மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்

23.1.1968-ந் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொழிப் பிரச்சனை சம்பந்தமாக நடந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு முன்மொழிந்த திருத்தங்கள்.

நிலைமையை பரிசீலித்த பிறகு ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக, கலாச்சார வளர்ச்சிக்கும், மொழி ஒரு சாதனமாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் அணுகினால் தான் மொழிப் பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என்று இச்சபை கருதுகிறது. மேலும் தொடர்ந்த பிரதேசத்தில் தங்களுக்கே உரித்தான பழக்கங்களையும், பண்பையும் கொண்ட பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட இந்நாட்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டத்தில் உருவான நாட்டின் ஒற்றுமையை பேணிபாதுகாத்து மேலும் கெட்டிப்படுத்துவதற்கு இந்நாட்டில் வழங்கும் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்தை எல்லா மட்டங்களிலும் வழங்குவது அவசியம் என்பது இச்சபையின் உறுதியான கருத்து. இதற்காக வேண்டி கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென்று இச்சபை வற்புறுத்துகிறது.

 1. அரசியல் சட்டத்தில் இந்திக்கு தனி அந்தஸ்து அளித்திருப்பது அகற்றப்பட வேண்டும். நாட்டின் பிற மொழிகளுக்கு கீழ்நிலை அளிக்கும் சட்டப் பிரிவுகளையெல்லாம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமநிலை அளிக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்.
 2. அரசியல் சட்டத்தின் 8வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
 3. நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் அரசியல் சட்டத்தில் 8வது பட்டியலில் உள்ள மொழிகளில் நடப்பதற்கும், ஏக காலத்தில் மொழி பெயர்ப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
 4. மத்திய அரசின் மசோதாக்கள், சட்டங்கள், உத்தரவுகள் போன்றவையெல்லாம் 8வது பட்டியலில் குறிப்பிட்டுள்ள எல்லா மொழிகளிலும் பிரசுரிக்கப்பட வேண்டும்.
 5. மத்திய அரசின் அலுவலகங்கள் இருக்கும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியிலேயே மக்களுடன் தொடர்பு வைத்து பணியாற்ற வேண்டும்.
 6. மாநில அரசுகள், மத்திய அரசுக்கு தத்தம் மாநில மொழியிலேயே கடிதம் எழுதுவதற்கும், அம்மொழியிலேயே பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
 7. ஒவ்வொரு பிரஜைக்கும் தன் தாய்மொழியில் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவதற்கும், பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
 8. எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சமமாக நிதி வசதிகளை வழங்க வேண்டும்.
 9. எல்லா மாநிலங்களிலும், கல்வி நிலையங்களிலும் உயர்மட்டம் வரையிலும் அந்தந்த மாநிலத்து மொழியே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும்.
 10. அதேபோன்று அந்தந்து மாநிலத்து மொழியே மாநிலங்களில் நிர்வாக மொழியாகவும், உயர்நீதிமன்றம் வரை நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும். இவையாவும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக அமலாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
 11. மொழி வழி சிறுபான்மையினருக்கு உயர் தொடக்க கல்வி வரை தங்கள் தாய்மொழியிலேயே கல்வி பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
 12. மும்மொழித் திட்டம் என்பது பயனற்றது. அதேசமயத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தாய்மொழியைத் தவிர இதர இந்திய மொழிகளையும் ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளையும் மாணவர்கள் இஷ்டப் பூர்வமாக கற்பதற்கு வசதியளிக்கப்பட வேண்டும்.
 13. அதேசமயத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தாய்மொழியைத் தவிர இதர இந்திய மொழிகளையும், ஆங்கிலம் அல்லது வேறு நவீன மொழிகளையும் மாணவர்கள் இஷ்டப்பூர்வமாக கற்பதற்கு வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.

இத்தகைய ஏறபாடுகள் செய்து முடித்த பிறகு இந்திய மக்கள் ஏதாவது ஒரு இந்திய மொழியை குரோத மனப்பான்மையும், வெறுப்புணர்ச்சியும் இல்லாமல் நடைமுறை சாத்தியத்தையும் பயனையும் மட்டும் அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுமூகமான நிலை ஏற்படும் என்று இச்சபை கருதுகிறது.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசினர் மொழித் திருத்த சட்டம், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும், மத்திய அரசின் மொழியாக இருக்கும் என்பதனை ஏற்றுக் கொண்டாலும், அச்சட்டத்தில் 3வது பிரிவில் (4)வது உட்பிரிவு மத்திய அரசின் ஒரு இலாகவில் அல்லது பகுதியில் இந்தியை ஏக அலுவல்மொழியாக சர்க்காருக்கு அதிகாரம் அளித்திருக்கிறது. இவ்வதிகாரம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும் இதனோடு கூட நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தில் மத்திய சர்க்காரில் உத்தியோகத்திற்கான சேருவதற்கான இந்தி அல்லது ஆங்கிலத்தில் ஞானம் இருக்க வேண்டும் என்று கூறுவது இந்தி பேசாத மக்களின் மீது அதிகமான பளுவைச் சுமத்துகிறது. இந்த ஏற்றத்தாழ்வை இச்சபை நிராக்கரிக்கிறது.

எனவே மத்திய சர்க்காரில் உத்தியோகத்திற்கு சேருவதற்கு அரசியல் சட்டத்தின் 8வது பட்டியலில் குறிப்பிட்டுள்ள மொழிகள் ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழியில் ஞானம் இருந்தால் போதும் என்பதை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

இந்த வகையில் மொழிப் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இந்திக்கு அளிக்கப்பட்டுள்ள பிரத்தியேக அந்தஸ்தை நீட்டிப்பதற்காகச் செய்யப்படும் முயற்சிகளும் ஆங்கிலத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்வி, நீதி நிர்வாகம் ஆகிய துறைகளில் இருந்த ஸ்தானத்தை நீடிப்பதற்காகச் செய்யப்படும் முயற்சிகளும் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்று இச்சபை கருதுகிறது.”

ஸ்விட்சர்லாந்தில் இத்தாலியன், ஜெர்மென், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளும் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. சின்னஞ்சிறிய சிங்கப்பூரில் தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் ஆட்சிமொழிகளாக உள்ளன. இது சாத்தியமென்றால் இந்த பரந்த இந்தியாவில் இங்கு வழங்கும் மொழிகளெல்லாம் ஏன் ஆட்சிமொழிகளாக இருக்கக் கூடாது? அவைகளில் ஒரு மொழிக்கு எதற்காக பிரத்தியேக அந்தஸ்தும், விசேச சலுகையும் அளிக்க வேண்டும்?.

(தோழர் பி. ராமமூர்த்தி, மொழிப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட்டுகள் நிலை – 1968)

Check Also

சட்டசபை நிகழ்வுகள் தமிழகத்திற்கு தலைகுனிவு சிபிஐ(எம்) கண்டனம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது கடுமையான ...