மாற்றுக்கான முயற்சிகளை சிபிஐ(எம்) தொடரும், பலப்படுத்தும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலகுழுக் கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ் வெங்கட்ராமன் தலைமையில் சென்னையில் ஜூன் 14-15 தேதிகளில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பி.வி.ராகவலு, மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி.சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்:

2016 சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில மாறி மாறி ஆட்சிக்கு வந்து கெண்டுள்ள திமுக, அதிமுக கட்சிகள் கடைபிடிக்கும் மோசமான கொள்கைகளால் அனைத்து உழைப்பாளி நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் நொருங்கிப் போயுள்ளது. இவ்விரு கட்சிகளுக்கும் அடிப்படை கொள்கைகளில் பெரிதும் வேறுபாடு இல்லை. மத்திய காங்கிரஸ், பாஜக ஆட்சிகள் கடைப்பிடிக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தமிழகத்தில் பின்பற்றி, அதன் மூலம் பல்வேறு பகுதி உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை நெருக்கடிக்குள்ளாக்கும் குற்றத்தை இவ்விரண்டு கட்சிகளும் செய்து வருகின்றன. சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய வளர்ச்சி சரிந்துள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதர பகுதி மக்களும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இயற்கை வளங்கள் தனியாரின் லாப வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள், தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.  ஆணவக்கொலைகள் தொடர்கின்றன. ஊழல் குற்றங்களுக்காக இரு கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. போதை கலாச்சாரம் வேரூன்றி நிற்கிறது. கருத்து சுதந்திரம் அடக்கப்படுகிறது. அடக்குமுறைகள் மற்றும் அவதூறு வழக்குகள் மூலமாகவே விமர்சனங்கள் எதிர்கொள்ளப்படும் போக்கு நிலவுகிறது. சுமார் 83 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஒப்பந்த தொழிலாளிகளாகவும், முறைசாரா தொழிலாளிகளாகவும் பணியமர்த்தப்பட்டு குறைந்த ஊதியத்தில் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் பாதகமான கொள்கைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டுக்குமான ஒரு மாற்று உருவாக வேண்டும்.  இந்த அடிப்படையிலேயே ஊழலற்ற தமிழகம், போதையற்ற தமிழகம், எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்பு போன்ற முழக்கங்களை வைத்து மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டு, குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் முன் வைத்து  பரப்புரையும், இயக்கங்களும் மதுரையில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடும் நடத்தப்பட்டது. வரலாற்றில் முதன் முறையாக திமுக, அதிமுகவுக்கு நம்பகமான மாற்று ஏற்பட்டது மக்களின் வரவேற்பைப் பெற்றது. அதன் வளர்ச்சிப்போக்காக மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிகவும், தமாகாவும் இணைந்து 6 கட்சி கூட்டடணியாக தேர்தலை சந்தித்தன. இந்த அணி உருவானதன் மூலம் மதவாத, சாதிய சக்திகள்  தனிமைப்படுத்தப்பட்டன. அதிமுக, திமுக இரண்டும் வேண்டாம் என்று எண்ணக் கூடியவர்கள் மத்தியில் இது ஒரு நம்பிக்கை பெற்ற அணியாக எழுந்தது. இந்த அணியின் சார்பில் குறைந்தபட்ச செயல்திட்டம், தேர்தல் அறிக்கைகள், வலுவான தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மிக குறுகிய காலத்தில் அணி உருவானதும், மாற்று திட்டங்களை மக்கள் மத்தியில் முழுமையாக எடுத்துச் சென்று மாற்றம் நோக்கி மக்களைத் திரட்ட போதிய அவகாசமின்மை போன்ற காரணங்களால் இந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.

தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. திமுக வலுவான எதிர்கட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வெளியில் இவ்விரு கட்சிகளும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரம் வகிக்கும் போக்கு இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது. குறிப்பாக அதிமுகவின் நலத் திட்டங்களும், தேர்தல் அறிக்கையின் இலவச அம்சங்களும், மின் கட்டண குறைப்பு, பயிர் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளும் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. இருப்பினும்  2014 நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது. அதிமுகவின் மீதான அதிருப்தியை திமுக அதிகம் அறுவடை செய்திருக்கிறது. அதிமுக, திமுக ஆட்சிகளால் பேணிப் பாதுகாக்கப்படுவோரும், அவர்களால் பலனடைவோருமான பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகள், கிராமப்புற பணக்கார பகுதியினரின் ஆதரவு இக்கட்சிகளின் வெற்றிக்குப் பேருதவி புரிந்துள்ளன. இது தான் தேர்தல் முடிவுகளின் அடிப்படையான அரசியல் பின்புலம்.

வரலாறு காணாத பண விநியோகம் என்பது பல விதங்களில் நுட்பமாகக் கீழ் வரை இறங்கியிருப்பது, தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கா விட்டாலும், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் இப்பிரச்னையைத் திறம்பட எதிர்கொள்ள இயலவில்லை. பண விநியோகத்தை ஒட்டி தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. தேர்தலின் போது திருப்பூரிலிருந்து 3 கன்டெய்னர் லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.570 கோடி குறித்து வெளிவரும் முரண்பட்ட தகவல்களால் இப்பணம் தேர்தல் பயன்பாட்டுக்கு கெண்டு செல்லப்பட்டதோ என்ற ஐயம் வலுவாக மக்கள் மத்தியில் ஏற்பட்டது. அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே பண விநியோகத்தை மறுக்கவில்லை.

ஊடகங்களைப் பொறுத்த வரை, அதிமுக, திமுக செய்திகளையே அதிகம் வெளியிட்டன. தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தமாகா அணியின் செய்திகள் அரிதாகவே இடம் பெற்றன. இறுதிக்கட்டத்தில் கிட்டத்தட்ட இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலை தான்.  இதன் காரணமாகவும், கருத்து கணிப்பு என்ற பெயரிலும் போட்டி பிரதானமாக இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் தான் என்ற தோற்றம் வலுவாக உருவாக்கப்பட்டது. இது மக்களின் முடிவுகளின் மேல் செல்வாக்கு செலுத்தியது.

இத்தேர்தலில் சாதிய சக்திகளும், மதவாத சக்திகளும் முன்னேறியிருப்பது தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அபாயத்தைத் தோற்றுவிப்பதுடன், சம நீதி சமூக நீதி கோட்பாடுகளைப் புறம் தள்ளும் சூழலையும் உருவாக்கும் என்பது கவலைக்குரிய அம்சம்.

நடைபெற்ற தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்து களமிறங்கிய தேமுதிக, ம.ந.கூ, த.மா.கா அணி தோல்வி அடைந்துள்ளது என்ற போதிலும், பணபலத்தையும், ஊடக பலத்தையும், பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்களின் பின்புலத்தையும், சாதிய மதவாத கருத்துக்களையும் பின்னுக்கு தள்ளி 6.5 சதமான வாக்காளர்கள் இந்த அணிக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது மாற்றுக்கான தேவையை வெளிப்படுத்துகிறது. இந்த உணர்வுகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றுக்கான முயற்சிகளை தொடரும், பலப்படுத்தும்.

தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்திருந்தாலும் மக்களின் இம்முடிவை ஏற்றுக்கொள்வதோடு, வரும் காலத்தில் மத்திய மோடி அரசின் மக்கள் விரோத தாராளமயக் கொள்கைகளை எதிர்த்தும், தமிழகத்தில் தொடர்ந்து மக்களின் வாழ்வாதார அழிவுக்கும், ஊழல் மயத்திற்கும் காரணமான திமுக, அதிமுக கட்சிகளின் கொள்கைகளுக்கு மாற்றாகவும் மக்கள் நலன் காத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்தும், சட்டமன்ற தேர்தலில் இணைந்து பணியாற்றிய கூட்டணி கட்சிகளோடும், இதர ஜனநாயக சக்திகளோடும் இணைந்து வலுமிக்க போராட்டங்களை முன்னெடுத்து செல்லும். ஜனநாயகப்பூர்வமாக தேர்தலை நடத்திட தேர்தல் சீர்திருத்தங்களுக்கான இயக்கத்தை வலுப்படுத்தும். இத்தகைய மகத்தான பணிக்கு பேராதரவினை அளித்திட வேண்டுமென தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...