ராம் மோகன் ராவுக்கு மீண்டும் பணி வழங்கியதன் மர்மம் என்ன?

ராம் மோகன் ராவுக்கு மீண்டும்

பணி வழங்கியதன் மர்மம் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

 

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ராம் மோகன் ராவ் மீண்டும் அரசுப் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்திய அரசியல் வரலாற்றிலேயே மாநில அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும். சோதனை நடந்த போது முதல்வர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பெருமளவிலான பணமும், ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த பின்னணியில்தான் ராம் மோகன் ராவ் தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்த மர்மங்கள் இன்னமும் நீடிக்கிறது. மணல் மாபியா கும்பலின் தலைவரான சேகர் ரெட்டிக்கும், ராம் மோகன் ராவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சேகர் ரெட்டி கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஆளுங்கட்சியில் உயர் பொறுப்பில் இருந்தவர்களில் ஒப்புதல் இல்லாமல் மணல் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை.

ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை குறித்து  எவ்வித விசாரணையும் நடைபெறாத நிலையில் அவருக்கு மீண்டும் பதவி வழங்கியதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கான நிர்பந்தம் எங்கிருந்து வந்தது?

இதுகுறித்தெல்லாம் தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலைபாடு

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 26.4.2021 அன்று காலை 9.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை ...