மின்சார ஊழியர்களின் தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட தோழர் எஸ்.முத்துக்குமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். தோழர் எஸ்.முத்துக்குமாரசாமி தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தை சார்ந்தவர். விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ் இயக்க மூத்த தலைவருமான டி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களின் மூலம் கட்சியில் உறுப்பினார். 1973ல் மின் வாரியத்தில் கள உதவியாளராக பணியில் சேர்ந்தார். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த வேண்டுமென நடைபெற்ற ஏராளமான போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

இதன் காரணமாக பல முறை நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். நெல்லை மாவட்டத்தில் 820 ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர பணி ஆணை பெற முன்நின்று செயல்பட்டவர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவராகவும், 1987ல் தேர்வு செய்யப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினராகவும், மின் அரங்க இடைக்கமிட்டி செயலாளராகவும் திறம்பட செயல்பட்டவர். 2005ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் மின் வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பிலும், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும் செயலாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவருக்கு வயது 73. இசக்கியம்மாள் என்ற மனைவியும், சுரேஷ், சுந்தர் என் இரு மகன்களும், ராகவல்லி என ஒரு மகளும் உள்ளனர். மறைந்த தோழர் எஸ்.முத்துக்குமாரசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.


அவரது உடலுக்கு சிஐடியூ அகில இந்திய செயலாளர் கருமலையான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியூ மாவட்ட செயலாளர் மோகன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை மாவட்ட தலைவர் பீர்முகம்மது ஷா, செயலாளர் வண்ணமுத்து, பொருளாளர் கந்தசாமி, தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் காந்தி, நம்பி, மணி மற்றும் பெருமாள், ஜோதி உள்ளிட்டு பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...