மோடியின் ஈராண்டு: விலையேற்றத்தால் யாருக்கு லாபம்?

-சவேரா

மோடியின் கடந்த ஈராண்டு கால மோசடியானஆட்சிக் காலம் முழுவதுமே அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தன. முந்தைய ஐமுகூ அரசாங்கத்தின் கீழ் இருந்த போக்கே இவர்கள் ஆட்சியின் போதும் தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது.  அதிலும் சில பொருட்களின் விலைகள் சகிக்க முடியாத அளவிற்கு உயர்ந்ததையும் இந்தக் காலத்தில் நாம் பார்க்க முடிந்தது.  

இது தொடர்பாக இங்கே சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம். 2014 அக்டோபர் – நவம்பரில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு 100 ரூபாய்க்கும் மேல் விண்ணைத் தொட்டது.

உருளைக் கிழங்கின் விலை இந்த ஆண்டில் சென்ற மாதம் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்தது. 
சர்க்கரையின் விலையும் மூன்றில் இரு மடங்கு அதிகரித்தது, கிலோ 50 ரூபாய் என்பதை ஏற்கனவே கடந்துவிட்டது.  இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை ஒன்றும் ஏதோ குடும்பப் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று  மட்டும் நினைக்க வேண்டாம்,  சில பொருள்களை வாங்குவதைத் தவிர்த்து இதனைச் சரி செய்துவிடலாம் என்று எண்ணாதீர்கள்.  இவ்வாறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்ததன் காரணமாக மக்கள் இவற்றைப் பயன்படுத்துவது என்பதே குறைந்துவிட்டன. உதாரணமாக, 1951இல் ஒவ்வாருவரும் சுமார் 61 கிராம் அளவிற்குப் பருப்பு வகைகளை நுகர்ந்தனர், ஆனால் அது இப்போது (2013ஆம் ஆண்டில்) 42 கிராமாக குறைந்துவிட்டது.  இவ்வாறு மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை அவர்கள் உண்பது என்னும் நிலைமை அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 

ஏன் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது?  மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மொத்த விலைவாசிக் குறியீட்டெண் எதிர்மறைக்குச் சென்று விட்டதாக — அதாவது விலைகள் வீழ்ச்சி அடைந்து விட்டதாக — கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?
இதற்கு ஒரேயொரு காரணம்தான் உண்டு. நிர்வாகச் சீர்கேடு என்பதே அது. “சந்தை சக்திகள்’’ விலைகளைத் தீர்மானிக்க அனுமதித்திருப்பதே இதற்குக் காரணமாகும்.  நிர்வாகச் சீர்கேடு இந்த விதத்தில் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வறட்சியின் காரணமாக 2014-15ஆம் ஆண்டில்  பருப்பு வகைகள் உற்பத்தி குறைந்து விட்டது என்று அரசாங்கத்திற்குத் தெரிந்த போது அது என்ன செய்திருக்க வேண்டும்?  அவற்றை இறக்குமதி செய்து அவற்றின் இருப்பை நிலைநிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசாங்கம் அவ்வாறு எதுவும் செய்திடவில்லை. விளைவு, விலைவாசிகள் விண்ணை எட்டிக் கொண்டிருக்கின்றன. பின்னர் அவர்கள் ஏதோ சிலவற்றை இறக்குமதி செய்வதுபோல் பாவனை செய்தார்கள். அதற்குள் சர்வதேச அளவில் அவற்றின் விலைகள் விண்ணுக்குச் சென்றுவிட்டன. அவற்றை வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
 
இங்கேதான் அரசாங்கங்கள் “சந்தைகளை விடுவித்தல்’’ என்னும் கொள்கை வருகிறது இதன் உண்மையான பொருள் என்னவெனில், இந்த நிலைமையை தனியார் வர்த்தக நிறுவனங்கள், பண்டங்களைப் பதுக்கி வைத்துக் கொள்வதற்கும், விலைகளை உயர்த்தி  கொள்ளை லாபம் அடிப்பதற்கும் அனுமதிப்பது என்பதேயாகும்.  உதாரணமாக, தனியார் வர்த்தகர்கள் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதற்கும், அவற்றை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பண்டகசாலைகளிலும் இருப்பு வைத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக விலைகள் எவரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்தன. பின்னர் தாங்கள் கொள்ளைலாபம் ஈட்டும் நோக்கத்தோடு இருப்பை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே விடுவித்தனர். 
விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் அல்லது மொத்த விற்பனை மண்டிகள் என்று இருந்து வந்தன.

அவற்றின் கட்டுப்பாடுகளை எல்லாம் மோடி அரசாங்கம் நீக்கிவிட்டது..  தனியார் இருப்பு வைத்துக் கொள்வதற்கு இருந்த நெறிமுறைகளை எல்லாம் துவக்கத்தில் தளர்த்தியது. பின்னர் விலைகள் உயர்ந்தபின்னர் மீண்டும் இறுக்கியது. இவ்வாறு இந்த அரசாங்கம் அளித்த “சுதந்திரம்’’ என்பது உண்மையில் பெரும் வர்த்தகர்களுக்கும் கொள்ளைலாபம் ஈட்டுபவர்களுக்கும் அளித்த சுதந்திரமேயாகும். விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த விலை கொடுத்து அவர்களிடமிருந்து பொருள்களை வாங்கி, பின்னர் அதிக விலைக்கு நுகர்வோருக்கு அளித்தல் என்பதே இதன் பொருளாகும். 

பெரும் வர்த்தகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கொள்ளை லாபம் அடிக்கக்கூடிய வகையில் அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு முந்தைய அரசாங்கங்களும் அனுமதி அளித்தன. ஆனால், பாஜக அரசாங்கமோ இதனை மிகவும் பட்டவர்த்தனமாக எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி மேற்கொண்டது. வறட்சியால் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிற துயரார்ந்த நிலைமைகள் குறித்தோ அல்லது  மக்களுக்கு  அவர்கள் உணவுப் பொருள்களை வாங்கக்கூடிய விதத்தில்   அளித்துவந்த அரசாங்கத்தின் திட்டங்களை அழித்து ஒழித்துக் கட்டுவது குறித்தோ அது சற்றும் கவலைப்படவில்லை. 

இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத குணத்தை மிகவும் பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கக்கூடிய மற்றுமொரு உதாரணமும் ஆகும். கடந்த ஈராண்டுகளில் கச்சா எண்ணெய்யின்  சர்வதேச விலைகள் 62 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியா தன்னுடைய தேவையில் சுமார் நான்கில் மூன்று பங்கு இறக்குமதி செய்து வருகிறது. இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலைகள் வீழ்ந்ததால் இந்தியாவிற்கு சுமார் 2.14 லட்சம் கோடி ரூபாய் சேமித்திருப்பதாக
மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆகையால், இவ்வாறு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி என்பது நாட்டில் இதனை நுகரும் பல லட்சக்கணக்கானோருக்கு நல்லமுறையில் பயன் அளித்திருக்க முடியும். ஆனால், வஞ்சகமான மோடி அரசாங்கமோ வேறுவிதமான சிந்தனைகளைப் பெற்றிருந்தது. வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய அதே சமயத்தில், இந்தியாவிற்குள் அதன் விலையைக் குறைக்கவே இல்லை. இந்தக் காலத்தில் எண்ணெய்யின் விலை மீதான கலால் வரியை ஐந்து தடவைகள் உயர்த்தியது. இதன் விளைவாக, சென்ற ஈராண்டுகளில் பெட்ரோல் விலையை 16 சதவீதமும். டீசல் விலையை 13 சதவீதமும் உயர்த்தி இருக்கிறது. மோடி அரசாங்கம் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியிலிருந்து மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, இந்தவகையில் தன்னுடைய கணக்குகளை மட்டும் அதிகப்படுத்திக் கொண்டது. 

மேலும் மோடி அரசாங்கம், ஒரு நீண்டகாலத் தொலைநோக்கின் அடிப்படையில் உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்திருப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் எவ்விதமான திட்டத்தையும் வளர்த்தெடுத்திட முழுமையாகத் தவறிவிட்டது.  காய்கறிகள், பருப்பு வகைகள். எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு போன்ற இதர பண்டங்களின் உற்பத்திக்காக புதிய விதைகள், தொழில்நுட்பங்கள், மலிவு விலையில் வேளாண் இடுபொருட்களை அளித்தல், போதிய அளவிற்குத் தண்ணீர் அளித்தல், இவ்வாறு உற்பத்தியாகும் அத்தியாவசியப் பொருள்களை பொது விநியோக முறை மூலமாக விநியோகிப்பதற்காக விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து வாங்குவதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை  ஏற்படுத்தினால் மட்டுமே இவை சாத்தியமாகும்.  இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாகவே உற்பத்தியைப் பெருக்க முடியும், அதிகரித்து வரும் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் அந்த அளவிற்கான தொலைநோக்குப் பார்வை என்பது எதுவும் மோடி அரசாங்கத்திடம் இல்லை. 

(தமிழில்: ச.வீரமணி)

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply