ரம்ஜான் வாழ்த்துக்கள் கூட சொல்ல வேண்டாம்! இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்!

இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது…

மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு மாற்றியமைத்திருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்கு இசுலாமியர்கள்தான் காரணம் என்ற பிரச்சார தீயில் ஊடகங்கள் எண்ணெய் வார்த்தன.

அவர்கள் இசுலாமியர்களை ‘கொரோனா குண்டுகள்’ என்றும் தேசத்தின் எதிரிகள் என்றும் தொலைக்காட்சிகளில் சித்தரிக்க ஆரம்பித்தார்கள். இசுலாமியர் வெறுப்பை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இப்படி தலைப்பாகவே வைத்திருந்தது “கொரோனா வந்துருச்சு, மௌலானா கொண்டு வந்தாரு”.

இசுலாமியர் வெறுப்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் ‘கொரோனா ஜிகாத்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதாவது, இந்த தொற்றுநோய் தாலிபன்களின் குற்றம் போலவும் இந்துக்களுக்கு எதிரான இசுலாமியர்களின் சதி என்பது போலவும் பயன்படுத்தினார்கள்.

இசுலாமியர்கள் மீதான ஊடகங்களின் இந்தக் குற்றசாட்டுக்களும் வலதுசாரி அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுக்களும் நாடு முழுவதுமுள்ள இசுலாமியர்களின் வாழ்க்கையை துயரமாக்கியது. இசுலாமியர்கள் தொடர்ச்சியாக இழிவுக்கும் துன்புறுத்தலுக்கும் சமூக புறக்கணிப்புக்கும் ஏன் கும்பல் படுகொலைகளுக்கும் கூட உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். ‘கொரோனாவை பரப்புவோர்கள்’ என்று அவர்கள் மீது முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

எனக்கு நேர்ந்த சமீபத்திய சம்பவம் இதற்கு ஒரு உதாரணம்.

ஏப்ரல் 16 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ மையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் கடுமையான காயம் பட்டிருப்பதாகவும் எனக்கு சொல்லப்பட்டது.

அந்த செய்தியைக் கேட்டவுடன் நான் உடனடியாக மருத்துவ மையத்திற்கு சென்றேன். அந்த மாணவன் மிக மோசமான நிலையில் இருந்தான். மருத்துவர் அந்த மாணவனை மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

கொஞ்சமும் தாமதிக்காமல் அந்த மாணவனுடன் ஆம்புலன்சில் நானும் சென்றேன். அங்கு சென்றபோது அவசர சிகிச்சைக்கான வார்டுகள் 3 மற்றும் 4 மூடப்பட்டிருந்தது. அந்த வார்டுகளில் கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் நடந்து கொண்டிருந்தது. அவசர நோயாளிகளை கவனிக்க எந்த மருத்துவரும் தயாராக இல்லை.

ஆயினும், சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு மருத்துவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், நான் சொன்னதை அவர் காது கொடுத்துக் கேட்டார். எச் பிளாக்கில் உள்ள வார்டு எண் 17 கண், மூக்கு, தொண்டை நோய்களின் சிகிச்சைக்கானது, அங்கு செல்லுங்கள் என்று கூறினார். நாங்கள் அங்கு சென்றபோது அதே கட்டிடத்தில் உள்ள 22வது வார்டுக்கு வழிகாட்டப்பட்டோம்.

இங்கிருந்துதான் பாரபட்சம் தொடங்கியது. எங்களையும் மருத்துவ அட்டையிலிருந்து எங்கள் பெயரையும் பார்த்த மருத்துவர் இழிசொற்களாலும் வசவுகளாலும் நோயாளிகளிடம் முரட்டுத்தனமாக பேச ஆரம்பித்தார். நோயாளிகளிடம் “ஊரடங்கு காலத்தில் ஏன் சைக்கிள் ஓட்டுகிறாய்? ஊரடங்குனா என்னன்னு உனக்கு தெரியுமா? சரி அனுபவி” என்று கூறினார்.

