மின் இணைப்பு கட்டண உயர்வை திரும்ப பெறுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (08.10.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மின் இணைப்பு கட்டண உயர்வை திரும்ப பெறுக!

தமிழக மின்வாரியம் மின் இணைப்பு கட்டணத்தை செங்குத்தாக உயர்த்தி தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. வீடுகள் மட்டுமின்றி தொழில், வர்த்தகம் சார்ந்தவர்களையும் இது கடுமையாகப் பாதிக்கும்.

வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கான கட்டணங்களை பொறுத்தவரை மின் கம்பங்கள் (ஓவர்ஹெட்) வழியாக வழங்கப்படும் ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ. 1600/- என்று இருந்த கட்டணத்தை ரூ. 2800/- ஆகவும், புதைவட கம்பிகள் (கேபிள்) மூலம் வழங்கப்படும் ஒருமுனை இணைப்பு வசதிக்கு ரூ. 6400/-ஆகவும், மும்முனை இணைப்பு கட்டண தொகையை ரூ. 7450/-என்பதை மின்கம்பங்கள் மூலம் வழங்கப்படும் மும்முனை மின் இணைப்புக்கு ரூ. 11,550/-ஆகவும், புதைவட கம்பிகள் (கேபிள்) மூலம் வழங்கப்படும் மும்முனை இணைப்புக்கு (5 KWH) ரூ. 19,050/-என, பல மடங்கு உயர்த்தி மக்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளது. மேலும் மின்இணைப்பு துண்டிப்பிற்கான அபராதக் கட்டணம் ரூ.60/என்றிருந்ததை, ரூ.100, ரூ. 150, ரூ. 450 என்று உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கைகளால் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த கட்டண உயர்வு மேலும் துயர் அளிப்பதாக உள்ளது.

மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியபோது அக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்துகொண்டதோடு, இக்கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டுமெனவும், கட்டண உயர்வை தவிர்க்க மாற்று வழிமுறைகளை கையாள வேண்டுமெனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு, மனுவும் அளிக்கப்பட்டது.

குறிப்பாக, காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் கையாளப்படும் தவறான பேங்கிங் முறை மற்றும் அதிகப்படியான கொள்முதல் கட்டணத்தை கைவிட வேண்டும், அதானி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அநியாய சூரிய ஒளி மின்சாரக் கட்டண கொள்முதல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி மின் இணைப்பு கட்டண உயர்வை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தமிழக மின்சார வாரியமோ இவ்வாறு வந்த ஆலோசனைகள் எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் மக்களை கடுமையான பாதிக்கும் வகையில் பலமடங்கு மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மின்வாரியம் உடனடியாக இந்த மின் இணைப்பு கட்டண உயர்வினை முழுமையாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...