மோடியின் சுயசார்பு என்னும் கேலிக்கூத்து அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்ட இந்துத்துவா வெறியர்களின் ‘சுதேசிப்’ பிரச்சாரம்..

மோடியின் சுயசார்பு – சுதேசி பித்தலாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி, சுயசார்பு என்னும் கருத்தை, இருபத்தோராம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கும், வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கும் இது ஒன்றே வழி என்று அவர் கூறியிருக்கிறார்.

இத்தகைய பிரம்மாண்ட பொய்களுக்குப் பின்னால் பண்படுத்தப்படாத முரண்பாடுகளும், மோசடிகளும் நிரம்பி இருக்கின்றன. இதனை எய்துவதற்காக, மோடி, சுயசார்பு என்ற பெயரில் அறிவித்திருக்கிற சிறப்புத் தொகுப்பு, அதனுடைய எதார்த்தமான கோர வடிவத்தை, நன்றாகவே தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்பது சர்வதேச நிதி மூலதனத்தை மேலும் அதிகமான அளவில் சார்ந்திருக்கிறது என்பதோடு, நாட்டின் இயற்கைச் செல்வ வளங்களை அந்நிய மற்றும் இந்தியப் பெரு வர்த்தக சூதாடிகள் சூறையாடுவதற்கும் வழிவகுத்துத் தந்திருக்கிறது.

பிரதமர், ஜூன் 2 அன்று இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் உரையாற்றும்போது, சுயசார்பு லட்சியத்தை மீளவும் வலியுறுத்தி இருக்கிறார். அவர், ஒரு தன்னிறைவு பெற்ற இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும், “ஆனால் அதன் பொருள் என்பது நாடு எந்த முக்கியமான பகுதிகளிலும் (strategic areas) எவரொருவரையும் சார்ந்திருக்கக் கூடாது என்பதாகும்,” என்றும் பேசியிருக்கிறார்.

நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமனால், அவிழ்த்துவிடப்பட்டுள்ள நிதித் தொகுப்பு இதற்கு நேரெதிரானதைச் செய்திருக்கிறது.

நாட்டின் தாதுப்பொருள்கள் மற்றும் சுரங்கத்துறை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வீசி எறியப்பட்டிருக்கின்றன. 500 தாதுப்பொருள் தொகுதிகள் தனியாருக்கு ஏலம் விடப்பட இருக்கின்றன.

ஏற்கனவே, மத்திய அரசு உலோகம் மற்றும் உலோகம் அல்லாத துறைகளில் சுரங்கப் பணி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தானியங்கி மார்க்கம்  மூலமாக (through the automatic route) 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அறிவித்திருக்கிறது. தாதுப் பொருள்கள் மிகவும் கேந்திரமானவைகளாகும். அது விரைவில் தீர்ந்துபோகக் கூடிய வளமுமாகும்.

மோடி அரசாங்கத்தின் கொள்கை இத்தகைய மதிப்புமிக்க இயற்கை வளத்தை எவ்விதமானக் கட்டுப்பாடுமின்றி சூறையாடிச் செல்லுமாறு பன்னாட்டு நிதி நிறுவனங்களை அழைத்திருக்கிறது. இது இந்தியாவின் தன்னிறைவுக்குப் பலத்த அடி.

போர்த்தந்திர ரீதியில் மற்றுமொரு முக்கியமான துறை ராணுவ உற்பத்தித் துறையாகும். இத்துறையிலும், அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலமாக பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு உற்பத்தித் தொழில் பிரிவுகளையும் கைகழுவ நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே, ஒரு போர்த்தந்திர கூட்டாளிகள் திட்டத்தின் (strategic partners program) கீழ், அந்நிய ஆயுத உற்பத்தியாளர்களுடன் இந்திய கார்ப்பரேட்டுகள் கைகோர்த்துக் கொண்டு பாதுகாப்புத்துறை உற்பத்தியை மேற்கொள்வதற்கான அனுமதி அகலத் திறந்து விடப்பட்டிருக்கிறது.

