மாற்றுத்திறனாளிகள் உலக தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

டிச.3, ஊனமுற்றோருக்கான 21-வது உலக தினம். இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆண்டை அனைவருக்குமான சமுதாயம் மற்றும் முன்னேற்றம் கண்டிட தடைகளை தகர்ப்போம், கதவுகளை திறப்போம்  என்ற கருப்பொருளோடு கடைப்பிடிக்க உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது. 

மாற்றுத் திறனாளிகளை உலகின் மிகப்பெரிய சிறுபான்மையினர் என ஐ.நா. குறிப்பிடுகிறது. வளர்ந்த நாடுகளைவிட இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில் இவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து தயாரித்த 2011 ஆண்டின் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய முதல் உலக அறிக்கை குறிப்பிடுகிறது. 2006 ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. கன்வென்ஷன் விதிகளை இந்தியாவும் கையொப்பமிட்டு ஏற்றுள்ளதோடு,  தற்போது  நாட்டில் அமலிலும் உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கருணை அடிப்படையில் பார்க்கக் கூடாது என்பதும் உரிமைகளின் அடிப்படையில்  பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதும் ஐ.நா. கன்வென்ஷன் விதிகளாகும்.

ஆனால், அடையாளச் சான்று முதல் எல்லாவற்றிலும் உதாசீனமும் பாரபட்சமும் இந்தியாவல்  நீடிக்கிறது.  உதாரணமாக இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளில் 40 சதவீதம் பேருக்குகூட அடையாள சான்று வழங்கப்படவில்லை என்பதும், மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய உருப்படியான கணக்கீடும் இல்லாததும் பெரும் குறையே.
ஒருவருக்கு 40 சதவீதம் ஊனமிருந்தாலே உதவித் தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வழங்க வேண்டுமென சட்டம் இருந்தும், இன்னும் தமிழகத்தில் அது கடைப்பிடிக்கப்படவில்லை.   முதியோருக்கு பென்ஷன் வழங்குவதற்கு உள்ள விதிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு பொருத்தி உதவித் தொகை கூட கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.   மாற்றுத்திறனாளி துறை மூலமே உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விகளில் 3 சதவிகித இட ஒதுக்கீடு தமிழகத்தில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.    இதற்கும் மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.  அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித வேலைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதில் தொடர்ந்து புறக்கணிப்பு நீடிப்பதையும், சமீப காலங்களில்  மாற்றுத்திறனாளி அமைப்புகள் நீதிமன்றத்திற்கு சென்று இது சம்பந்தமாக உத்தரவுகள் பெறுவதும் கவனிக்கத்தக்கது.  

வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் தமிழகத்தில் தொடர்ந்து போராடி வருவதும், அண்மையில் பார்வையற்றோர் தொடர் போராட்டம் நடத்தியதும் இதற்கு முன்னுதாரணம் ஆகும்.   மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் மிகக் கடுமையான முறையில் தீர்ப்பு வழங்கியதோடு மூன்று மாதங்களுக்குள் காலிப் பணியிடங்களை மத்திய மாநில அரசுகள் கண்டறிந்து மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை மதித்து நடவடிக்கை எடுத்திட மத்திய மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மாற்றுத் திறனாளிகள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களின் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொள்ளும். மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...

Leave a Reply