ரயில்வே கட்டண உயர்வுகளை திரும்பப் பெறுக!

மத்திய அரசு ரூ. 12 ஆயிரம் கோடிக்கான ரயில்வே கட்டண உயர்வுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் புறநகர் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிக்கக் கூடியதாகும். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த ரயில்வே கட்டண உயர்வு மக்களின் துயரங்களை மேலும் அதிகரிக்க கூடியதாகும். அதுவும் ரயில்வே பட்ஜெட் ஒரு மாத காலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த கட்டண உயர்வுகள் ஏற்கத்தக்கதல்ல என்பதோடு நாடாளுமன்றத்தையே அவமதிக்கக் கூடியதுமாகும்.

ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி இரண்டாம் வகுப்பு தவிர மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ரயில்வே கட்டண உயர்வுகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்தக் கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது. மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள ரயில்வே கட்டண உயர்வு தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வலுவான கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சி அணிகள் முழுவதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
 
மத்திய அரசிற்கு இப்பிரச்சனைகளில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அனைத்துப் பகுதி மக்களையும், ஜனநாயக இயக்கங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply