முதலமைச்சர் அறிவிப்புக்குப்பின் நான்காவது கௌரவக் கொலை!

சிவகங்கையில் கௌரவக் கொலை: முதலமைச்சர் அறிவிப்புக்குப்பின் நான்காவது கொலை: தனிச்சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சிவகங்கை மாவட்டம், உடைகுளம், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தங்கராஜ் (45) மகள் தமிழ்செல்வி (19). அதே ஊரைச் சார்ந்த தலித் சமூகத்தவரான பூமிநாதன் (27) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கேரளா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தங்கராஜ் தனது மகளை மீட்டுத் தரக்கோரி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் இருந்த தம்பதிகளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி தமிழ்ச்செல்வியை அவரது பெற்றோருடன் காவல்துறை அனுப்பி வைத்துள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தனது மகள் திருமணம் செய்து கொண்டார் என்ற ஆத்திரத்தில் தங்கராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனது மகளை அடித்துக் கொன்று பிணத்தை எரித்துள்ளார். காவல்துறை தங்கராஜை கைது செய்தபோது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இக்கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதியின் பெயரால் நடைபெற்றுள்ள இக்கௌரவக் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 42 கௌரவக் கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்று வலியுறுத்தியபோது, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் கௌரவக் கொலைகள் எதுவுமே நடைபெறவில்லை. ஆகவே, தனிச்சட்டம் நிறைவேற்றத் தேவையில்லை என அறிவித்தார். அவர் அறிவித்த இரண்டு வாரங்களில் சிவகங்கையில் நடந்திருப்பது நான்காவது கௌரவக் கொலை. முதலமைச்சரின் அறிவிப்பிற்குப் பிறகு தேனி, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. ஆகவே, தமிழகத்தில் கௌரவக் கொலையைத் தடுக்க உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...