இத்துடன், அமெரிக்க ராணுவ தளவாடங்களை பெரிய அளவில் வாங்குகிறவர்களில் இந்தியாவும் ஒன்றாக மாறியிருக்கிறது. மிகவும் முக்கியமான இந்தத்துறையில்  தன்னிறைவை வளப்படுத்துவதற்குப் பதிலாக, ஆட்சியாளர்களின் கொள்கை, ராணுவம் சம்பந்தப்பட்ட உள்நாட்டு உற்பத்திக்கும் மற்றும் இறக்குமதிக்கும் அமெரிக்க ஆயுத நிறுவனங்களையே முழுமையாக சார்ந்திருக்கும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது.

நிதியமைச்சர் அளித்துள்ள நிதித்தொகுப்பில், மிகவும் கேந்திரமான மற்றும் கூருணர்வுமிக்க துறைகள் உட்பட  பெரிய அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும்  தனியாருக்குத் தாரைவார்த்திடும் விதத்தில் வரைபடம் (blueprint) தயாரிக்கப்பட்டிருக்கிறது. நிதித்தொகுப்பானது கேந்திரமான மற்றும் கூருணர்வுமிக்க துறைகளிலும் (strategic sectors) முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்று கூறுகிறது.

மேற்கொண்ட ஒவ்வொரு துறையிலும் உள்ள பல, தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் விதத்தில் அவை சுருக்கப்படும் என்று கூறுகிறது. இதன் பொருள், சுயசார்பு அல்லது தன்னிறைவுக்காக தற்போது இருந்துவரும் வாய்ப்பு வாசல்களை அழித்து ஒழித்துக் கட்டுவதைத் தவிர வேறல்ல.

அரசாங்கம், ஏற்கனவே, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தை விற்பதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது, நாட்டிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2வது பெரிய நிறுவனமாகும். அரசாங்கம் இதன் பங்குகளில் 52.98 சதவீதத்தை விற்றுக் கொண்டிருக்கிறது. இதனை விற்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் என்பவை, மிகவும் மதிப்பு வாய்ந்த இப்பொதுத்துறை நிறுவனத்தை, பெரிய அளவில் இயங்கும் அந்நிய எண்ணெய் நிறுவனம் ஒன்றால் மட்டுமே வாங்கி, அதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.

பெட்ரோலியம் என்பதும் போர்த்தந்திரம் மற்றும் கூருணர்வுமிக்க ஒரு துறையாகும். இதனையும் இறக்குமதி சார்ந்த துறையாக மாற்றி, பெரிய அளவிலான அந்நிய எண்ணெய் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திட முன்வந்திருப்பது, இந்தியாவின் இறையாண்மை மற்றும் தன்னிறைவுக்கு எதிராகப்  பெரிய அளவிலான  தாக்குதல் ஆகும்.  

சுயசார்பு  பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதில் முக்கியமான அம்சம், அறிவியல் மற்றும் வளர்ச்சித் துறையில் (Research and Development), ஒரு வலுவான அடித்தளத்தைப் பெற்றிருப்பது என்பதாகும்.

அறிவியல் – வளர்ச்சித்துறை மற்றும் உயர் தொழில்நுட்பத் துறையில் நம் வல்லமையை வளர்த்தெடுப்பதன் மூலமாக மட்டுமே, இந்தியா சுயசார்பு வளர்ச்சி தொடர்பாக நினைத்துப் பார்க்கவே முடியும். ஆனால், மோடி அரசாங்கமோ அறிவியல்-வளர்ச்சி மற்றும் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிக்கு, அதற்குத் தேவையான செலவினத்திற்கு மிகவும் அற்பமான விதத்தில், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கியிருப்பதன் மூலம், இத்துறையைக் குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கிறது.     

சுயசார்பு அல்லது தன்னிறைவு என்பதற்கு, சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக, ஒரு சுதந்திரமான அயல்துறைக் கொள்கை மற்றும் போர்த்தந்திர சுயாட்சி (strategic autonomy) அவசியமாகும். கடந்த 6 ஆண்டுகளில், மோடி அரசாங்கமானது, ராணுவக் கூட்டணி மூலம் அமெரிக்காவுடன் கட்டித்தழுவிக் கொண்டிருப்பதன் மூலம் இந்தியாவை சிக்க வைத்திருக்கிறது.  

இந்தோ-பசிபிக் போர்ந்தந்திரக் கூட்டணியில் சேர்ந்திருப்பதும், அமெரிக்காவின் தலைமையிலான 4 நாடுகள் கூட்டணியில் அங்கம் வகிப்பதும், அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதும் இவை அனைத்தும் சர்வதேச அளவில் மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளிலும் சுதந்திரமான முடிவினை இந்தியா மேற்கொள்வதற்கான வல்லமையை சமரசத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்தியா, டிரம்ப்புடன் சேர்ந்து கொண்டு, பல்துருவக் கோட்பாட்டை (multilateralism) சீர்குலைத்திடவும், ஒரு சீன எதிர்ப்பு கூட்டணியைக் கட்டி எழுப்பிடவும் அவர் மேற்கொள்ளும் நாசகர நடவடிக்கைகளுக்குத் துணை போவது போலவே தோன்றுகிறது. சமீபத்தில் டிரம்ப்புக்கும் மோடிக்கும் இடையே தொலைபேசி மூலமாக நடைபெற்ற பேச்சுக்கள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

அதேசமயத்தில், ஆர்எஸ்எஸ் இன் கீழ் இயங்கும் சுதேசி ஜகரன் மஞ்ச் (Swadeshi Jagaran Manch) என்னும் அமைப்பு, சீனப் பொருள்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது.

இது, கொரோனா வைரஸ் தொற்றை ‘ஒரு சீன வைரஸ்’ தொற்று என்கிற டிரம்ப்பின் குற்றச்சாட்டை எதிரொலிக்கிறது. ஆனால், கொரானா வைரஸ் தொற்றுக்கு உண்மையிலேயே குவிமையமாக அமெரிக்கா இருந்துவந்த போதிலும், இவர்களின் பிரச்சாரம், அமெரிக்கப் பொருள்களுக்குப் பொருந்தாதாம். இத்தகைய இந்துத்துவா வெறியர்களின் ‘சுதேசிப்’ பிரச்சாரம் அமெரிக்காவிற்கு முழுமையாக சரணடைந்துவிட்டதையே காட்டுகிறது.  

20 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பு என்பது வெறுமையான ஒன்று என்பதை அதில் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதிலிருந்து தெளிவாகிறது. மோடி அரசாங்கம் தன்னுடைய பட்ஜெட் நிதிச் செலவினத்தைக் கணிசமாக அதிகரிக்க மறுப்பதற்கு, அவ்வாறு செய்தால், எங்கே  அந்நிய நிதி மூலதனம் நம் நாட்டைவிட்டுப் பறந்தோடிவிடுமோ என்கிற பயம்தான் காரணமாகும்.  

சர்வதேச நிதிமூலதனத்தின் கட்டளைகளை ஏற்பதற்குத்தான் மோடி அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து வருகிறது என்பதும், நாட்டில் பசி-பஞ்சம்-பட்டினியால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கோடானு கோடி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மறுப்பதிலிருந்தும்,  ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியின் சுயசார்பு மற்றும் சுதேசி போன்ற கோஷங்கள் எவ்வளவு பித்தலாட்டமானவை என்பது நன்கு தெரிகிறது.   

மிகவும் கேந்திரமான மற்றும் போர்த்தந்திர ரீதியில் கூருணர்வுமிக்க பகுதிகளில் வலுவான பொதுத்துறை நிறுவனங்கள் இல்லாமலும், ஒரு வலுவான பொது சுகாதார அமைப்பு முறை இல்லாமலும், ஒரு வலுவான பொதுக் கல்வி வலைப்பின்னல் இல்லாமலும் தன்னிறைவு என்பது சாத்தியமில்லை.

தன்னிறைவுக்கான தாகத்தை உள்நாட்டிலேயே அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உருவாக்காமல் தணித்திட முடியாது. இதில் எதுவுமே ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களின் சிந்தனைக்குள் இல்லை.

Credits: https://peoplesdemocracy.in/ (பீப்பிள்ஸ் டெமாக்ரசி) ஜூன் 3, 2020 தலையங்கம்

தமிழில்: ச.வீரமணி

Check Also

பொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு?

கடந்த சில தினங்களாக நாட்டின் பொருளாதாரம் குறித்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. வெளியாகியிருக்கும் தரவுகள் ...