மோடி அரசை கண்டித்து செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்

மோடி அரசை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில்

செப். 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம்

இடதுசாரி கட்சிகளின் அறைகூவல்

தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (07.09.2018) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  துணை செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேசன் மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர் ஏ.எஸ். குமார், என். குமரேஷ், எஸ்.யு.சி.ஐ. (சி) மாநிலக்குழு உறுப்பினர்கள் வி. சிவக்குமார், எஸ். சுருளியாண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோடி அரசு கடைபிடித்து வரும் நாசகர பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டுள்ளது. இதன் விளைவால் நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதியினரும் தாங்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதும், அதன் பலனை அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கோ, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கோ, அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்துக்கோ போய்ச் சேர்ந்து விடாமல் பாஜக அரசு கடந்த நான்கு வருடங்களாக கலால் விரியை உயர்த்தி கொள்ளையடித்து வருகிறது. தமிழக அரசும் பெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என மறுத்து வருகிறது.

இத்தகைய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 10ந் தேதி பொதுவேலைநிறுத்தம் நடத்துவது என இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. தமிழ்நாட்டில் இப்பொதுவேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதெனவும், நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்துப் பகுதி மக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன் – சிபிஐ (எம்) 

மு. வீரபாண்டியன் – சிபிஐ

ஏ.எஸ்.குமார் – சிபிஐ(எம்-எல்) லிபரேசன்

வி. சிவக்குமார் – எஸ்.யு.சி.ஐ.(சி)

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...