மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா? க.கனகராஜ்

தமிழகம் மின்மிகை மாநிலமா?

அதிமுக அரசில் மின்வெட்டே இல்லை என்பது உண்மையா?

அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா?

நேற்று 20.7.20 தமிழகத்தின் மாண்புமிகு மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கீழ்க்கண்ட மூன்று விசயங்களை பிரதானமாக முன்வைக்கிறார்.

1. மார்ச் – ஜீன் மாதங்களில் மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லை. அதனால் யாரும் பாதிக்கப்படவில்லை.

2. கடந்த பத்தாண்டுகளில் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மின்வெட்டே இல்லை.

3. தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது.

இந்த மூன்று கூற்றுகளுமே உண்மைக்கு மாறானவை.

ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்;

மின் கட்டணக் கணக்கீடு

நான்கு மாதங்களுக்கான கட்டணத்தை இரண்டு தவணைகளுக்கு சமமாகப் பிரித்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார். இதனால், நிச்சயமாக நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக நான்கு மாதங்களுக்கும் ஒரு குடும்பம் ஒட்டுமொத்தமாக 1020 யூனிட் மின்சாரம் செலவு செய்ததாக வைத்துக் கொள்வோம்.

அமைச்சர் சொல்கிறபடி இதை சரிசமமாகப் பிரித்தால் இரண்டு மாதத்திற்கு தலா 510 யூனிட்டுகள் வரும். 510 யூனிட்டிற்கு 1846 ரூபாய். எனவே, நான்கு மாதங்களுக்கும் அந்த வீட்டுக்காரர் 3692 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும். மாறாக, முதல் இரண்டு மாதம் அவர் 500 யூனிட் செலவளித்திருந்தார், அடுத்த இரண்டு மாதம் 520 யூனிட் செலவளித்திருந்தார் என்றால் கட்டணங்கள் முறையே 1130 மற்றும் 1912 ரூபாய். அதாவது மொத்தம் 3042 ரூபாய் வரும். இரண்டுக்குமான வேறுபாடு 650 ரூபாய்.

இன்னொரு நுகர்வோரையும் எடுத்துக் கொள்வோம். நான்கு மாதங்களுக்கும் ஒட்டுமொத்தமாக அவர் 420 யூனிட் பயன்படுத்தியிருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் சமமாகப் பிரித்தால் 520 ரூபாய் செலுத்த வேண்டும். 200+220 என்று பிரித்துக் கொண்டால் 460 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். அமைச்சர் சொல்வது உண்மையல்ல என்பதற்கு இந்த இரண்டு உதாரணங்களும் போதுமானது.

முதல் உதாரணத்தின் படி 650 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். இரண்டாவது உதாரணத்தின் படி 60 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

இந்த லிங்க்கைப் பயன்படுத்தி கணக்கிட்டுக் கொள்ளலாம்:

https://bit.ly/32KHDak

இரண்டு மாதமும் சமமாக வந்திருக்கக் கூடாதா? என்ற கேள்வியை ஒருவர் எழுப்பக்கூடும். வந்திருக்கலாம்தான். ஆனால், சமமாக வராத நுகர்வோருக்கு ஏன் கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

வீட்டில் கொரோனாவின் காரணமாக ரீடிங் எடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? என்ற ஒரு நியாயமான கேள்வி எழுப்பப்படும். அதற்கு கொரோனாவிற் குமுந்தைய கடைசி கணக்கீட்டுக் காலத்தில் என்ன கட்டணம் செலுத்தியிருக்கிறோ அதையே அடுத்த இரண்டு கணக்கீட்டுக் காலத்திற்கு எடுத்துக் கொள்வதால் அரசுக்கு பெரிய நஷ்டம் வந்துவிடாது. ஆனால், தனிப்பட்ட நுகர்வோர் யாரும் பயன்படுத்தியதற்கு அதிகமாக பணம் செலுத்தும் தற்போதைய நிலை இருக்காது.

கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு எடுத்த முயற்சியால் மின்வெட்டே இல்லை என்பது உண்மையா?

இதுவும் உண்மைக்குப் புறம்பானது. அதிமுக அரசின் இந்த 10 ஆண்டு காலத்தில் சில திட்டங்களுக்கு அறிவிப்புகள் செய்யப்பட்டாலும் அந்த அனல்மின் திட்டங்களிலிருந்து இன்று வரையிலும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. மாறாக, 2006-11 காலகட்டத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது பல திட்டங்களை துவக்கி, அவையெல்லாம் இந்த 10 ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றன. அப்படி வந்த அனல்மின் திட்டங்களின் காரணமாக மட்டும் 2800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இது கீழே உள்ள பட்டியலில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

எனவே, அதிமுக அரசு எடுத்த முயற்சியால் மின்வெட்டே இல்லை என்பது உண்மைக்கு மாறானது. அவர்கள் அதிபட்சமாக அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம்.

மின்மிகை மாநிலமா தமிழகம்

தன்னிறைவு மாநிலம் என்றால் தனக்குத் தேவையான அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கிறது என்று பொருள். மின்மிகை மாநிலம் என்றால் தேவைக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று பொருள். தேவைக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் அது வேறு நிறுவனங்களுக்கோ வேறு மாநிலங்களுக்கோ விற்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டும் நடைபெறவில்லை.

மாறாக, 19.7.2020 அன்று 3580 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மின்சார வாரியத்தின் கணக்குப்படி இது நீண்ட கால, இடைக்கால, உடனடித் தேவைகளுக்காக வெளிச் சந்தையில் வாங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் தேவைக்காக தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை தன்னிறைவு என்று சொல்வதே தவறு, மின்துறை அமைச்சர் கூடுதலாகச் சென்று அது மின்மிகை மாநிலம் என்று கூறியிருப்பது இந்த அரசு ஏதாவது ஒன்றைச் சொல்லி தாங்கள் சிறப்பாக பணிபுரிவதாக மார்தட்டிக் கொள்வதற்கு முயற்சிக்கிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட விபரம்;

http://tnebldc.org/reports1/peakdet.pdf

க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...