மருத்துவரின் இந்த நடவடிக்கையை கவனித்த நான் அவருடன் பேச ஆரம்பித்தேன். அந்த மருத்துவர் என் மீது விழுந்து பிராண்ட ஆரம்பித்தார். என்னை அந்த அறையை விட்டு வெளியே போகுமாறு விரட்டினார். நானும் வெளியேறிவிட்டேன். நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவை இருந்தபோதும் எங்களை ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்த பிறகு எம்.எல்.சி (Medico Legal Case) பதிவுக்குச் செல்லுமாறு அனுப்பினார். ஆனால், அது தேவையற்றது.

ஆனாலும், அதை எம்.எல்.சியாக பதிவு செய்ய நாங்கள் சென்றோம். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் எம்.எல்.சி பணிகள் நடைபெற்றிருந்த அந்த அறை மூடப்பட்டிருந்தது. அதற்காக நாங்கள் மூன்று மணி நேரம் காத்திருந்தோம்.

வேறு வழியின்றி காது, மூக்கு, தொண்டை துறைக்கே மீண்டும் சென்று எங்களுக்கு உதவும்படி வேண்டிக் கொண்டோம். அந்த மருத்துவரும் ஒத்துக் கொண்டார். ஆனால், முகத்திலுள்ள காயத்தை சுத்தம் செய்யாமலேயே அவசர அவசரமாக தையல் போட்டுவிட்டு எடத்த காலி பண்ணுங்க வேகமா என்று சொல்லிவிட்டார்.

இந்த நடவடிக்கை படிப்பறிவு இல்லாத இசுலாமியர்கள் இத்தகைய மருத்துவப் பணியாளர்களிடம் எப்படி பேச முடியும் என்று எண்ணத் தோன்றியது.

இதை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மருத்துவர்கள் எப்போதுமே பாரபட்சம் காட்டுவதில்லை, தவறாக நடப்பதில்லை, அப்படி ஏதாவது நடைபெற்றால் அது நோயாளிகளாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு விதிவிலக்குகள் இருக்கிறது என்பதைச் சொல்வதற்காக.

இரண்டாவது, இதுபோன்ற நிகழ்வுகள் மருத்துவத்துறையின் மீது எப்படி நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றன என்பதைச் சொல்வதற்காக.

தப்ளிகி ஜமாத்தை முன்வைத்து இசுலாமியர்கள்தான் இந்தத் தொற்றைப் பரப்புகிறார்கள் என்று தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டப்படுவது, இசுலாமியர்கள் குறிப்பாக, ஏழை இசுலாமியர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றி சொல்வதை காலதாமதம் செய்கிறது.

அவர்கள் தாங்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவோம், பொது இடத்தில் பாரபட்சத்துக்கு உள்ளாவோம் என்ற பயத்தால் பீடிக்கப்படுவார்கள். அதன் காரணமாக மருத்துவமனைக்குச் சென்று இதையெல்லாம் சந்திப்பதை விட வீட்டிலேயே செத்துவிடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

ரிஸ்வான் என்பவர் வீட்டிலிருந்து வெளியே வந்து அத்தியாவசிப் பொருட்களை வாங்கச் செல்லும்போது காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பயத்தின் காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக, வீட்டில் வைத்தே வைத்தியம் பார்த்தார்கள். அவருடைய நிலைமை மோசமான பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டார்.

https://bit.ly/3eWq8Yv

இசுலாமியர்கள் மத்தியிலுள்ள இந்த பயமும், நம்பிக்கைக் குறைவும் நிர்வாகத்தினருடன் மோதலை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிடும். நிர்வாகத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.

இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் மொரதாபாத்தில் மருத்துவ ஊழியர்களுக்கும் அங்குள்ள மக்களுக்குமான மோதல் இதைத்தான் வெளிப்படுத்துகிறது.

எனவே, இசுலாமியர் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையைக் கட்டமைப்பது தவிர்க்க முடியாதது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை நாம் வலுப்படுத்த வேண்டுமென்றால் இது மிகவும் அவசியமானது.

இசுலாமியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றால் அனைத்து பொது இடங்களிலும் மற்றவர்களுக்கு சமமாக அவர்கள் நடத்தப்படுவதன் மூலமே சாத்தியமாகும்.

ஒரு கர்ப்பிணிப் பெண் அவள் இசுலாமியர் என்பதற்காக ராஜஸ்தானிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்படும்போது அந்த நம்பிக்கையை எப்படி உருவாக்க முடியும்? அந்தப் பெண் பிறகு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும்போது பிரசவித்தார். அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

https://bit.ly/3bCmgcN

இதேபோன்ற மற்றொரு சமீபத்திய நிகழ்வு ரத்தப்போக்கோடு ஜாம்ஷெட்பூர் மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக வந்த இசுலாமிய கர்ப்பிணிப் பெண் அந்த ரத்தத்தை சுத்தம் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்டிருக்கிறார். ஏனென்றால் அந்த ரத்தம் கொரோனா வைரசை பரப்பி விடுமாம். இதிலும் பின்னர் அந்தக் குழந்தை இறந்துபோனது.

https://bit.ly/2VzO0Jz

முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் அந்தப் பெண், “என் மதத்தை முன்வைத்து நான் இழிவுப்படுத்தப்பட்டேன். சிந்திய ரத்தங்களை என்னையே சுத்தம் செய்யச் சொன்னார்கள். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. ஏனென்றால் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. என்னை அவர்கள் செருப்பால் அடித்தார்கள். நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். வேறொரு மருத்துவமனைக்கு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகுதான் என் குழந்தை வயிற்றிக்குள்ளேயே இறந்திருந்தது தெரிந்தது”.

இந்த நிகழ்வுகளெல்லாம் சிகிச்சைகளில் கூட இந்துக்களும் இசுலாமியர்களும் சமமாக நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இடம் தரப்படாததாலும், சிகிச்சை மறுக்கப்பட்டதாலும் இரண்டு கர்ப்பிணிகள் தங்களின் குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். அதோடு கூட இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையையும் இழந்திருக்கிறார்கள்.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அதே பெண்கள் எதிர்காலத்திலும் அந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தால் அவர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்தக் காரணத்திற்காகவே இமாச்சல பிரதேசத்தில் உனாவைச் சார்ந்த தில்சத் என்கிற 37 வயது இசுலாமியப் பெண் தற்கொலை செய்து கொண்டாள். அவளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகும் அந்தப் பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டவள் என்று சமூக புறக்கணிப்பு செய்யப்பட்டதால் தூக்கிலிட்டுக் கொண்டு இறந்துபோனாள்.

https://bit.ly/3bEPY11

இதேபோன்று, தில்லியில் பவனா என்ற இடத்தில் 22 வயது இசுலாமிய இளைஞர் கொரோனா வைரசை பரப்ப திட்டமிடுகிறான் என்று சந்தேகிக்கப்பட்டு அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான்.

https://bit.ly/2YgFEIP

என்டி டீவியில் வந்த ஒரு செய்தியின் படி உத்தரப்பிரதேசத்தில் மகோபா மாவட்டத்தைச் சார்ந்த 5 காய்கறி வியாபாரிகள் அதிகாரிகளுக்கு தாங்கள் இசுலாமியர்கள் என்பதால் ஒரு கும்பலால் அவமானப்படுத்தப்பட்டதோடு, காய்கறிகள் விற்பதற்கும் தடுக்கப்பட்டிருக்கிறோம் என்று புகார் அளித்துள்ளனர். அவர்களில் ஒரு வியாபாரி அந்தக் கும்பல் இந்த வியாபாரிகள் அனைவரும் தப்ளிகி ஜமாத் உறுப்பினர் என்றும் கொரோனா வைரசை பரப்புவோர் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

https://bit.ly/2S7guIJ

சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நேரமிது. இசுலாமியர்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள நம்பிக்கையில் இடைவெளி ஏற்பட்டதோடு அது விரிவடைந்து கொண்டிருக்கிறது. இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்துவதோடு இசுலாமியர்களின் வாழ்க்கையையும் சிரமமாக்கியுள்ளது.

இந்த நோய்ப் பேரிடர் பல வழிகளில் பாகுபாடற்ற தேசியத்திற்கு ஒரு சோதனையாக அமைந்திருக்கிறது. ஆனால், ஒரு தேசமாக இந்த சோதனையில் நாம் தோற்றுப் போயிருக்கிறோம்.

அபித் ஃபஹீம்
ஆராய்ச்சி மாணவர்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

தமிழில்: க.கனகராஜ்,

மாநில செயற்குழு உறுப்பினர்

ஆங்கிலத்தில் படிக்க : https://bit.ly/3eSegGT

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...