முதல்வருக்கு கடிதம் எழுதினால் எம்.பி.யையே மிரட்டுவதா அமைச்சர் உதயகுமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று தினம்தோறும் 100 என்ற எண்ணிக்கையை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில், தோழர் சு.வெங்கடேசன் நோய்த்தொற்றை தடுக்கவும், சோதனையை அதிகரிக்கவும் உரிய சிகிச்சையளிக்கவும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நோய்த்தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “ மதுரை மாவட்டத்தில் தொற்று பரவும் வேகமானது 7.9 சதவீதமாக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளதை சுட்டிக்காட்டியிருந்ததோடு,  இதே ரீதியில் சென்றால் ஜூலை 21-ஆம் தேதி மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,883 ஆக இருக்கும் என்பதையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இவர்களை கண்டறிந்து சிகிச்சையளிக்க இனிவரும் நாட்களில் குறைந்தபட்சம் தினம்தோறும் 9,500 பேரை சோதனை செய்தாக வேண்டுமென்றும், இவர்களுக்கு சிகிச்சையளிக்க தற்போதுள்ள மருத்துவமனை மற்றும் கொரோனா நலவாழ்வு மையங்களையும் சேர்த்து 5,000 படுக்கைகளாவது ஏற்படுத்த வேண்டும்”  என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இதுகுறித்து எடுத்துக்கூறியும் எதுவும் நடக்கவில்லையென்று சுட்டிக்காட்டியிருந்தார். மதுரை மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனைக் கருவிகளை இரட்டிப்பாக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “முதல்வருக்கு கடிதம் எழுதுவதாக கூறி, எம்.பி., வெங்கடேசன் மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறார் என்று அபாண்டமாகக் கூறியுள்ளார். அத்தோடு நிற்காமல், தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளார்.” ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தன்னுடைய தொகுதி மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி கவனத்தை ஈர்ப்பது பீதியைக் கிளப்புவதாகுமா? மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளையே இவ்வாறு திசைதிருப்பி மிரட்டும் அமைச்சர் சாதாரண மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பாரா?

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில சுகாதாரத்தறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “சென்னை நிலை மதுரைக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், நிலைமையின் விபரீதத்தை உணராமல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்கள் பிரதிநிதிகளையே மிரட்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் இந்தப் போக்கை கைவிட்டு மதுரை உட்பட தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு, நிவாரணப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.


கே.பாலகிருஷ்ணன்,
மாநிலச்செயலாளர்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...