறையாக நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.  

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply