முதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய (24.09.2018) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் – 1

ஊழல் புகார்களில் சிக்கியுள்ள

தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்

உடனடியாக பதவி விலக வேண்டும்

வருமான வரி சோதனைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக!

சமீப மாதங்களாக தமிழக முதல்வர், துணை முதல்வர், சில அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவர்களின் தொடர்புடைய இடங்களில் அவ்வப்போது வருமானவரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, ரெய்டுகளும் நடக்கின்றன. முதல்வர், துணை முதல்வர் மீது சொத்துக் குவிப்பு குறித்த வழக்கு பதிவாகி விசாரணை நடைபெறுகிற நிலை உருவாகியுள்ளது.

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஒப்பந்த நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டுகளில் பெருமளவு பணமும், தங்கமும், பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிறுவனம் முதலமைச்சரின் உறவினர்களோடு தொடர்புடைய நிறுவனம் என்ற செய்திகளும் வந்தன.

சென்னை குட்கா நிறுவனத்தில் நடந்த ரெய்டில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், முன்னாள் காவல்துறை சென்னை ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு கோடிக்கணக்கில் மாமூல் கொடுத்துள்ளது வெளியாகியுள்ளது.

தமிழக சத்துணவு திட்டத்திற்கு பருப்பு சப்ளை செய்யும் கிறிஸ்டியன் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் முறைகேடுகளும், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பும், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன. தொடர்ச்சியான வருமான வரி சோதனைகள் நடைபெற்ற போது  பலநூறு கோடி பணம், சொத்து குறித்த ஆவணங்களும், தங்கமும், கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்த போது ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்ததாகவோ, கைது செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை. இந்நிறுவனங்களின் மீது தொடர் நடவடிக்கை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

ஆளும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மீது லஞ்ச – ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இவர்கள் இனியும் பதவிகளில் நீடிப்பதை ஏற்க முடியாது. இவர்களின் மீதான விசாரணைகள் நியாயமாக நடைபெற வேண்டுமானால்  புகார்களில் சிக்கியுள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமெனமெனவும், அரசியல் தலையீடுகள் ஏதுமின்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட  வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...