மாற்றுத்திறனாளிகள் உலக தினம் – சிபிஐ(எம்) வாழ்த்து

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

“அனைவருக்கும் நிலையான மற்றும் நெகிழ்வான சமுதாயத்தை நோக்கி மாற்றம் (Transformation towards sustainable and resilient society for all)” என்ற கருப்பொருளோடு இந்த ஆண்டு உலக தினத்தைக் கடைப்பிடிக்குமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா.சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக தின வார்த்தைகளும், உத்தரவாதங்களும் சம்பிரதாயமான ஒன்றாக இருந்துவிடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய உள்ளார்ந்த உணர்வுகளுடன் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் நல்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நமது நாட்டை பொருத்தவரை  மத்தியில் ஆளும் பாஜக அரசு, மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உரிமைகள் அடிப்படையில் பார்க்க மறுக்கிறது.  மாற்றுத்திறனாளிகள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாகவே புதிய உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. பின்னர் ஓராண்டு நிறைவடைகிற நிலையிலும் இதுவரை போதிய நிதியை ஒதுக்கவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.03 சதவிகிதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஒவ்வொரு அமைச்சகமும் / துறையும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனிப்பிரிவு ஒன்றைத் துவக்கி, அதன் கீழ் 5 சதவிகித நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் கோரி வருவது சரியானதே.

பட்டினிக் குறியீட்டில் மேலும் 3 புள்ளிகள் கீழ் இறங்கி,  மொத்த 117 உலக நாடுகளில் 100 இடத்திற்கு சமீபத்தில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.  இதன் தாக்கங்கள் நோஞ்சான் தன்மையுடனும் மாற்றுத்திறனாளியாகவும் ஆவதற்குமான எண்ணிக்கை அதிகரிக்கும்  என ஆய்வுகள் தெரிவிப்பதை அறிகிறபோது மேலும் அச்சம் ஏற்படுகிறது.

2016 ஜனவரியில் நிதி ஆயோக் வெளியிட்ட ஓர் அறிக்கையில் “மாற்றுத்திறனுடன் வாழ்ந்து வரும் மக்களிடையேயான வேலைவாய்ப்பு மிகக் குறைவாக வெறும் 34 சதவிகிதம் மட்டுமே உள்ளது” என ஒப்புக் கொண்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ்  2015-16 ஆம் ஆண்டுகளில் மொத்த சராசரியாக 0.63 சதவிகித மாற்றுத்திறனாளிகள் மட்டுமே  பயனடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில், அரசு தரும் உதவித்தொகையை நம்பி பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர்.  இந்த உதவித்தொகையை குறைந்தபட்சம் மாதம் ரூ.3000 ஆகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ. 5000 ஆகவும் உயர்த்தித்தர வேண்டுமென்ற கோரிக்கையை மாற்றுத்திறனாளிகள் முன்வைத்து தொடர்ந்து போராடி வரும் நிலையில், மத்திய அரசோ வெறும் 300 ரூபாய் மட்டுமே தனது பங்காக, அதுவும் மிகக் குறைந்த பயனாளிகளுக்கு மட்டுமே  மாநில அரசுகள் மூலம் கொடுக்கிறது. மொத்தமுள்ள மாற்றுத்திறனாளிகளில் 4 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற்று வருவதாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக அரசு புதிய உரிமைகள் சட்டத்திற்கான விதிமுறைகளை இன்னும் அரசிதழில் வெளியிட்டு சட்டத்தை அமல்படுத்தாதது கண்டனத்திற்கு உரியது.  40 சதவிகித ஊனம் உள்ள வேலை இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க 2016 பிப்ரவரி மாதமே அரசு உத்தரவிட்டும் கூட, இன்னும் முழுமையாக அமலாகவில்லை.  மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் பெரும் ஊழல் மற்றும் முறைகேடுகள் நிலவுகிறது. தனி துறை இருந்தும், நீண்ட காலமாக நிரந்தர அரசு செயலாளர், தனியான ஆணையர் கூட நியமிக்கப்படாத அவலம் நிலவுகிறது.
பெண் மாற்றுத்திறனாளிகள் மீதான பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதை மாநில அரசு கண்டுகொள்ளாமலேயே உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 2014 ஆம் ஆண்டு கேட்கும் பேசும் திறனற்ற சிறுமி கூட்டாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மோசடியான விசாரணை அறிக்கை தயாரித்துள்ள சி.பி.சி.ஐ.டி, பாதிக்கப்பட்ட சிறுமியையே பொய் வழக்கை ஜோடித்து, குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்தி உள்ள சம்பவம், இதுவரை வேறெங்கும் நடைபெறாதது.

எனவே, உலக அளவிலும் தேசிய அளவிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும் நியதிகளையும் நிலைநாட்ட முன்னெப்போதையும்விட மாற்றுத் திறனாளிகள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுடைய அனைத்து உரிமை சார்ந்த போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உற்ற துணையாக விளங்கும் என்பதை இந்த உலக தினத்தில் உறுதியுடன் தெரிவிக்கிறோம்.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...