ரயில் பாதைகளை ஒட்டியுள்ள சேரிகளை நீக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தடுத்திடுக மத்திய அமைச்சருக்கு பிருந்தா காரத் கடிதம்

ரயில் பாதைகளுக்கு அருகேயுள்ள சேரிகளை நீக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பிருந்தா காரத் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 31 அன்று ரயில்வே பாதைகளை ஒட்டியிருக்கின்ற சேரிப் பகுதிகளை மூன்று மாதங்களுக்குள் அகற்றிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்ற ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் அவ்வாறு சேரியில் உள்ள மக்களை அகற்ற வேண்டுமானால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என்று கட்டளைப் பிறப்பித்திருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சேரி வாழ் மக்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு எதுவும் போடாததால், உச்சநீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அறியாதிருக்கலாம். இல்லையேல் எப்படி உச்சநீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வாயம் இத்தகைய மனிதாபிமானமற்ற தீர்ப்பை வழங்கியிருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வதே சிரமமாக இருக்கிறது. அதுவும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கக்கூடிய சூழ்நிலையில் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், மத்திய ரயில்வே அமைச்சர்தான், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு முன்பு, இதுபோன்று ரயில் பாதைக்கு அருகில் வாழும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளையும் புனர்வாழ்வையும் அளித்திட அதிகாரம் படைத்தவர். நீதிமன்றத்தின் முன் அளித்துள்ள மதிப்பீடுகளின்படி, சுமார் 48 ஆயிரம் சேர்வாழ் குடும்பங்களை அப்புறப்படுத்திட வேண்டும். இதன் பொருள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரையுள்ள மக்களை அப்புறப்படுத்தியாக வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், இது சுகாதாரரீதியான பேராபத்தையும் விளைவித்திடும். இப்போது தில்லியில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் இரண்டாவது அலைபோல் பீடித்துக்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த சமயத்தில் ஏழை மக்களை அப்புறப்படுத்த ரயில்வே முன்வருவது மிகவும் பொறுப்பற்ற நடவடிக்கையாக அமைந்துவிடும். இரண்டாவதாக, சமூக முடக்கம் அமலில் உள்ளதால் சேரிவாழ் மக்கள் தங்கள் வருமானங்களை ஈட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் அற்ப வருமானத்தில் அவர்கள் ஏற்கனவே மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் இவர்களை வீடற்றவர்களாக மாற்றுவது மனசாட்சியற்ற செயலாகும். பல இடங்களில் குடிசை மாற்றுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். அதுபோல் இவர்களுக்காக எந்தத் திட்டமும் இல்லை.

எனவே, இந்தப்பிரச்சனையில் நீங்கள் உடனடியாகத் தலையிட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளோ, இழப்பீடுகளோ இல்லாமல், அவர்களை அப்புறப்படுத்துவதைத் தடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் சேரிகளில் வாழ்வது என்பது அவர்களின் விருப்பம் அல்ல. இதற்குக் காரணம் மத்திய ஆட்சிகளின் கொள்கைகள்தான் விளிம்புநிலை மக்களை அவ்வாறு சேரிகளில் வாழத் தள்ளி இருக்கின்றன. அனைவருக்கும் வீடு வழங்குவது என்பது கருணையல்ல, மாறாக அது அடிப்படை மனித உரிமையாகும்.

இவ்வாறு பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...