மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள்

 தமிழகத்தில் கால்பதிக்கும் வால்மார்ட் அலுவலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி முற்றுகைப் போர்

தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது கடைகளைத் திறப்பதற்கு  முயற்சிகள்  செய்வதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை புறநகர் பகுதியில் திருவேற்காடு நகராட்சி பள்ளிக்குப்பத்தில்  சுமார் 1லட்சம் சதுர அடி அளவில் வால்மார்ட் நிறுவனத்திற்காக சேமிப்புக்கிடங்கு கட்டப்படுவதாகவும்  அண்ணா நகரில் மார்க்கெட்டிங் அலுவலகம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. பாரதி வால்மார்ட் நிறுவனம் பல சில்லறை வணிகர்களை அணுகி அவர்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்தவிலையில் தருவதாக கூறி அவர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து வருகிறது என்றும் இம்மாத இறுதிவரை இந்தப்பதிவு நடக்கும் என்றும் அப்படி சேருகிறவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கி வருவதாகவும் தெரிகிறது.

புகைப்படத்துடன் கூடிய நிரந்தர அடையாள அட்டையை, பாரதி வால்மார்ட் பிரைவேட் லிமிடெட், பெஸ்ட் பிரைஸ் மாடர்ன் வேறால்சேல், கிரவுண்ட் புளோர், ஆர்.7,1. ஏ.வி.கே. டவர், நார்த் மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை 600 101. என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை, வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் முடிவையும் மீறி இது நடைபெறுகிறது. இத்தகைய புறவழி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட, டிசம்பர் 26அன்று வால்மார்ட் அலுவலகம் முன்பு  முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு, தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்க மாட்டோம் என்று  உறுதியான, தொடர்ச்சியான நிலைபாடு எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.

அதே சமயம்,  புறக்கடை வழியாக வால்மார்ட்  தனது ராட்சதக் கால்களை ஊன்றுவதற்கு முயற்சித்து வருகிறது. எனவே, தமிழக அரசு இப்பிரச்னையில் உண்மைத் தன்மையை கண்டறிந்து திருவேற்காடு மற்றும் அண்ணாநகர் பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் வால்மார்ட் உள்ளிட்ட இதர  அன்னிய நிறுவனங்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதை தடுத்து சில்லரை வர்த்தகத்தை, வர்த்தகர்களை பாதுகாத்திட உடனடியாக  உறுதியான  நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

காவிரி – உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த உடனடியாக தலையிட மத்திய அரசுக்கு வேண்டுகோள்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. தண்ணீரின்றி கருகும் பயிரை மாடுகளை விட்டு மேயவிடும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கூடிய காவிரி கண்காணிப்புக் குழு கர்நாடகா அரசு டிசம்பர் மாதம் 1டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இரு மாநிலங்களும் திருப்தி இல்லை என்றாலும் கண்காணிப்புக் குழுவின் முடிவின் அடிப்படையில் 12டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

இந்த தண்ணீர் எந்த விதத்திலும் தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யாது என்றும் இதையும் மறுத்து கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியிருப்பதற்கு மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசு தலையிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு ஏற்று அமல்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. அத்துடன், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறது.    

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply