மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சிபிஐ(எம்) கண்டனம்|நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சத்தீஸ்கர் மாநில பாஜக அரசின் முதல்வர் ராமன்சிங் தனது மருமகளின் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோரை அலைக்கழித்தும் 2 மற்றும் 3 நோயாளிகளை ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வைத்ததையும் பற்றி நவம்பர்  17  அன்று வெளியான ‘தீக்கதிர்’ நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பொறுத்துக் கொள்ள முடியாத சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களைப் பற்றி அநாகரீகமான முறையிலும் அராஜகமான முறையிலும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்களில் அவரது படத்தைப் போட்டு அவதூறு பரப்பியும் மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். அவரது எண்ணையும் இணைத்து அவருக்கு அலைபேசி வாயிலாக தொந்தரவு மற்றும் மற்றவர்களையும் வசைபாடக் கூறி செய்திகளை பரப்பி வருகின்றனர். தொடர்ந்து அலைபேசியில் அழைத்து வசைபாடி வருகின்றனர்.  இது ஒரு எதேச்சதிகாரமான செய்கையாகும். இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, நியூஸ் 7 தொலைக்காட்சி பத்திரிகையாளர்களையும் சங் பரிவார கும்பல்கள் இதுபோன்று தாக்கியுள்ளனர்.

கருத்துக்கு கருத்தால் பதில் சொல்ல திராணியில்லாமல், அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் பாலியல் ரீதியாகவும், ஆண்களாக இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற தனிமனித தாக்குதலையும் தொடுத்து வருகின்றனர்.

இச்செயலை தடுத்து நிறுத்தவும் சம்பந்தப்பட்ட கும்பல்கள் மீது தமிழக காவல்துறையும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...