மீன்கள் நீரில்தான் இருக்க வேண்டும்! – உ.வாசுகி

தண்ணீருக்கும் மீனுக்கும் இருக்கும் தொடர்பைப் போல மக்களுடன் உயிரோட்டமான உறவை மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்புடன் இருக்கிறது. களத்தில்மக்களுடன் நிற்கிறது. மக்களை நேரடியாக சந்தித்துக் கொண்டே இருக்க, கட்சியின் விருதுநகர் மாவட்டக் குழு எனக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது.

ஆறுதல் மட்டும் சொல்லியிருந்தால்…

விருதுநகர் மாவட்டத்தின் 6 தாலுகாக்கள் பட்டாசுத் தொழிலை நம்பியிருக்கின்றன. பட்டாசு வெடி விபத்துக்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே நீடிக்கின்றன. ஒரு முறை சாத்தூர் தாலுகா எலுமிச்சங்காய்பட்டியில், ஒரே தெருவில் 8 அருந்ததிய தொழிலாளிகள் விபத்தில் பலியானார்கள். தோழர்களுடன் அப்பகுதிக்கு சென்றோம். அழுது தவித்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், அதிகாரிகள் இழப்பீட்டு காசோலை கொடுத்து விட்டார்கள் என்றார். காட்டுங்கள் எனக் கேட்டு வாங்கிப் பார்த்தோம். அரசு கணக்கிலிருந்தும் இல்லை, கம்பெனி முதலாளியின் பேரிலும் இல்லை. யாரோ குப்புசாமி, கந்தசாமி என்ற ரீதியில் கையொப்பமிட்டிருந்தார்கள். உடனடி யாக வங்கிக்கு சென்று காசோலையை மாற்றி பணம் வாங்கக் கூறினோம். எதிர்பார்த்தபடியே, கணக்கில் பணம் இல்லை என்று சொல்லி விட்டனர். நெருங்கிய உயிரைப் பலி கொடுத்த வர்களிடம் பணம் இல்லாத காசோலையைக் கொடுத்து ஏமாற்றுகிற கொடுமையை என்னவென்று சொல்வது? உடனடியாக ஊடகவிய லாளர்களை வரவழைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பேச வைத்தோம். செய்தி பரபரவென்று பற்றிக் கொள்ள, பதறிப் போன அதிகாரிகள் அவசர அவசரமாக காசோலைகளைத் திரும்ப வாங்கிக் கொண்டு, பணமுள்ள காசோலைகளாக மாற்றிக் கொடுத்தனர். ஆறுதல் மட்டும் சொல்லி விட்டு அப்படியே திரும்பியிருந்தால் மோசடியைக் கண்டுபிடித்திருக்க முடியாது.

‘வரிசையில் நிற்பேன்…

கால் வலிக்கும்…’

பணமதிப்பு நீக்க சமயத்தில் விருதுநகர் ஒன்றியத்தில் கூரைக்குண்டு என்ற பகுதிக்கு மாலை 7 மணியளவில் சென்றோம். பெண்கள் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, ஆண்கள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர். பெண்களிடம் அரசியல் பேச ஆரம்பித்தோம். குடிநீர் அங்கு பிரதான பிரச்சனை. 1.5 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நல்ல தண்ணீர் வருகிறது, நாங்கள் தலித் பகுதி என்பதால் இங்கு வரவில்லையா எனக் கோபமாகப் பேசினார்கள். பண மதிப்பு நீக்கம்

குறித்து பேச்சு திரும்பியது. பிரதமர் மோடியைப் போட்டு துவைத்து எடுத்துவிட்டனர். ஏற்கெனவே சாராய கடையைப் போராடி அகற்ற உதவினோம் என்பதால் நம்பிக்கையுடன், அடுத்து நடந்த கட்சி ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டையில் சமூக விஞ்ஞான கழகத்தின் சார்பில் வீதி விவாத மேடை, பணமதிப்பு நீக்கம் குறித்து நடந்தது. மக்கள் பரவலாக அமர்ந்திருந்தனர். வங்கி ஊழியர் இயக்கத் தோழர்கள் முதலில் பிரச்சனை குறித்து விளக்கினார்கள். பிறகு பார்வையாளர்கள் பேசத்துவங்கினர். கட்டுமான பெண் தொழிலாளி ஒருவர், ஒரு நாள் சம்பளம் ரூ.300ஐ இழந்து வங்கி வாசலில் நின்றால் தான் பணம் எடுக்க முடிகிறது. இழந்த வருமானத்தை மோடி தருவாரா என்று கேட்டார். ஓய்வூதியர் ஒருவர், எனது ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து எடுக்க 10 முறைக்கு மேல் போக வேண்டியிருந்தது. வரிசையில் நிற்பேன், கால் வலிக்கும், வீடு திரும்பி விடுவேன். 10வது முறை தான் கால் வலி வரும் முன் பணம் எடுக்க முடிந்தது” எனப் பகிர்ந்து கொண்டார். ஒரு பொறியியல் கல்லூரி மாணவர், நீண்ட நேரம் தனது பைக்கை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மைக்கைக் கையில் வாங்கி, இது நல்லதா கெட்டதா என்றே தெரியவில்லை, ஒரே குழப்பமாக இருக்கிறது என ஆதங்கப்பட்டார். ஒரு கல்லூரி மாணவி, ஜெராக்ஸ் எடுக்க சில்லரை மாற்றவே நேரம் ஆகி விடுகிறது, வகுப்பை மிஸ் பண்ண வேண்டியிருக்கிறது, யார் கேட்டார்கள் இந்த அரசை என்று அலுத்துக் கொண்டார். பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினோம். அடுத்த நாள் காலை அப்பகுதியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கு ஆர்.எஸ்.எஸ். வகையறா யாரோ போன் செய்து, கடுமையாகத் திட்டியிருக்கிறார். தோழர் எனக்கு தொடர்பு கொண்டு, எதிரிகளுக்குக் கோபம் வந்து விட்டது, எனவே சரியாகவே பேசியிருக்கிறோம் என்று மகிழ்ந்தார்.

பயம் நீங்காக் கண்களுடன்…

திருவில்லிப்புத்தூர் தாலுகா கே.தொட்டிய பட்டியில், கொடுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி, அரசு போட்ட குழாயில் தண்ணீர் பிடித்த மாபெரும் ‘குற்றத்துக்காக’ அருந்ததிய பகுதி வீடுகள், இதர சாதியைச் சேர்ந்தவர்களால் தாக்கி நொறுக்கப்பட்டன. சைக்கிள் எரிந்து கிடக்க, குழந்தைகளின் பள்ளிப் பைகள் கருகிக் கிடக்க, பெரிய பெரிய கற்கள் வீட்டுக் கூரையை நொறுக்கிப் போட்டிருந்தன. உடனடியாக காப்பீட்டு அரங்கம், மின் அரங்கத் தோழர்கள் உதவிக்கரம் நீட்டினர். மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஒரு நாள் உணவு ஏற்பாடு செய்து விட்டுக் கைவிட்டு விட்டது. தோழர்கள் அதிகாரிகளிடம் பேச முயற்சித்தார்கள். காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் மக்களுக்கு உணவு கொடுத்து விட்டு அதிகாரிகளிடம் போகலாமே என்றதும், செல்வம் ஊறுகாய் உரிமையாளர் அன்புத் தோழர் பாக்கியராஜிடம் விஷயத்தைச் சொல்ல, மறு பேச்சு இல்லாமல் அவர் கொடுத்த நன்கொடையில் மக்களின் வயிறு நிரம்பியது. பிறகு அதிகாரிகளும் படிந்தனர். சிறுமி ஒருத்தி பயம் நீங்கா கண்களுடன், எங்களைத் தாக்க வந்தவர்களில் என்னுடன் பள்ளியில் படிக்கும் மாணவனும் வந்தான் என்று வேதனையுடன் கூறினாள். எங்களைத் தான் பள்ளியில் கழிப்பறை கழுவச் சொல்கிறார்கள், நீங்கள் கொஞ்சம் கேட்டுக் கொடுங்கள் என்றும் மாணவ, மாணவிகளிடம் இருந்து கலங்கிய

கண்களுடன் வேண்டுகோள் வந்தது. செய்தியைப் பார்த்துவிட்டு சவூதியிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 50 குடும்பங்களுக்கு பாத்திரங்கள் வாங்கிக் கொடுக்கும் ஏற்பாட்டுக்கு உதவுவதாக நெகிழ்ந்தார். அரிசி, பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரணம், அதிகாரிகள் கை விரித்த போது உணவு, பாத்திரங்கள், அதிகாரிகளிடம் பொருத்த மான கோரிக்கைகள் வைப்பு, மக்களைத்திரட்டி போராட்டம் என்று நடவடிக்கைகள் விரிந்தன. ஓரளவு நியாயம் கிடைக்க இந்நடவடிக்கைகள் உதவின.

