8-4-2017
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது
வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 3361 மதுக்கடைகளிலும் சுமார் 1000 தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஆகியவற்றிலும் மது விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
உச்சநீதிமன்றத்தின் ஆணையை பொருத்துக் கொள்ள முடியாத மது வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகர சாலைகள், நகர சாலைகள் என பெயர் மாற்றி இதன் மூலம் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறந்து விடலாம் என முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் சாலைகளின் பெயர்களை மாற்றி மது வியாபாரத்திற்கு உதவி செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மதுவிலக்கு கொள்கையை தமிழகத்தில் அமலாக்க வேண்டுமென்று அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தின. மாநில அரசும், படிப்படியாக மதுவிலக்கு கொள்கையை அமலாக்குவோம் என்று கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. ஆனால் தற்போது மக்களுடைய கருத்துக்கு மாறாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு வகைகளில் திறக்க முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருந்த மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது, மேலும் டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை அளிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்