மின்வெட்டை சமாளிக்க டீசலுக்கு‍ மான்யம் வழங்கக் கோரியும் – டெங்குவை தடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் 17-ல் மெழுகுவர்த்தி ஏற்றி தொடர் முழுக்கப் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் கே.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் அவர்கள் தலைமையில் 9.11.12 வியாழனன்று திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, கடுமையான பொருளாதார விளைவுகளையும் தாங்கொணா துயரத்யும் தமிழக மக்கள் தலையில் சுமத்தியுள்ளது. ஆண்ட திமுக-வும் ஆளும் அதிமுக-வும் பரஸ்பர குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். ஆனால், இரண்டு கட்சிகளும் இருண்ட நிலைக்கு சமமான பொறுப்பாளிகள். 1995-க்குப் பிறகு 17ஆண்டுகளில் வெறும் 516 மெகாவாட் மட்டுமே தமிழக மின் வாரியத்தால் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மின்சார சட்டம் 2003, பிஜேபி தலைமையின அரசாங்கத்தால் கொண்டு வரப்படடது. அதன் நோக்கம் தனியார் மயமும் வணிகமயமும் மட்டுமே. அந்தச் சட்டத்தை அப்போது பாஜக வின் கூட்டணியில் இருந்த திமுக, மதிமுக, பாமக ஆகிய தமிழக கட்சிகள் ஆதரித்தன. எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரசும் ஆதரித்தது. அதிமுகவும் ஆதரித்தது. இடதுசாரி கட்சிகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். தனியர் மயமாக்கும் திட்டத்தை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலயே திமுக, அதிமுக இரண்டு அரசாங்கங்களும் புதிய திட்டங்களை நிறைவேற்றவில்லை. தமிழக முதலமைச்சர் மின்வெட்டு தீர அடுத்த ஆண்டு வரை பொறுத்திருக்க வேண்டுமென்கிறார்.  அது நீண்டகால தீர்வு, உடனடி தீர்வு அளிக்கவில்லை. இப்போதே சிறு சிறு  நடுத்தரத் தொழில்கள் கடுமையான பாதிப்படைந்திருக்கின்றன. கடைகள், வர்த்தக நிறுவனங்களும் கடும் சிரமத்தை எதிர் கொள்கின்றன. இன்னும் சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் இத்தொழில்கள மீள முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம்.

எனவே, தமிழக அரசாங்கம் தமிழகம் முழுவதுமுள்ள தனியார் ஜெனரேட்டர்களை கட்டாயமாக இயக்க வைக்கவும் அப்படி இயங்கும் ஜெனரேட்டர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கவும் முன்வர வேண்டும்.

இதே போன்று தமிழகத்தில் நிலவும் சுகாதாரக் கேடுகளால் டெங்கு காய்ச்சல் பரவுவதால் இறப்போர் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.  மருத்துவமனைகளிலும் போதுமான சிகிச்சை வசதிகள் இல்லை என்கிற நிலையும் உள்ளது. டெங்கு காய்ச்சல் இந்தியா முமுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. நவம்பர் 5 வரை டெங்குவால் பாதிக்கப்பட்ட 32,263 பேரில் 8482 பேர் (26.3) தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்தியா முழுவதும் இறந்த 188 பேர்களில் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 பேர் (28.7). இவையெல்லாம் தமிழகத்தில் சுகாதாரக்கேடு அதிகமாக நிலவுவதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய வசதிகள் இல்லாததையும் அம்பலப்படுத்துகின்றன.

மின்வெட்டு, குடிநீர் தினசரி கிடைக்காததால் தேக்கி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம், சுகாதாரம் பேணுவதை தனியாரிடம் விடப்பட்டதால் ஏற்பட்டுள்ள தேவை குறைவு, முன்கூட்டியே தடுப்பதற்கும் சிகிச்சைக்குமான ஏற்பாடுகள் செய்யாத நிர்வாக மெத்தனம் ஆகியவையே காரணம். எனவே, டெங்குவை தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை வழங்கவும், இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 17 அன்று மாவட்ட தலைநகரங்களில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை மெழுகுவர்த்தி ஏற்றி தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply