மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்து தூக்கி எறிவோம்; தமிழகத்தில் அதிமுக உள்பட பாஜகவின் கூட்டாளிகளுக்கு பாடம் புகட்டுவோம் என தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் அழைப்பு விடுத்தார்.

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் நாளிதழ் புதிய சந்தாக்கள் ஒப்படைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் நினைவாக எழும் சுர்ஜித் பவன் கட்டிட நிதி வழங்கல் மற்றும் 101 ஆவது ஆண்டு நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் ஆகிய முப்பெரும் விழா ஞாயிறன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருப்பூர் மங்கலம் சாலை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் தொடங்கிய செந்தொண்டர் பேரணி ராயபுரம் பூங்கா அருகே நிறை வடைந்தது. அங்கு கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மாணிக் சர்க்கார் சிறப்புரை ஆற்றினார்.

This slideshow requires JavaScript.

அவர் பேசியதன் சாராம்சம் வருமாறு:

மகத்தான தலைவர் சுர்ஜித் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் நினைவாக தில்லியில் எழும் கட்டிடம், இந்தியா முழுவதும் உள்ள இளம் தோழர்களுக்கு மார்க்சிய கல்வி அளிக்கும் மையமாக செயல்படும். அக்கட்டிடத்தைத் கட்டி முடித்து சில மாதங்களில் திறப்பு விழா நடத்துவதென கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்துள்ளது. இந்த கட்டிடத்துக்கு திருப்பூரின் உழைக்கும் மக்கள் இரவு பகல் பாராது உழைத்து சம்பாதித்த பணத்தை – ஒருநாள் ஊதியத்தை கொடுத்ததற்கு கட்சியின் மத்தியக்குழு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீக்கதிர் வாசகர்களை கூடுதலாக்குவீர்

தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கத்தில் தமிழகம் முழுவதும் கட்சியின் மாவட்டக்குழுக்கள் ஈடு பட்டிருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் சந்தாக்கள் என இலக்கு நிர்ணயித்து சந்தா சேர்ப்பில் முனைப்பு காட்டி இருப்பது பாராட்டுக் குரியது. இந்த இயக்கத்தை நிறுத்தி விடக்கூடாது. மார்க்சிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த, அரசியல் பிரச்சாரத்தை மக்களிடையே கொண்டு செல்வதில் தீக்கதிர் ஆற்றிவரும் பங்கு முக்கி யத்துவம் வாய்ந்தது. இது ஒரு வணிக பத்திரிகை அல்ல. கோடானுகோடி உழைக்கும் மக்களின் குரலாக ஒலிக்கும் பத்திரிகை. எனவே உழைக்கும் மக்களிடம் இந்தப் பத்திரிகையை கொண்டுசெல்ல வேண்டும்.

வரலாற்றைப் புரட்டிப் போட்டது புரட்சி

101ஆவது நவம்பர் புரட்சி தினத்தை கொண்டாடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. உலக வர்க்கப் போராட்ட வரலாற்றில் முதல் முறையாக சோசலிச சமுதாயத்தைப் படைத்தது ரஷ்யப் புரட்சிதான். இது சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியது. இனம், மொழி, கலாச்சாரம், மத வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சமமாக நடத்தியது.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசக் கட்டமைப்பு வீழ்ந்தது; அதற்கு சோசலிச அமைப்பு முறையோ, சோசலிச சித்தாந்தமோ காரணம் அல்ல; மாறாக அதை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தலைமையின் தவறுகள்தான் தோல்வி க்கு காரணம். இப்போதும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகள் திறம்பட செயல்பட்டு வருகின்றன.

மார்க்சிஸ்டுகளின் இலக்கு என்ன?

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உருவானது முதல் இங்கும் சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்காக பாடுபட்டு வருகிறது. இது மிகக் கடினமான பணி. உழைப்பாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், சிறுபான்மை யினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசபக்தர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி தொடர்ச்சியாகப் போராட வேண்டும்; ஆளும் வர்க்கங்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி அவர்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதற்கு சமரச மின்றி தொடர்ச்சியாகப் போராட்டத்தை நடத்தி, இந்த இலக்கை நோக்கி மார்க்சிஸ்ட் கட்சி பாடுபட்டு வருகிறது. இன்றோ, நாளையோ உடனே நடந்து விடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஆளும் வர்க்கங்கள் நம் நாட்டின் சூழலை மிகச் சிக்கலானதாக மாற்றி வருகின்றன. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படும் சூழலுக்கு ஏற்பகட்சியின் செயல்பாட்டையும், அணுகுமுறையையும் உருவாக்கி இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.

