மேகதாது தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு தடுத்து நிறுத்துக!

மத்திய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

மேகதாதுவில் தடுப்பணை கட்டும்  முயற்சியை தடுத்து நிறுத்திட வேண்டுமென மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் சனிக்கிழமையன்று (14.3.2015) மாமல்லபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் துவங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் எம்எல்ஏ மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

நெற்களஞ்சியம் பாலைவனமாகும் அபாயம்

காவிரியில் தொடர்ந்து தமிழ்நாட்டிற் கான உரிமையை கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது. நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்ற உத்தரவுகள்  என அனைத்தையும் கர்நாடக அரசு கிடப்பிலேயே போட்டு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மேகதாது வில் காவிரியின் குறுக்கே இரண்டு தடுப்பணைகளை கட்டி 48 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிடவும், அணைக் கட்டுவதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தடுப்பணை கட்டப்படுமானால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்பதோடு, இவ்வாறு அணை கட்டப்படுவது பன்மாநில நதிகள் தாவா சட்டத்திற்கும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கும் விரோதமானது. எனவே மத்திய அரசு தலையிட்டு உடன் தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழகத்தின் அனைத்து கட்சிகள் கோரியதுடன், பலகட்டப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதே கோரிக்கைகளை முன்வைத்து தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

மத்திய அரசு பாரபட்சம்

ஆனால் மத்திய அரசு இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை அதுமட்டுமின்றி காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்
பின்படி அமைக்க வேண்டிய காவிரி மேம்பாட்டு தடுப்பணை கட்டப்படுமானால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்பதோடு, இவ்வாறு அணைகட்டப்படுவது பன் மாநில நதிகள் தாவா சட்டத்திற்கும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கும் விரோதமானது.

ஆணையத்தையும், நதிநீர் ஒழுங்குமுறை குழுவையும் தமிழகத்தின் தொடர் வற்புறுத்தலுக்கு பின்னரும் பல ஆண்டுகளாக மத்திய அரசு நிறை வேற்றவில்லை. மத்திய அரசின் பாரபட்சமான மேற் கண்ட அணுகுமுறையின் உந்துதலில் கர்நாடக அரசு நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மேகதாதுவில் அணைகட்டும் ஆய்வுப் பணிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசின் இச்செயல் தமிழகத்தையும், டெல்டா மாவட்ட மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசின் அரசியல் கடமையாகும். எனவே இனியும் காலம் தாமதிக்காமல் உடனடியாக தலையிட்டு மேகதாதுவில் அணைகட்ட எத்தனிக்கும் கர்நாடக அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மேலும் காவிரி மேம்பாட்டு ஆணையத்தையும், நதிநீர் ஒழுங்குமுறை குழுவையும் அமைத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

தமிழகத்தின் உரிமையை காத்திட தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் ஒருமித்த குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

அஞ்சலி

முன்னதாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் ஐ. மாயாண்டி பாரதி, மராட்டிய மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான கோவிந்த் பன்சாரே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழவேற்காடு கிளைச் செயலாளர் தோழர் பிலிப், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான தி.சு. கிள்ளிவளவன் ஆகியோர் மறைவிற்கு மாநிலக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Check Also

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்!

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. ...