மே 5 முதல் 11 வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்!

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், மாற்றுக் கொள்கைகளை வலியுறுத்தியும்,மே 5 முதல் 11 வரைதமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்;

மத்திய- மாநில ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகளால், நாட்டுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்கூறவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் மாற்றுத் திட்டத்தை விளக்கவும் மக்கள் சந்திப்பு இயக்கம் மே 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 10 ஆயிரம் குழுக்கள், 50 லட்சம் குடும்பங்களைச் சந்திக்க இருக்கிறார்கள். வீதி வீதியாக, வீடு வீடாக இந்த பிரச்சாரப் பேரியக்கம், எழுச்சியுடன் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான துண்டறிக்கைகளை மக்களிடம் விநியோகிக்க உள்ளோம்.

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் 05.5.2015 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள பிரச்சார இயக்கத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச்செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார்.

இப்பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலத்தலைவர்கள் முதல் கட்சி உறுப்பினர்கள் வரை பலஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைந்து ஓராண்டாகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டு முடிந்துள்ளது. இந்த இரு அரசுகளும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அடுத்தடுத்து தொடர் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு, அதிகாரப்பூர்வமாகவே இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

பாஜக அரசு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய, அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாததால், மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களை தாரை வார்ப்பதற்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டுவர பாஜக அரசு துடிக்கிறது. தமிழகத்தை ஆளும் அதிமுகவும் இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறது.

நிலக்கரிச் சுரங்கங்களை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாகக் கூறி, முந்தைய மன்மோகன்சிங் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அதே நிலக்கரிச் சுரங்கங்களை மீண்டும் முதலாளிகளுக்குத் தர அவசரச் சட்டம் கொண்டு வந்தது பாஜக அரசு.

உள்நாட்டு எண்ணெய் வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால், சாதாரண, ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கான சமையல் எரிவாயு மானியத்தை முற்றாக ரத்து செய்யத் துடிக்கிறது. பெட்ரோல்- டீசல் விலையும் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாற்றப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. மறுபுறத்தில் உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. கந்துவட்டிப் பேர்வழிகளால், விவசாயிகள் கசக்கிப் பிழியப்படும் நிலையில் வேளாண் கடனுக்கான வட்டியை பாஜக அரசு உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை, பன்முகப் பண்பாடு என்ற உயரிய விழுமியங்களைச் சிதைத்து, இந்தியாவை ஒரு மதச்சார்பு பாசிச நாடாக மாற்றிட ஆர்எஸ்எஸ் பரிவாரம் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஒன்றுபட்டுப் போராட வேண்டிய மக்களை, மதத்தின் பெயரால் மோதவிட்டு, அரசியல் ஆதாயம் பெற முயல்கிறது பாஜக கூட்டம். பாஜக அரசு பின்பற்றும் கார்ப்பரேட் ஆதரவுப் பொருளாதாரக் கொள்கையையும், ஆர்எஸ்எஸ் ஆதரவு மதவெறிக் கொள்கையையும் ஒருசேர முறியடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இடதுசாரி இயக்கங்களுக்கு உள்ளது.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று கூறி, அதிமுக அரசு பொறுப்பேற்றது. ஆனால், ஊழல், லஞ்சம், முறைகேடு போன்றவற்றில்தான் தமிழகம் முன்னேறியுள்ளது.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கள், கொஞ்சம் கொஞ்சமாக தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதால், ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாக மாறி வருகிறது. படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, 90 லட்சம். படித்த படிப்புக்குரிய வேலையின்றி, கிடைக்கும் வேலையில், பிழைப்பு நடத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை பல லட்சம்.

சட்டம்- ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக அதிமுக அரசு கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, தலித்மக்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள், பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 2015 மார்ச் மாதம் வரையிலான 10 மாதங்களில் மட்டும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 100 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த படுகொலைகளின் பின்னால், சாதிய வன்மம், கந்துவட்டிக் கொடுமை, மணல் கொள்ளை ஆகியவை உள்ளன. இவற்றைத் தடுக்க முயலாத காவல்துறை, அமைதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டும் தூத்துக்குடியிலிருந்து, நெல்லைக்கு நடைப்பயணமாகச் செல்ல அனுமதி மறுத்தது. எவ்விதக் காரணமும் இன்றி, வாலிபர்கள்- மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

கிரானைட், ஆற்றுமணல், தாதுமணல் போன்ற இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதில் ஆளுங்கட்சியினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. ஆளுங்கட்சியினரின் அடாவடிக்கு ஒத்துப் போகாத அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம்தான் நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை. இது மொத்த ஊழலின் ஒரு சிறு வெளிப்பாடேயாகும்.

தமிழக மக்கள் சந்திக்கும் பிரதானப் பிரச்சனைகளை விளக்கி, அதற்கான தீர்வை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துகிறது. குக்கிராமங்களில் துவங்கி பெருநகரங்கள் வரை வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க உள்ளோம். மக்களோடு கலந்துரையாடி, பிரச்சனைகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்திட உள்ளோம்.

மே 5-ஆம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்குகிறது. இந்த இயக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...