அந்த உடலில் சிறு மண் துகள் கூட இல்லை…

இரண்டு தலித் இளைஞர்களைக் காவல்துறை அடித்துக் கொன்றிருக்கும் என யூகிக்க வைக்கும் மரணங்கள். குழந்தைகளுடன், அழுது அழுது வீங்கிய கண்களுடன் இளம் மனைவிகள். என்ன ஆறுதல் சொல்ல முடியும்? கூடி நின்ற மக்கள், இளைஞர்கள் ஆத்திரத்துடன் கூறினார்கள். முதலில் மண் சரிந்து செத்தார்கள் என்று போலீஸ் சொன்னது. ஆஸ்பத்திரியில் உடல்களைப் பார்த்தால் ஒரு சின்ன மண் துகள் கூட இல்லை. அடித்து ரத்தம் வழிந்த காயங்கள் இருந்தன. கழுத்து திரும்பியிருந்தது; கை, கால் முறிக்கப்பட்டி ருந்தன; தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் கம்யூனிஸ்ட் கட்சியும் உதவி செய்து, புகார் கொடுத்தோம்; கொடுத்த உடனே, போலீசிட மிருந்து தப்பி ஓடியபோது, மின் வேலியில் சிக்கி இறந்துவிட்டார்கள் என்று அடுத்த கதையைக் காவல்துறை அவிழ்ந்துவிட்டது; உரிமையாளரைக் கைதும் செய்து வைத்திருந்தது, ஆனால் எப்போதோ போட்டது; தற்போது மின் இணைப்பு இல்லை என்பது தான் நிலை! மனைவி கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை இல்லை; போலீஸ் சொன்னபடி மனு கொடுத்த சகோதரனின் புகாருக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை…

கிடைத்த விவரங்களுக்கு ஏற்ப வலுவான தலையீடுகள் செய்யப்பட்டன. நீதிக்கான சிறு வெளிச்சம் தெரிகிறது.

போராட்டம் நடத்தினால் வருவீர்களா?

இராஜபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியின் மக்களையும் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம். தண்ணீர் பிரச்சனை தான். முதலில் மைக்கில் பேசத் தயங்கினர். பெண்கள். உற்சாகப்படுத்திப் பேச வைத்தோம். பிறகு ரேஷன், பட்டா பிரச்சனைகளைப் பிய்த்து உதறினர். போராட்டம் நடத்தினால் வருவீர்களா என்று கேட்ட போது, வருவோம் என்றனர். உடனே அங்கேயே தோழர்கள் ஒரு தேதி குறிப்பிட, அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் போராட்டமும் சிறப்பாக நடந்து சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

இத்தகைய கலந்துரையாடல்கள் பாதிப்பு களையும், வேதனைகளையும் சரியாக உணர்த்து கின்றன. கோரிக்கைகளை உருவாக்கவும், போராட்ட வடிவங்களைத் தீர்மானிக்கவும் உகந்ததாக உள்ளன. மக்களுடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது நிறைவைத் தருகிறது. அவர்களது சந்தேகங்களுக்குத் தகுந்த பதில்களை அளிக்க முடிகிறது. ஆள்வோர் மீது கோபம் கொள்கிறார்கள் மக்கள். அணி திரட்டிப் போராடி நிவாரணமும் பெற்றுத் தர முடிகிறது. இது ஒரு பகுதி தான். தொடர்புகளை ஸ்தாபனப்படுத்தி அரசியல்படுத்தும் அடுத்த பகுதி முக்கியமானது. அதற்கான ஸ்தாபன போராட்டத்தைத் தொடர வேண்டியிருக்கிறது. அத்தகைய பணிகளின் சங்கமமாகத்தான் தமிழகம் முழுவதும் கட்சியின் மாவட்ட மாநாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எத்தனை பள்ளியில் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாத விவரங்களை களப் போராட்டங்கள் நமக்கு சொல்லித் தருகின்றன. அந்தப் போராட்டங்களின் அனுபவங்களை உள்வாங்கி, மேலும் மேலும் நமது களம் நோக்கிச் செல்வோம்… வெல்வோம்…!

 

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...