‘முதலாளித்துவத்தின் சதித்திட்டத்தை முறியடிக்க, தொழிலாளி வர்க்கமே ஆயுதம்’

சென்னையில் ஜனவரி 23 முதல் 27 வரை நடைபெற்று வரும் சிஐடியுவின் 16வது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் மக்வாயிபா இன்று காலை மாநாட்டு வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தோழர் மைக்கேல் அவர்களை அறிமுகப்படுத்திப் பேசிய சிஐடியுவின் சர்வதேச துறையின் தலைவர் தோழர் தேப்ராய் கூறுகையில் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் உலகத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். சிஐடியுவின் இந்த மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு தருணத்தில் நிகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு இந்திய மண்ணில் முதன்முதலாக தோன்றிய அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் (AITUC) நூறாவது ஆண்டாகவும், இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) 50 ஆண்டாகவும், உலகத் தொழிற்சங்க கூட்டமைப்பின் (WFTU) 75வது ஆண்டாகவும் திகழ்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். பின்னர் தோழர் மைக்கேல் பத்திரிக்கையாளர்களிடையே உரையாற்றினார். பின்வருமாறு…

உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புதான் உலகத் தொழிற்சங்க கூட்டமைப்பு என்பதைக் குறிப்பிட்டு தனது உரையை தொடங்கிய தோழர் மைக்கேல் தமது அமைப்பு இந்திய தொழிலாளி வர்க்கத்தோடு ஒன்றிணைந்த ஓர் அமைப்பும் ஆகும் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய மாநாடுகளை உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் எந்த அளவிற்கு தொழிலாளி வர்க்கத்தை அமைப்புரீதியாக அணிதிரட்டியிருக்கிறோம் என்பதை மதிப்பிடுவதற்காகவே நடத்தி வருகின்றன. இன்று உலகம் முழுவதிலுமே தொழிலாளி வர்க்கம் அனைத்து வகையிலும் முதலாளித்துவத்தின் தாக்குதலை சந்தித்து வருகிறது. வேலை அல்லது வேலையின்மையின் அளவு, சிக்கன நடவடிக்கைகள், ஓய்வூதியக் குறைப்பு, மருத்துவ வசதிகள் வெட்டிக் குறைப்பு ஆகிய நடவடிக்கைகளை ஆளும் வர்க்கங்கள் முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே எடுத்து வருகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ள இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் எந்த அளவிற்கு அணிதிரண்டுள்ளது என்பதில் தான் இத்தகைய தாக்குதல்களின் தீவிரம் அடங்கியுள்ளது.

உலகம் முழுவதிலுமே தொழிலாளிகள் போராடி வென்றுள்ள உரிமைகளை வெட்டிக் குறைக்க முதலாளித்துவம் முயற்சித்து வருகிறது. உழைக்கும் மக்கள் பிரிவினரில் பாதிக்கும் மேற்பட்டவர்களாக பெண்கள் இருக்கும் நிலையில் அவர்களது குறிப்பான பிரச்சனைகளின் மீதும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சமூக அளவில் வகுப்புவாத சக்திகளின் தாக்குதல்களை இந்திய தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டு வருவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தோழர் மைக்கேல், பல்வேறு வழிகளில் தொழிலாளி வர்க்கத்தை பலவீனப்படுத்த முதலாளித்துவம் முயன்று வருகிறது என்றும் அது ஒவ்வொரு இடத்திற்கும் நாட்டிற்கும் ஏற்றாற்போல் வகுப்புவாதம், பிரதேச வெறி, மொழி வெறி மற்றும் இதர அடையாளங்களின் மூலம் உழைக்கும் மக்களைப் பிரிக்கப் பயன்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டார். இந்த வகையில் இந்திய தொழிலாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்றே உலகத் தொழிற்சங்க கூட்டமைப்பு விரும்புகிறது என்று குறிப்பிட்ட தோழர் மைக்கேல், முதலாளித்துவத்தின் சதித்திட்டங்களை முறியடிக்கவும், தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான வலிமையை எடுத்துக் காட்ட அவர்களின் ஒற்றுமை என்பதே ஒரே ஆயுதமாகும் என்பதை வலியுறுத்தினார்.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...