மோடி அரசின் ஈராண்டு ஆட்சியும் பொருளாதார வீழ்ச்சியும்: சிபிஐ(எம்) கடும் விமர்சனம்

புதுதில்லி, மே 30-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் மே 29, 30 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

ஈராண்டு கால பாஜக-மோடி அரசாங்கம்

மத்திய பாஜக அரசாங்கம் இரு ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததை மிகவும் பகட்டான ஆரவாரத்தோடு படாடோபமான சாதனைகளை நிகழ்த்திவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு கொண்டாடத் தொடங்கி இருக்கிறது. இவ்விரு ஆண்டுகளில் ஒரு புதிய ‘மும்மூர்த்தி’செதுக்கப்பட்டதைத்தான் இந்த அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் மூன்று முகங்களும், பின்வருவனவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன:

முதலாவது, இந்தியக் குடியரசின் தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையான வெறிபிடித்த, சகிப்புத்தன்மையற்ற, பாசிச ‘இந்து ராஷ்டிரம்’-ஆக மாற்றுவதற்கான முயற்சிகளில் மிகவும் கொடூரமான முறையில் மதவெறித் தீயை விசிறிவிடுவது.

இரண்டாவது, நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை ஐ.மு.கூ. அரசாங்கத்தைவிட மிகவும் வெறித்தனமாகப் பின்பற்றுவது; நாட்டு மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றுவது.

மூன்றாவது, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளைக் காலில்போட்டு மிதித்துவிட்டு எதேச்சதிகார நடவடிக்கைகளை அதிகரித்துக் கொண்டிருப்பது; ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுத்திருப்பது.

நாட்டிலுள்ள மக்களில் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் இதனைக் கொண்டாடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை; மாறாக பொருளாதாரப் பேரிடரைத்தான் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 • தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் எட்டு பிரதானத் தொழில்களில் புதிய வேலை வாய்ப்புகள் கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடிப் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மோடி அரசால் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் 2015ஆம் ஆண்டு அரசுத்தரப்பில் வெளியாகியுள்ள விவரங்களின்படி மிகவும் அற்பமான அளவிலேயே புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வோராண்டும் 1.3 கோடிக்கும் மேலான இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 • ஏற்றுமதியில் கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 17 மாதங்களில் மிகவும் மோசமான விதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
 • பணவீக்கம் 6.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது; பருப்பு விலைகள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
 • கேந்திரமான துறைகளில் ஆண்டு வளர்ச்சி விகிதம் என்பது வெறும் 2.7 சதவீதம் மட்டுமே; இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவு.
 • 2015ஆம் ஆண்டில் 2,997 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். 2016 முதல் மூன்று மாதங்களில் மட்டும் 116 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 • மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் வேலை செய்த கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படவில்லை, உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தபின்பே நிலுவைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
 • கிராமப்புற தொழிலாளர்களின் உண்மை ஊதியம் கடந்த பத்தாண்டுகளில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.ட சேமிப்பு வங்கிகளின் சேமிப்புத்தொகை வளர்ச்சியும் கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துவிட்டது.
 • வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு செலுத்தாதவர்களின் கடன் தொகை, அதாவது வாராக்கடன் 13 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகிவிட்டது. இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
 • வங்கிகளில் மோடி துவக்கி வைத்த ஜன் தன் கணக்குகளில் 27 சதவீதம் முடங்கியுள்ளன. 33 சதவீதம் போலியானவை.
 • ஏழைகள் பயன்படுத்தும் பொருள்கள் மீதுபுதிது புதிதாக வரிகள், துணைவரிகள் மற்றும் தீர்வைகள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, விவசாய நெருக்கடி மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

மோடி அரசாங்கம், விவசாய உற்பத்திச் செலவினங்களைக் காட்டிலும் கூடுதலாக 50 சதவீதம் லாபம் வைத்து விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.

ஆனால் உண்மையில்,

 • விளைபொருள்களின் லாப ஈவு 10 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. சில பயிர்களைப் பொறுத்தவரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
 • 2015க்கான நிதியாண்டில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்துறைகளில் வளர்ச்சி -0.2 சதவீதமாகும். இது 2016க்கான நிதியாண்டில் 1.1 சதவீதமாகும்.
 • உணவு தானிய உற்பத்தி 2015க்கான நிதியாண்டில் 5 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது, இது 2016க்கான நிதியாண்டில் மேலும் வீழ்ச்சி அடையும்.

கடும் வறட்சி நிலைமை

 • உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பின்னரே நாட்டில் 12 மாநிலங்கள் வறட்சி பாதித்த மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் 13 மாநிலங்களில் 54 கோடி மக்கள் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
 • நாட்டின் கிராமப்புற மக்களில் 25 சதவீதம் பேர் குடிதண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான வறட்சி நிலைமை காரணமாக ஆயிரக்கணக்கில் ஏழைகள் மரணம் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கில் கால்நடைகள் மடிந்துள்ளன.

அவதிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் தலையிட்டும் கூட உருப்படியான முறையில் எவ்வித உதவியும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை.

அவதிக்குள்ளாகியுள்ள மக்களின் துன்ப துயரங்களை போர்க்கால அடிப்படையில் தீர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்துகிறது.

மத ரீதியான திரட்டல் தீவிரம்

2017ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி மத வெறித் தீயை கிளறிவிடுவதில் ஆர்எஸ்எஸ்-பாஜக மீண்டும் இறங்கி இருக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பஜ்ரங் தளம் ஆயுதப் பயிற்சி முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மக்கள் மத்தியில் மதவெறி மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகும்.

இத்தகைய முயற்சிகள், நாட்டின் சமூகவலைப்பின்னலின் அடிப்படையில் உருவாகியுள்ள ஒற்றுமையை பலவீனப்படுத்தி, அதன் மூலம் இந்துத்துவா மதவெறி வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்திட வேண்டும் என்கிற ‘வாக்கு வங்கி அரசியலின்’ மட்டரகமான வெளிப்பாடேயாகும்.

இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. நாட்டில் அமலில் உள்ள சட்டங்களின்கீழ் கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மத்திய அரசையும், உத்தரப்பிரதேச மாநில அரசையும் கேட்டுக் கொள்கிறது.

ஆப்பிரிக்க இன மக்களுக்கு எதிராக நிறவெறித் தாக்குதல்கள்

நாட்டில் வாழும் ஆப்பிரிக்க இன மக்களுக்கு எதிரான நிறவெறி வன்முறைத் தாக்குதல் அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. உண்மையில் இத்தகைய கடும் தாக்குதல்கள் நாட்டின் தலைநகரிலேயே நடந்துகொண்டிருப்பது வெட்கக் கேடாகும். இத்தாக்குதல்கள் பலநூறு ஆண்டு காலமாக இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே இருந்து வந்த உறவுகளை சிதைக்கிறது. இத்தாக்குதல்கள் ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு சென்றுள்ளது.

மத்திய அரசாங்கம், இதில் ஈடுபட்ட கயவர்களுக்கு எதிராகவும், நிறவெறியைப் பரப்புவோருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுத்திடுவதை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு மேலும் தாழ்வடைவதைத் தடுத்திட இது மிகவும் அவசியமாகும்.

மாநில சட்டமன்ற தேர்தல்கள்

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் நிகழ்ச்சிப் போக்கு குறித்து விவாதிக்க கட்சியின் மேற்குவங்கம், கேரளம், தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலக்குழுக்கள் கூட உள்ளன. மாநிலக்குழுக்கள் அனுப்பும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மத்தியக்குழு எதிர் வரும் ஜுன் 18-20 தேதிகளில் நடைபெற உள்ள கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வுசெய்ய உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய தேர்தல் உத்திகளைப் பொறுத்தவரையில், மேற்குவங்கத்தில் பின்பற்றப்பட்ட தேர்தல் உத்தியானது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியோ அல்லது உடன்பாடோ வைத்துக் கொள்ளக்கூடாது என்ற கட்சியின் அரசியல் நடைமுறை உத்தியின்படி எடுக்கப்பட்ட மத்தியக்குழுவின் முடிவுக்கு ஒத்திசைவானதாக அமையவில்லை.

தேர்தலுக்குப்பின் வன்முறைச்சம்பவங்கள்

திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் எதிர்க்கட்சி ஊழியர்களுக்கு எதிராக மிகவும் விரிவான அளவில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னணி ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்களின் 600க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் குறிவைத்துத் தாக்கப்பட் டிருப்பதுடன், குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த இடங்களில் உள்ள தொகுதிகளிலும், இடங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் அதிகமாக இருக்கின்றன. மிகவும் விரிவான அளவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள், தீக்கிரை மற்றும் மிரட்டிப் பறித்தல் போன்றவையும் நடந்துகொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அதீதமான அளவில் அபராதம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலத்தில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகள் மீதான படுகொலையை ஒன்றுபட்டுநின்று தடுத்திட முன்வர வேண்டும் என்று மேற்குவங்க மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. வலுவான மக்கள் ஒற்றுமையின் மூலமாகத்தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையைத் தடுத்திட முடியும்.

கேரளம்

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி மீது கேரள மக்கள் மகத்தான அளவில் நம்பிக்கை வைத்து, அபரிமிதமான முறையில் வெற்றிபெறச் செய்துள்ளமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தலின்போது கேரள மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றிட உறுதியேற்று இடதுஜனநாயக முன்னணி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிரான ஆர்எஸ்எஸ் தாக்குதல்கள் தொடர்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு இதுவரை 41 தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இருதோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந் திருக்கிறார்கள். மே 22 அன்று திருச்சூர் எங்கண்டியூரில் நடைபெற்ற தாக்குதலில் கடுமையாக காயமடைந்த சசிகுமார் மே 27அன்று மரணம் அடைந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ உட்பட 82 தோழர்கள்இத்தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான எம்எல்ஏ அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார்.

மக்களின் தீர்ப்பை மதித்து நடந்திட வேண்டும் என்றும், இத்தகைய கொலைபாதக தாக்குதல்களைத் நிறுத்திட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ்/பாஜகவினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...