ரயில்வேதனியார்மயம்: சுய சார்பு அல்ல, சுய அடிமைநிலைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கண்டன

இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை, அதிலும் குறிப்பாக பாசஞ்சர் ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கமுயூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ரயில்வேயை தனியாருக்குத் தாரை வார்த்திட, அதிலும் குறிப்பாக பாசஞ்சர் ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு நடைபெறுவது, சுதந்திர இந்தியாவில் இதுதான் முதன்முறை. நூறாண்டுகளுக்கும் மேலாக நன்குக் கட்டமைக்கப்பட்ட ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக இப்போது திறந்து விடப்படுகிறது.

நம் நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் இந்திய ரயில்வே என்பது மிகவும் முக்கியமான வலைப்பின்னலாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இது, கோடானுகோடி மக்களுக்கு பொதுப் போக்குவரத்தை அளித்து வருகிறது,. நாட்டின் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் ரயில்வேயைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. இப்போது இதனைத் தனியாரிடம் தாரை வார்ப்பது, இந்தியாவின் சுய சார்பு பொருளாதாரத்தின் அடிப்படையையே அரித்து வீழ்த்திவிடும்.

இவ்வாறு தனியாரிடம் தாரை வார்ப்பது வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் என்று கூறப்படுவதற்கு முற்றிலும் முரணான முறையில், இத்தகைய செயல்கள் பெரிய அளவில் வேலை இழப்புகளையே கொண்டு வரும், இந்திய ரயில்வேயில் பணியாற்றிவரும் கோடானுகோடி ஊழியர்களை பாதுகாப்பற்றவர்களாக மாற்றிவிடும்.

பல நாடுகள் இவ்வாறு ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைத்தன் மூலம் அவை மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்படுத்தியதையும் அதனால் அந்த நாட்டின் அரசுகள் கடும் அடிவாங்கிய அனுபவங்களிலிருந்தும், மத்திய அரசோ, பிரதமர் மோடியோ படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்திய ரயில்வே ஒரு பொதுப் போக்குவரத்து சேவையாகும். இது ஒன்றும் லாபம் ஈட்டும் தொழில்பிரிவு அல்ல. இத்தகைய குணாம்சத்தை அரித்து வீழ்த்திட அனுமதிக்க முடியாது.

நாடும் நாட்டு மக்களும் கோவிட்-19 கொரோனா வைஸ் தொற்றுக்கு எதிராகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு இந்த முடிவினை எடுத்திருக்கிறது. உலக அளவிலும், நம் நாட்டிலும், சுகாதார வசதிகளைத் தனியாரிடம் தாரை வார்த்ததனால் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது என்பது எந்த அளவிற்குப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை நன்றாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுகாதாரம், கல்வி, பொதுப் போக்குவரத்து என்பவை அனைத்தும் பொது சேவைப் பணிகளாகும். இவற்றை வலுப்படுத்த வேண்டுமேயொழிய, இவற்றைத் தனியாரிடம் தாரை வார்ப்பதன் மூலம் பலவீனப்படுத்தக்கூடாது.

இந்த முடிவை மத்திய அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

சிஐடியு கண்டனம்

இதேபோன்று சிஐடியு-வும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் ரயில்வேயில் பாசஞ்சர் ரயில்களைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்வதற்காக ஐந்து உள்நாட்டு மற்றும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். மோடி அரசாங்கத்தின் இத்தேச விரோத நடவடிக்கையை சிஐடியு கண்டிக்கிறது. இவ்வாறு தேசவிரோதக் கொள்கையை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது திகைக்க வைக்கிறது.

இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கப்படுமை 109 அதிவேக ரயில்களில் ஓட்டுநரும், கார்டுகளும் மட்டுமே ரயில்வே  ஊழியர்கள். இதர ஊழியர்கள் அனைவரும் தனியார் கட்டுப்பாட்டில் வருகிறார்கள். இவர்கள்தான் பயணிகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு எடுத்துக்கொள்ள இருக்கிறார்கள்.

தனியாரின் நோக்கம், கொள்ளை லாபம் ஈட்டுவது என்பதேயாகும். இவர்கள் மக்களுக்குக் குறைந்த போக்குவரத்துக் கட்டணத்தில் டிக்கெட்டுகளை அளிக்க மாட்டார்கள். எனவே ரயில் கட்டணங்கள் மக்களால் வாங்க முடியாத அளவிற்கு உயர்த்தப்படும்.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்திட ஒட்டுமொத்த தொழிற் சங்க இயக்கமும், தொழிலாளர் வர்க்கமும் முன்வர வேண்டும் என்று சிஐடியு அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு தபன்சென் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Check Also

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அக்.20ல் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி ...