முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவரை, 1.08.2018 அன்று முதுகுளத்தூர் காவல் நிலையத்தைச் சார்ந்த கோதண்டபாணி, லிங்ககிருஷ்ணன் மற்றும் இரண்டு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 02.08.2018 அன்று மணிகண்டனை விசாரிக்கச் சென்ற அவருடைய தாயாரிடம் முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இந்த வழக்கிலிருந்து மணிகண்டனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ. 85,000/- லஞ்சம் கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மணிகண்டனின் தாயார் பணம் கொடுக்காததால் மணிகண்டனை காவல்நிலையத்திற்குள் வைத்து கடுமையாக அடித்து, உதைத்து, சித்தரவதை செய்ததன் பேரில் 03.08.2018 அன்று மணிகண்டன் காவல்நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். முதுகுளத்தூர் காவல்துறை அதிகாரிகளின் இந்த லாக்கப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் இந்த லாக்கப் படுகொலையை மூடி மறைக்க முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு தருவதாகவும், மணிகண்டன் மரணத்தை பிரச்சனையாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதை அவர்கள் ஏற்க மறுத்ததினால் காவல்துறை அதிகாரிகள் மணிகண்டன் குடும்பதினரை தகாத வார்த்iதைகளால் பேசி, தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய மிரட்டல் சட்டத்திற்கு புறம்பான அத்துமீறல் நடவடிக்கையாகும்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, மணிகண்டன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டுமெனவும், அவர்கள் பணியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டுமெனவும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் காவல்துறை அதிகாரிகள் மணிகண்டன் குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்டி வருவதால் உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் படுகொலை செய்யப்பட்ட மணிகண்டன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு  ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்கிடுமாறும் வலியுறுத்துகிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...