மின்னணு வாக்கு இயந்திரத்துடன் வாக்குச் சீட்டுகளும் இணைத்திட வேண்டும்

பாஜகவினர் வெளிப்படையாகவே தாங்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து எப்படி வெற்றிபெற்றோம் என்று பேசிவருகையில், மின்னணு வாக்கு இயந்திரங்களுடன் வாக்குச்சீட்டுகளும் இணைக்கப்பட வேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தலைமைத் தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார். திரிபுரா மாநிலத்தில் பாஜகவின் தலைவரான பிப்லப் தேப் என்பவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “உத்தரப்பிரதேசத்திலும், மணிப்பூரிலும் தேர்தல் நடைபெற்றதைப் பார்த்தீர்கள், இல்லையா? மாணிக் சர்க்காரேதன் கட்சி சின்னத்தில் வாக்கைப் பதிவு செய்தாலும், மின்னணு வாக்கு இயந்திரத்தில் அவர் தாமரை சின்னத்திற்கு வாக்களித்ததாகத்தான் காட்டும். தைரியம் இருந்தால் மாணிக் சர்க்கார் இதற்காக என்மீது வழக்கு தொடரட்டும்,” என்று கூறியிருக்கிறார். இது திரிபுராவில் உள்ளசெய்தி ஏடுகளிலும், ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் வந்திருக்கிறது. அவற்றின் பிரதி ஒன்றை தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய சீத்தாராம் யெச்சூரி அத்துடன் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:“இத்துடன் மிகவும் ஆழமான விஷயம் குறித்த ஒரு செய்தியை தங்களுக்கு இணைத்திருக்கிறேன். இதன் பிரதி ஒன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழு சார்பாக நேரடியாகவும் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்துதான் வெற்றி பெற்றோம் என்று பகிரங்கமாக பாஜக திரிபுரா மாநிலத் தலைவர் பிப்லப் தேப் பேசியிருக்கிறார்.இவர் பேசிய கூற்றின்படியே நாடு முழுவதும்மக்கள் மத்தியில் பரவலாக மின்னணு வாக்குஇயந்திரங்கள் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சியினரின் இத்தகைய பேச்சுக்கள் தேர்தல் ஆணையத்தின்மீதான நம்பிக்கைகளைத் தகர்க்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளன. நாட்டில் நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்த வேண்டியது தேர்தல்ஆணையத்தின் கடமையாகும்.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேலி செய்யும் விதத்தில் பேசியிருப்பவருக்கு எதிராக தேர்தல் ஆணையம் கிரிமினல் நடவடிக்கை மேற்கொண்டு அவரைத் தண்டித்திட வேண்டும்.திரிபுரா மக்கள் மத்தியிலும் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்ற உறுதிமொழியையும் அளித்திட வேண்டும்இத்தகைய வளர்ச்சிப்போக்குகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மின்னணு தேர்தல்இயந்திரங்களுடன் வாக்காளர் சரிபார்த்திடும் தாள் (VVPAT—Voter verified Paper Audit Trail)இணைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். வரவிருக்கும் தேர்தலில்வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய சின்னத்திற்குத்தான் வாக்களித்திருக்கிறோம் என்பதைஉறுதி செய்துகொள்வதற்கு இது பயன்படும்என்றும் அதன்மூலம் தேர்தல் ஆணையத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...