முழுமையாக, சீராக குடிநீர் வழங்ககோரி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுக, குடிநீருக்கான மே 9 இயக்கத்தில் பங்கேற்றிடுக

மே 1 அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் முழுமையாகவும், சீராகவும் குடிநீர் வழங்க வேண்டுமென்றும், தாமிரபரணி தண்ணீரை கோக் பெப்சி நிறுவனங்களுக்கு வழங்க நிரந்தர தடை விதிக்க கோரியும் தீர்மானங்களை நிறைவேற்ற மக்கள் நலன் சார்ந்த கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மாவட்டம் முழுவதும் பல தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்த போதிலும், போதுமான தண்ணீரோ, ஒப்புக்கொள்ளப்பட்ட தண்ணீரோ வழங்கப்படுவதில்லை. சங்கரன்கோவில் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 52 லட்சம் லிட்டர் வழங்க வேண்டும். ஆனால் 41 லட்சம் லிட்டரே வழங்கப்படுகிறது. புளியங்குடி நகராட்சிக்கு 33 லட்சம் லிட்டருக்கு பதிலாக 17 லட்சம் லிட்டரும், சிவகிரி பேரூராட்சிக்கு 13 லட்சம் லிட்டருக்கு 8 லட்சம் லிட்டரும், கடையநல்லூர் நகராட்சிக்கு 30 லட்சம் லிட்டருக்கு 12.5 லட்சம் லிட்டரும், நயினாரகரம் ஊராட்சிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் லிட்டருக்கு 70 ஆயிரம் லிட்டரும், இடைகால் ஊராட்சிக்கு 1 லட்சம் லிட்டருக்கு 40 ஆயிரம் லிட்டரும், ஆலங்குளம் பேரூராட்சிக்கு 19 லட்சம் லிட்டருக்கு 15 லட்சம் லிட்டரும், திருவேங்கடம் பேரூராட்சியில் 3 லட்சம் லிட்டருக்கு 61 ஆயிரம் லிட்டரும், மருதம்புத்துர் ஊராட்சிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் லிட்டருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. வறட்சி நிலவும் சூழலில் வழங்கப்படும் குடிநீரின் அளவு மேலும் குறைந்துள்ளது.

மேலும் நாளொன்றுக்கு நபருக்கு 150 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மக்களின் பழக்க வழக்கங்களை கணக்கில் கொண்டால் 150 லிட்டரை விட கூடுதலாகவே வழங்க வேண்டும். ஆனால் நகராட்சிகளில் நபருக்கு 90 லிட்டரும், பேரூராட்சிகளில் 70 லிட்டரும், ஊராட்சிகளில் 40 லிட்டரும் என பாகுபாட்டுடன் வழங்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கும், மனிதர்களுக்கும் மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கும், மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

குடிநீர் பற்றாக்குறை என்பது தற்போது விசுவரூபம் எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் முழுமையாகவும், சீராகவும் வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் துரித நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மே 9 அன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பெரும்திரள் ஆர்ப்பாட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும். குடிநீர் உரிமையை நிலைநிறுத்த நடைபெறும் இந்த இயக்கத்தில் மக்கள் நலன் சார்ந்த அமைப்புகள் திரளாக பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது.

கே.ஜி.பாஸ்கரன்

சிபிஐ(எம்)

நெல்லை மாவட்டச்செயலாளர்

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...