மோடி ஆட்சியின் துயரம்

இன்றைக்கு நாடு மிக மிக ஆபத் தான நிலையில் உள்ளது.குறிப்பாக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் நாட்டின் நிலைமிகச் சிக்கலானதாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை மிகக்கடுமை யாக உயர்ந்து வருகிறது. 71 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து வருகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.74 என்ற அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. பணவீக்கம் கடுமையாக அதிகரித்து மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.விவசாயிகள் கடன் நெருக்கடியில் சிக்கி நிலத்தையும், நகைகளையும் அடகு வைத்து மீட்க முடியாமல், கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி, தற்கொலை செய்து கொள்ளும் நிலை அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் தற்கொலை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தற்கொலை செய்து கொள்வது தீர்வல்ல. மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக விவசாயி கள் ஒன்று திரண்டு போராட முன் வர வேண்டும்.மோடி அரசு ஆட்சிக்கு வரும்போது ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்றனர். நான்கரை ஆண்டுகளில் 9 கோடிப் பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் வேலை களும் பறிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தால் ஏராளமான சிறு, குறு தொழில் துறையினர் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். ஊழல் பெருமளவு அதிகரித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் உத்தரவுக்கு ஏற்பச் செயல்படும் பாஜக அரசு தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், வங்கி, காப்பீடு உள்ளிட்ட அரசு பொதுத்துறை ஊழியர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள், மாணவர்கள் என நம் நாட்டு மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட், பெரு முதலாளிகளுக்கு ஆதரவான அணுகுமுறையை இந்த அரசு மாற்றிக் கொள்ள மறுக்கிறது.

பிரித்தாளும் சூழ்ச்சி

ஆர்எஸ்எஸ் உத்தரவுப்படி செயல்படும் பாஜக அரசு, சுதந்திரமான சுயேட்சையான நீதித்துறை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைச் சீர்குலைத்து வருகிறது. மதசார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பையும், கூட்டாட்சியையும் சீர்குலைக்கவும் முயற்சிக்கின்றது. மத்திய ஆட்சியாளர்கள் எஜமானர்களைப் போலவும், மாநிலங்களை அடிமைகள் போலவும் நினைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

ஆர்எஸ்எஸ் – பாஜக அமைப்பினர் பாசிச ஹிட்லர், முசோலினியை பின்பற்றக்கூடியவர்களாக செயல்படு கின்றனர். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஆகும். நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் பாஜக ஆட்சியாளர்கள் மக்களை திசை திருப்ப பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கடைப்பிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றி வருகின்றனர். மக்களை சாதிரீதியாக, குறிப்பாக மதரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். முன்பெல்லாம் தொழிலாளர்கள், விவசாயிகள் தனித்தனியாகப் போராடுவார்கள். ஆனால் தற்போது நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த தொழிலாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் ஆகிய மூன்று பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்து சக்திமிக்கப் போராட்டத்தில் இறங்குவதைப் பார்க்கிறோம்.

எங்கும் ஒரே முழக்கம்… மோடி அரசே வெளியேறு!

இப்போது எங்கும் புதிய முழக்கம் எழுகிறது. அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்கள் மட்டுமின்றி ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசபக்தர்கள் இந்த ஆட்சி யாளர்களைப் பார்த்து, நீங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று முழங்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மைக் காலத்தில் பாரதிய ஜனதா கட்சி பல தளங்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இத்தகைய நிலையில்தான், 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்; நம் மக்களுக்கு ஆதரவாக, பொருளாதாரம் மற்றும் சமூக, அயல்துறை கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் இந்த அறை கூவலை விடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை மிக அதிகபட்சமாகத் திரட்டுவது; பாஜக மற்றும் அதன் கூட்டணியை தோற்கடித்து ஆட்சியை விட்டு வெளியேற்றுவது; பாஜக அல்லாத மதச்சார்பற்ற அரசு அமையச் செய்வது, இடதுசாரிகளின் பலத்தை நாடாளுமன்றத்தில் அதிகரிப்பது என்று கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய அளவில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட நிலை இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அதிகபட்சமாக அணிதிரட்டும்விதத்தில், பொருத்தமான முறையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி, பாஜகவையும் அதன் அரசியல் கூட்டாளிகளையும் தோற்கடிப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவுடன், அதன் சொற்படி செயல்படும் அதிமுகவையும் வீழ்த்துவோம் என்றும் மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேற்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு தமிழக மக்கள், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அதன்மூலம் தமிழக மக்கள் தங்கள் வரலாற்றுக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார்.

அவரது ஆங்கில உரையை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழில் மொழி பெயர்த்தார்.இக்கூட்டத்துக்கு கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், க.கனகராஜ், என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தீக்கதிர் எண்மப் பதிப்பின் பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், கோவைப் பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சாவித்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக பெரும்திரளானோர் இந்த முப்பெரும் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் நன்றி கூறினார்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...