முழு அடைப்பு வெற்றி! மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு!

மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியதையும், சமையல் எரிவாயுவை ஆண்டுக்கு குடும்பத்திற்கு 6 சிலிண்டர் என்று கட்டுப்பாடு விதித்திருப்பதையும், சில்லரை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அன்னிய மூலதனத்திற்கு அனுமதித்ததையும் கண்டித்தும், கைவிடக்கோரியும் இடதுசாரி மற்றும் ஜனநாயக கட்சிகள் இன்று (20-9-2012)   ஒ ரு நா ள் முழுஅடைப்புக்கு  அறை கூவல் விடுத்திருந்தன.

தமிழகத்தில் தே.மு.தி.க, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஆளும் கூட்டணியிலுள்ள திமுகவும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தொழிற்சங்கங்கள், வர்த்தகர் அமைப்புகள் மற்றும் பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. முழு அடைப்பு தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் கிராமம் மற்றும்  நகர்ப்புறங்களில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, வேன், டாக்சி, லாரி, தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பொது வாகனப்போக்குவரத்துகள் முழுமையாக இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் 200-க்கும் அதிகமான இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் நடைபெற்றுள்ளது. 75,000-த்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்திலும், மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். வணிகர் சங்கங்களின்  பிரதிநிதிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தத்தில் தமிழகத்தில் அனைத்து பகுதி மக்களும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவின் சார்பாக பாராட்டுகிறோம். மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை கைவிடும் வரை இந்தப்போராட்டத்தில் அனைத்து அரசியல் இயக்கங்களும், வணிகர் அமைப்புகளும், பொதுமக்களும் போராட்டங்களை தொடர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply