முனைவர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு சிபிஐ(எம்) அஞ்சலி!

கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி (வயது 87) காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வா.செ.குழந்தைசாமி, கரக்பூர் ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். ஜெர்மனி, மற்றும் அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் செயல்பட்டுள்ளார். யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினராக செயல்பட்டார். நீர்வளத் துறையில் ’குழந்தைசாமி மாதிரியம்’ என்ற கண்டுபிடிப்பை மேற்கொண்டார்.

தமிழகத்தில் பிறந்து, தனது அறிவாற்றலால் சிறந்த கல்வியாளராக உயர்ந்து நம் அனைவருக்கும் சிறப்பு சேர்த்தவர் குழந்தைசாமி. நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.  தமிழில் 10 கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்கள், ஆங்கிலத்தில் 6 உரைநடை நூல்கள், ஒரு கவிதை நூலும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002-ல் வெளிவந்தது.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகவும், இவரது கட்டுரைகள். கவிதைகள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, பல்கலைக்கழக வகுப்புகளில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துச் சீரமைப்பில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், கடந்த 35 ஆண்டுகளாக வரிவடிவ சீரமைப்பைப் பற்றி முழு ஈடுபாட்டுடன் எழுதியும், பேசியும் வந்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவரான இவர், தற்போது தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவராகவும், சென்னை தமிழ் அகாடமி தலைவராகவும், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவராகவும் பல பொறுப்புகளை வகித்த முனைவர் வா.செ.குழந்தைசாமியின் மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...