மியாட் மருத்துவமனையில் 18 நோயாளிகள் சாவு விசாரணை நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னை மணப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள தனியார் மியாட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 18 நோயாளிகள் செயற்கை சுவாசக் கருவி செயல்படாததால் பலியான சம்பவம் வேதனைக்குரியதாகும்.

சமீபத்திய கனமழை வெள்ளத்தால் அடையாறு ஆற்றின் உபரிநீர் இம்மருத்துவமனைக்குள் புகுந்ததை தொடர்ந்து மின்தடையும், தரை தளத்தில் உள்ள ஜெனரேட்டர் இயக்கமும் பாதிக்கப்பட்டதாகவும், ஜெனரேட்டர் இயக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கான செயற்கை சுவாசத்திற்கான (வெண்டிலேட்டர்) கருவிகள் இயங்காததால் 18 நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு, சுவாசக் கருவிகள் செயலிழப்பால் ஏற்படவில்லை – உடல் நலக்குறைவு காரணமாகத்தான் 18 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவதாகவும் செய்திகள் உள்ளன. உண்மையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் செய்திகள் உள்ளன.

ஹெலிபேட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட மியாட் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மேற்கண்ட துயர சம்பவம் மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 18 பேர் உயிரிழப்புக்கு மருத்துவமனை தெரிவிக்கும் விபரங்களும், அரசு தரப்பு செய்திகளும் முரண்பட்டதாக உள்ளன – உயிரிழப்பிற்கு உண்மைக் காரணம் என்ன?. மருத்துவமனை ஆற்றங்கரையோரம் தாழ்வாக உள்ள பகுதியில் செயல்படும் நிலையில் விதிகளுக்கு உட்பட்டு மருத்துவமனை கட்டமைப்புகள் உள்ளனவா?, பேரிடர் நிகழ்வுகளின் போது தேவையான உபரி இருப்பு கருவிகள், உயிர்காப்பு சாதனங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளனவா?, செயற்கை சுவாசக் கருவி தடையினால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?, மின்தடை காரணமாக சுவாசக் கருவி செயல்படவில்லை எனில் உடனடியாக மாற்று ஜெனரேட்டர் ஏன் ஏற்பாடு செய்யப்படவில்லை? என கேள்விகள் தொடரும் நிலையில் – இந்த துயரச் சம்பவம் குறித்து புலனாய்வு அதிகாரிகள், நிபுணர்கள், வல்லுநர்கள் கொண்ட விசாரணைக்குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிடவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அனைத்து மருத்துவமனைகளிலும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...