முல்லைப் பெரியாறு பிரச்சனை : விரைவில் தீர்வு காண மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரளம் மற்றும் தமிழக எல்லை மாவட்டங்களில் பதற்றமான நிலைமை உருவாகி இருப்பது கவலையளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு  மற்றும் அணையின் நீர்மட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் உச்சநீதிமன்றத்தின் முன்பு விசாரணையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் அவர்கள் தலைமையில் ஐவர் குழு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு முல்லைப் பெரியாறு அணையினை பார்வையிட்டதுடன் நிபுணர்கள் குழுவினை அமைத்து நில நடுக்கம் மற்றும் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

கடந்த 5-12-2011 அன்று அக்குழுவின் கூட்டம் நடைபெற்று மீண்டும் பிப்ரவரி மாதம் கூடி விவாதிக்க உள்ளது. நடைபெற்று வரும் இந்த ஆய்வு பணிகளை துரிதப்படுத்தி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை விரைவில்  வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் முன்பு விசாரணையில் உள்ள இவ்வழக்கில் அணையின் பாதுகாப்பு, நீர்மட்டத்தை குறைப்பது போன்ற பிரச்சனைகளை எழுப்பி கேரளத்தில் போராட்டங்களை நடத்துவது சரியானதல்ல என்பதை மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
 

நீண்ட நெடுங்காலமாக பாரம்பரிய சகோதார உறவு கொண்ட கேரள – தமிழக மக்கள் மத்தியில் இப்பிரச்சனையை மையப்படுத்தி மோதல் போக்கை உருவாக்க சில சுய நல அரசியல் சக்திகள் செயல்படுவது குறித்து இரு மாநில மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பரஸ்பரம் இரண்டு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்களுக்கு இடம் தராமல் அமைதி சூழ்நிலையை பாதுகாத்திட பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறது.
 

பிரச்சனைக்குரிய முல்லைப் பெரியாறு அணையை பாதுகாத்திட மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்புவதுடன், இரண்டு மாநிலத்திலும் ஏற்பட்டு வரும் பதற்ற நிலையினை தடுத்து இரு மாநில மக்களது அமைதியான வாழ்வுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசும், கேரளம் மற்றும் தமிழக அரசுகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
 

உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பதற்றத்தை தவிர்க்கவும், சுமூக நிலையை பாதுகாக்கவும் இரண்டு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அவ்வாறு நடைபெறும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள முன்வர வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

(ஜி. ராமகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர் 

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply