மும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக! – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

மோடி 2 அரசாங்கத்தின் தேசிய வரைவு கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, அதை அரசு திரும்பப் பெறச் செய்திட நிர்ப்பந்திக்கும் விதத்தில் கல்வி மற்றும் கலாச்சார தளங்களில் செயல்படும் அனைத்து அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவர் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஜுன் 2 ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த வரைவுக் கொள்கையில், பள்ளிக்கல்வியின் துவக்க நிலையிலிருந்து மும்மொழிக் கொள்கை அமலாக்கப்படும் என்று முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முற்றாக எதிர்க்கிறது.

எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் எதிர்ப்பது என்பது இதன் பொருள் அல்ல; மாறாக இந்தியாவின் அனைத்து மொழிகளும் வளர்வதற்கும் மேம்படுவதற்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான கருத்தாகும்.

தேசிய வரைவுக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை எனும் – பொருத்தமற்ற, உணர்வுகளை புரிந்து கொள்ளாத திட்டத்திற்கு எதிராக பரவலான முறையில் எதிர்வினைகள், குறிப்பாக தென் மாநிலங்களிலிருந்து எழுந்திருக்கின்றன.

இத்தகைய பலவந்தமான மொழித் திணிப்பு என்பது, நமது மக்களின் ஒற்றுமையையும் நாட்டின் ஒற்றுமையையும் கடுமையாக சீர்குலைக்கும் விதத்திலான மொழிவெறி உணர்ச்சிகளுக்கு மக்கள் இரையாவதை நோக்கி இழுத்துச் செல்லவே வழி செய்யும்.

இந்நிலையில், இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்துள்ள பின்னணியில், மேற்கண்ட கொள்கை அறிக்கையானது ஒரு வரைவு ஆவணம் மட்டுமே என்று மத்திய அரசு விளக்கம் வெளியிட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சனை மிகவும் கடுமையான உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை என்பதை உணர்ந்து, அரசு தற்போது வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கையை அவசியம் விலக்கிக் கொள்ள வேண்டும்; இத்தகைய சர்ச்சைக்குரிய அம்சங்கள் அனைத்தையும் விலக்கி விட்டு புதிய வரைவுக் கொள்கையை வெளியிட வேண்டும்.

இந்தப் பிரச்சனையில் கல்வி மற்றும் கலாச்சார தளங்களில் செயல்படும் அனைத்து ஜனநாயக அமைப்புகள், சரியான சிந்தனை கொண்ட குடிமக்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மிகவும் சீர்குலைவான மும்மொழிக் கொள்கை எனும் மத்திய அரசின் முயற்சியை திரும்பப் பெற்றிட நிர்ப்பந்திக்கும் விதத்தில் உரத்து குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுக்கிறது.

English Version: No to Three Language Formula

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...